ஓய்வு நேரங்களில் 
அவளிடம் 
மாதாந்திர இதழொன்றோ 
அதோடு இணைந்து வரும் 
பக்தி மலரோ 
அல்லது 
சமையல்க் குறிப்புகளடங்கிய 
இலவச இணைப்போ 
மட்டுமே இருப்பதில்லை 
ஒரு மகளும் இருக்கிறாள்..... 

மகள் தேர்வெழுதும் 
நாட்களில் 
சிமெண்ட் திண்ணையும் 
அவள் வயதையொத்த 
அம்மாக்களுமே 
வகுப்பறையும் தோழிகளுமானார்கள்..... 

பீன்ஸ் கேரட் 
இரண்டும் அதிகமாய் 
வாங்கத் தோன்றுகிறது 
அவளுக்கு 
மகளின் உணவுக் கட்டுப்பாட்டில் 
கோதுமை ரவைப் பிரியாணி 
அலாதி... 

முதன்முதலாக அவளின் 
பிறந்தநாள் கொண்டாடும் 
வழக்கத்தை 
அன்னையர் தினத்திற்கே 
உரித்தாக்கி 
ப்ளாக்ஃபாரஸ்ட்டில் 
ரசித்தனர் மகள்கள்..... 

கணவன் வாங்கிக் கொடுக்கும் 
சேலைகளில் 
நல்ல நிறமோ , வேலைப்பாடுகளோ 
கவர்ந்திருப்பின் 
மகளைப் பெண்ணாக்கிவிடுகின்றாள்.... 

வெகுநாட்களாய்ப் புலம்பும் 
அவளது தேய்ந்த காலணி 
மட்டுமே அறியும் 
பாட்டாவில் அவசரத்திற்கு 
வாங்கி வீணான 
மகளின் காலணிக்கு 
விலை மதிப்பேயில்லையென.... 

நிரம்பிய கூட்டங்களில் 
எத்தனையோ முறை 
கடிகின்ற மகளைத் தான் 
குழந்தை மனமெனத் 
திண்டாடுவாள்..... 

ஏதோ ஒரு அதட்டலுக்கு 
ஓடிக் கொண்டேயிருக்கும் 
அவளிடம் 
அம்மாவைக் காணமுடிகிற போது 
அம்மாவின் பிரியங்களில் 
காதோர ஒற்றை ரோஜாவும் 
மணிச் சத்தங்கள் குலுங்கும் 
சில்வர் குடமும்
தீபாவளிக்குக் கடனில் வாங்கிய 
அமெரிக்கன் ஷார்ஜெட் புடவையும் 
திருமணமான புதிதில் 
ஒரு கொலுசும் 
தென்படும்போது மகளே பேசுகிறாள்..... 

- புலமி

Pin It