அதிசய ஆச்சரியமாய் இன்று அந்த
ஆலமர மேடை பின்புறம் தென்படும்
சிறுவனை
ஜாக்கிரதையாய் அணுக வேண்டும்
நீங்கள்,

ஏனெனில் பாதியில் தடை ஏற்படுத்தியதற்காய்
அவன் கை விளையாட்டுக் கருவி அம்பொன்று
வேகமாய் பாய்ச்சப்படலாம்
உங்கள் மீது,

குளுகுளு வீட்டுச்சயன விலக்கு
சூழ்நிலையும்
அம்பினை மேலும் கூர் தீட்டலாம்,

இது போல் கற்குவியல் பின்னிருந்த ஒரு
சிறுவனிடம் தான் அன்றொருநாள்
என் வாழ்வின் சிறந்த போழ்துகளில்
பரந்து விரிந்த வான் சுற்றும்
காற்றாடி
வித்தை கற்றேன்

சித்திரை வெயிலையும்
ஐப்பசி மழையையும்
அலட்சியப்படுத்திய சிறார்
பருவமது,

வெக்கையையும் குளிர்ச்சியையும்
விரும்பி ஏற்கும் வெற்றுத்தோள்கள்
எம் வசமிருந்தன,

நுனி விரல் அழுத்தம் தவிர்த்து
வேறேதும் இல்லை,
இத்தலைமுறையில் ...

கோதும் விரல்களும்
தடவும் கைகளுமின்றி
ஆளரவமற்ற வீதிகளில்
புழுதி படிந்து கிடக்கிறது
என் பால்யம்

Pin It