உழவர் வாழ வழியில் லாமல்
அழற்பட்டுத் தற்கொலை செய்து கொள்கிறார்
மற்ற மக்களும் வறுமையில் நொந்து
உற்ற நலன்கள் துய்க்கா திறக்கிறார்
பொறுக்க முடியாக் கொடுமைக்கும் மேலாய்
வறுத்துக் கொல்லும் புவிவெப்ப உயர்வு
உயிரினம் அழிக்கும் செய்தியைக் கூறினும்
துயிலெழா முதலியம் தன்னை ஒழித்து
சமதர்மம் சமைப்போம் வாரீர் மக்களே!

((சந்தைப் பொருளாதாரத்தின் கோரப் பிடியில்) வாழ வழியில்லாமல் உழவர்கள் அழுது வருந்தி தற்கொலை செய்து கொள்கிறார்கள். மற்ற மக்களும் வறுமையில் நொந்து (மனிதனாய்ப் பிறந்தவர்கள்) அனுபவிக்க வேண்டிய சுகங்கள் எதையும் அனுபவிக்காமல் இறந்து போகிறார்கள். இவை போன்ற பொறுக்க முடியாத கொடுமைகளுக்கும் மேலான கொடுமையாக, (இவ்வுலகில்) உயிரினங்களை அழிக்கப் புவி வெப்ப உயர்வு உருவெடுத்துள்ள செய்தியைக் கூறினாலும் (அதைத் தடுக்க வேண்டும் என்ற அக்கறையின்றி) உறங்கிக் கொண்டு இருக்கும் முதலாளித்துவத்தை ஒழித்து விட்டு (எல்லாவிதக் கொடுமைகளில் இருந்தும், ஆபத்துகளில் இருந்தும் உலகைக் காப்பாற்றும் ஆற்றல் படைத்த) சோஷலிச அமைப்பை ஏற்படுத்த மக்களே (திரண்டு) வாருங்கள்.

- இராமியா

Pin It