கவிஞனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டது
அவனெழுதிய கவிதையொன்று
அந்தக் கவிதையை அவன் மதுப்பாட்டிலை திறந்து
கிளாஸில் ஊற்றிய நொடிக்கும்
ஊறுகாயாக காத்திருந்த நிமிடத்திற்கும் இடையில் எழுதியது
அவன் நிறைய எழுதியிருக்கிறான்.
நதியைப்பற்றி
நகரத் தொடங்கிய மலையைப் பற்றி
நாகலிங்க மரங்களைப் பற்றி
எந்தக் கவிதையும் அவன் இறுதி ஊர்வலத்திற்கு வரவில்லை
இந்தக் கவிதை மட்டும் வந்திருந்தது
உயிர் நண்பனை இழந்ததைப் போல துயருற்றிருந்தது
ஊர்வலத்தில் வந்த கவிதை
அவன் பிணம் இறக்கப்படுவதற்கு முன்
குழியிலிறங்கி அவனை தாங்கிக் கொண்டது
யாருக்கும் தெரியாது ஒரு கவிதை அவனோடு புதைந்து போனது
கல்லறை வழியாக செல்கிறவர்கள் பேசிக் கொண்டார்கள்
கவிஞனின் கல்லறையிலிருந்து
மூச்சுவிடும் சத்தம் கேட்பதாக
கவிஞன் உயிரோடிருப்பதாக
யாருக்கும் தெரியாது
அது அவன் கவிதையின் மூச்சென்று.
Pin It