சின்னதாய்... சின்னச் சின்னதாய்த்
தூறிக் கொண்டிருந்த
துளிகள் ஒரு நாள்
என்னிடம்
கதைகள் சொல்லச் சொல்லிக்
கேட்டுக் கொண்டிருந்தது...
சின்னப் பாறையினடியில்
சிக்கியிருந்த செடியொன்றினை
நான்
வெளியெடுத்துவிட்ட கதையைச்
சொன்ன போது
ஆற்றங்கரை ஓரக் கூழாங்கல்
ஒன்றினடியில் சிதறியிருந்த
மணல் துகள்களைத்
தான் நனைத்துப் போன கதையை
அது சொன்னது...
வெள்ளைப் பனிக்
குவியல்களுக்கு நடுவே
என் மோதிரத்தை ஒளித்து வைத்து
நான் விளையாடிய
நாளொன்றினைச் சொன்னபோது
புல்லின் நுனி ஒன்றோடு
தான் உறைந்து போனதைச்
சொன்னது அது...
என் பிறந்தநாள் பரிசாக
என் வீட்டுக்கு வந்த ஒரு
பூனைக் குட்டிக் கதையை
நான் சொல்ல நினைத்தபோது
என்னை இடைமறித்து ,
முன்பொரு மழைநாளில் இவ்வழியே
தனியாக நடந்து சென்ற
மஞ்சள் பெண்ணொருத்தியின்
கன்னக்குழியைத் தான்
நனைத்த கதையை அது சொல்ல
அந்த மஞ்சள் பெண்
வேறு யாருமல்ல
நான் தான் என்று சொல்லிச்
சிரித்துக் கொண்டோம்...

- கிருத்திகா தாஸ்

Pin It