அடையாளங்களை

மாற்றிக் கொண்டே இருக்கிறது

எனது முகம்...

ஒவ்வொரு நாளும்.

 

பகலிலிருந்து இரவு நோக்கி

நகரும் அதன் பசப்புகளில்..

ஒளித்துவைத்திருக்கிறேன்

எனது தவறுகளையும்...

சில நம்பிக்கைகளையும் ...

யாரும் அறியாமல்

நான் மட்டும் இரசித்தபடி.

 

பகல் முகத்தில்...

எனது “தோல்” என

ஒட்டிக்கிடக்கிறது...

அவமானங்கள் சுமக்கும் ஆடை.

இரைப்பையில்...

பொரி நசுங்க உதவும்

அவமானத்தின் ஆடையை

தவிர்க்க இயலாது ஒருபோதும்

என்னால்.

நீண்ட கானலென சூரியனைச்

சுற்றும் பகலில்...

நான் காயங்களோடு வாழ்கிறேன்.

தவறுகளை விருப்பமாய்ப் பதிக்கக்

காத்திருக்கிறேன்...

பிள்ளை சுமக்கும் மந்தியின் வயிறென

இந்த அந்தி சரிவதற்கு.

 

அறை அளவே இருக்கும் இருளில்...

என்னைப் புதுப்பித்துக் கொள்கிறேன்...

ஒரு நம்பிக்கையின் பகலை

இரவில் விதைத்தபடி.

Pin It