எதைக் கொடுத்தாலும் வியாபாரம் செய்வான்
கடவுள் பிரார்த்தனை ஆன்மீகம்
சிரிப்பு வெறுப்பு குரோதம் வஞ்சகம் வன்முறை
கலவரம் கொலைகள் மழை
வெயில் வறட்சி ஒலிக்கற்றைகள்
கள்ளக்காதல் நீதி சாதி சங்கம்
காதல் மறுப்பு சாதி மறுப்பு
ஒளிக்கற்றைகள் முதலிரவு
சாமியாரின் ராத்திரிகள் தாய்மொழி
எதையும் விற்று காசு பார்ப்பவன்
அவன் எதிரில் யாரும் செல்வதில்லை
அவன் வெளிநாட்டுப் பேய்களை
கூட்டி வந்து காசு சம்பாரித்தான்
உள்நாட்டுப் பேய்கள் கோபம் கொள்ள
அவைகளுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தான்
பேய் பிசாசுகள்
இல்லையென சொன்னதைப்பற்றி
அவனுக்கு கவலையில்லை
எதிர்ப்பு வருகிறபோது
எதிர்ப்பை காசாக்கும் வித்தையறிவான்
மக்கள் அவனை
பேரின்பத்தின் கடவுளென பேசிக்கொண்டனர்
அவனுக்கு ஒரே நோக்கமிருந்தது
சிந்திக்கும் மூளையை தின்பதுதான்
நிழல் மனிதர்களை நிறைய
உற்பத்தி செய்து வைத்திருந்தான்
தாய்மொழிப் பற்றுக்கொண்டவர்களை
பட்டிமன்றம் நடத்தி
வேடிக்கை காட்டினான்
பட்டிமன்ற நடிகர்கள் பெருகி
அவனுக்கு ரசிகர் மன்றம் வைத்தனர்
கல்யாண மண்டபங்கள்
இழவுவீடுகள் திருவிழாக்கள்
ஊர்வலங்கள் எதையும் வாங்கிக்கொள்ள
தனியாக ஒரு கவுன்டர் வைத்திருந்தான்
அவன் உடலெங்கும் பாக்கெட்டுகள்
அவன் உடலெங்கும் உதடுகள்
அவன் உடலெங்கும் கரங்கள்.
அவன் கார்பரேட் கடவுளாகி
பூஜைகள்
புனஸ்காரம் நடைமுறைக்கு வந்த பின்னும்
ஒவ்வொரு விடியலிலும்
தன் மலத்தை
தானே கழுவிக்கொள்கிறான்.

Pin It