sunrise 350

 விடிவதற்காகக் காத்திருக்கும் கதாபாத்திரத்தின் கண்முன்
பூக்களை உதிர்த்தவாறு காற்றில் ஆடுகின்றன மரக்கிளைகள்
எழுந்து நின்று சுற்றும் முற்றும் நோட்டம் விட்டவாறு
கவிந்திருந்த தெருப்புழுதியை உதறி விட்டுக்கொண்டே
இம்முறை மாற்றுப்பாதையில்
தன் பயணத்தைத் தொடர்கிறான் ஒரு வழிப்போக்கன்
காகங்களும் அணில்களும் தவிட்டுக் குருவிகளும்
அழிந்து வரும் சிட்டுகளுக்காக
ஒருநாழிகை அனுதாபம் சொரிந்துவிட்டு
தங்கள் தங்கள் மொழிகளில் விடியலை அறிவிக்கின்றன
இரவுகளின் மர்மங்கள் அவிழ்ந்து அம்பலமாகிப் போனது என்னும் கணக்காய்
பின்னிரவின் கைகளிலிருந்து விடுபட்ட பெருமிதத்துடன்
வீதிகளில் வழிந்தோடுகிறது கண்கூசும் காலை வெளிச்ச்ம்
திடீர் தட்பவெப்ப மாற்றம்போல் நிகழ்கிறது பகற்பொழுது
பொங்கல் பண்டிகைக்கு சுண்ணாம்பு பூசி புதுப்பிக்கப்பட்டதொரு
கிராமத்து சீமை ஓட்டு வீடுபோல ஒளிரும் தெருவில்
மற்றவர்களுக்கு நிகரானவனாக கம்பீரமாய் நடைபோடுகிறது
விடிவதற்காகக் காத்திருந்த அந்த கதாபாத்திரம்
வெய்யில் ஏறஏற மத்தியான வேளை
உடலைத் தீய்க்கும் வெப்பம் பட்டு கரைந்தொழுகுகிறது
பகல் கனவாய் ஆகிப்போன அக்கதாப்பாத்திரத்தின் பொழுது
அந்தியைச் சாப்பிட்டு முன்னிரவைக் குடித்து
இளைப்பாறப்போகும் ஒரு கறுப்பு இராட்சத மிருகமென உலகின்மீது கவிகிறது இரவு
இராஜாப்பாட்டை ஒப்பனை உரிந்து
அரிதாரம் கழுவப்பட்டவனிடம் வெளிப்படும் வறியவன் போல்
ஒரு பீடி வலிக்கத் துவங்குகிறது விடிவதற்காகக் காத்திருந்த அந்த கதாபாத்திரம்.

- வெ.வெங்கடாசலம்

Pin It