வினைஞர் வென்று சமதர்ம அரசை
முனைந்து அமைத்திடின் நலம்பல உளவே
சந்தை மூட்டும் போர்கள் தவிர்ந்து
சிந்தை முழுதும் அமைதி நிலவும்
உற்பத்திக் கருவிகள் பொதுவில் வருவதால்
நற்பலி யாகும் வேலை யின்மையும்
கல்வி யுடனே மருத்துவம் தானும்
எல்லா மக்களும் தடையின்றிப் பெறுவர்
இத்தனைச் சிறப்புகள் கொண்ட அமைப்பை
எத்தர்கள் தாமே வீழ்த்த நினைக்கையில்
நேர்வழி தன்னில் முடியா தாதலின்
கூர்மிகு வஞ்சத்தில் சேர்ந்திடு கிறாரே

(தொழிலாளர்கள் முயன்று (தங்கள் போராட்டத்தில்) வென்று சோஷலிச அரசை அமைத்தால் (மக்களுக்குப்) பல நன்மைகள் உள்ளன. (இப்போதைய) சந்தை விதிகள் (நாடுகளுக்கு இடையில்) மூட்டும் போர்கள் தவிர்ந்து, (உலகத்தில் சமாதானம் நிலவும் என்பதால்) மனம் அமைதியாக இருக்கும். உற்பத்திக் கருவிகள் பொதுவுடைமையாக இருக்குமாதலால் (அனைவருக்கும் வேலை கிடைத்து) வேலை இல்லாத் திண்டாட்டம் (என்னும் கொடுமைகள்) காவு கொடுக்கப்படும் நற்செயல்கள் நிகழும். கல்வியும் மருத்துவமும் மக்கள் அனைவருக்கும் எவ்விதத் தடையும் இன்றி எளிதாகக் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட (சோஷலிச) அமைப்பை எத்தர்கள் வீழ்த்த நினைக்கும் போது, அது நேர்வழியில் முடியாது என்பதால் கூர்மையான வஞ்சக வழியில் சென்று விடுகிறார்கள்)

- இராமியா

Pin It