உன் ஆலாபனையின்
அந்தங்கள்
என்னைத் தேடுவதாக சொல்கிறாய்...
நான் வியாபித்திராத வர்ண மெட்டில்
நீ என்னை தேடித்திரிவது
என் பிழையன்று ..

உன் சங்கதிகள்
மிகச்சரியாய் பொருந்துபடியான
ஆரோகணமும் இல்லை
நான்
அவரோகணமும் இல்லை
யாதொரு ராகத்தின் சாயலற்ற
வெற்றுக்கூச்சல்

ஏழு சுவரங்களுக்கும்
எனக்கும் சம்பந்தமில்லை
நான் வாசிப்பதெல்லாமே
தப்புத்தாளங்கள் என்றான பின்
எனக்கேன் செவிமடுக்கிறாய் ?

உன் சொல்லாட்சியின்
செங்கோல்
இசையின் சுவையற்ற
என் அரங்கில்
விஸ்தரிக்க வேண்டாம்

லயமும் சுவரமும் அற்ற
ஒப்பாரியாகவே நான் இருந்துவிட்டு போகிறேன்
தூற்றுதல் விடுத்து
உன் இசைக்குறிப்புகளை
வேறொரு கீர்த்தனையில் ஏற்று

- க.உதயகுமார்

Pin It