வாழ்க்கைக்கு ஏற்ற
வழக்கறிஞரைப் புறந்தந்த
வற்றி முதிர்ந்த மூதாட்டிக்கு
இறுதி மரியாதை செலுத்த
வடக்கலூர் போனவுடன் தான்
சட்டென ஞாபகம் வந்தது
கால நெய் தீரத்தீர
உயிர்ச்சுடர் ஏந்திய
கலிய பெருமாளின் தந்தை
இருந்த வீடு

அவரிடம் தொலைபேசி
அப்பா இருந்த வீட்டில்
இப்போது யார் இருக்கிறார்
யாருமில்லை
பூட்டிக் கிடக்கிறது என்றார்

ஒற்றை மகனால்
மணக்க மணக்க
நகரத்திலிருந்து
ஞாயிற்றுக் கிழமை தோறும்
கறிசோறு நுழைந்த
வீட்டினுள் இன்று
எந்த வாசமும்
நுழைவதில்லை

அப்பா படுத்து எழுந்த
கயிற்றுக் கட்டில்
காலத்தின் கைரேகைகளாய்
தளர்ந்து சாம்பல் பூத்து
தொங்கிக் கிடக்கிறது

வள்ளியம்மா சொன்னார்
என் மகன் வீடு என்று
இராஜகுமாரி சொன்னார்
என் அண்ணன் வீடு என்று
அருகாமை வீட்டார்
சொல்லிக் கொள்கிற
உறவுப் பிடிப்பைத் தாண்டி
நினைவுகளால்
எப்போதும்
நீவி விடும் போல அந்த வீடு

ஆண் பெயர் கொண்ட
செயப்பிரகாசம் மூதாட்டி
சாப்பிட்டுவிட்டு போங்கய்யா
என்றார்

நீண்ட நாள்
சாப்பாட்டு வாசமே
உள்நுழையாது
காத்துக் கிடக்கிற
பூட்டுக் கண் விழித்திருந்த வீட்டின்
அருகிருந்து பார்த்த போது
விதை நெல்வாசம் அடித்தது
அந்த வீடு

- அகவி

Pin It