நல்லார் ஆயினும் அல்லார் ஆயினும்
செல்வம் தனக்கு இலாபம் ஈட்டும்
யாரையும் ஏற்கும் பெருமுத லாளியே
சீரை நாடா உந்தன் போக்கால்
வேலை யில்லாப் படையைப் படைத்தாய்
சூலை நோய்போல் பசியைக் கொடுத்தாய்
நெருக்கடி தன்னில் போரைத் திணித்தாய்
தருக்கல் யாவையும் பொறுத்தனர் மக்கள்
உந்தன் உயிராம் சந்தை விதிகள்
உந்தித் தள்ளும் உற்பத்தி முறையால்
தோன்றிய வெப்பம் அழிக்கும் ஆற்றலாய்
ஊன்றி நிற்பதை அறிவாய் முதலியே
நிந்தன் கொடுமையை மக்கள் பொறுக்கலாம்
சந்தை விதிகளை இயற்கை பொறுக்குமோ?

(மூலதனத்திற்கு இலாபத்தை ஈட்டித் தருபவர்கள் நல்லவர்களோ கெட்டவர்களோ யாராக இருந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்ளும் பெரு முதலாளியே! சிறப்பான ஒழுக்கத்தை நாடாத உன்னுடைய போக்கினால் (சமுதாயத்தில்) வேலையில்லாப் பட்டாளத்தைப் படைத்தாய். (அதனால் மக்களுக்கு) சூலை நோய் போல் பசியைக் (வறுமையைக்) கொடுத்தாய். (பொருளாதார) நெருக்கடி தோன்றிய போது (மக்கள் மீது) போரைத் திணித்தாய். (இது போன்ற உன்) ஆணவத்தை எல்லாம் மக்கள் பொறுத்துக் கொண்டனர். முதலாளியே! நீ உயிராகக் கொண்டு இருக்கும் சந்தை விதிகள் கட்டாயப்படுத்தும் உற்பத்தி முறையால் தோன்றி இருக்கும் புவி வெப்ப உயர்வு, (இவ்வுலகை) அழிக்கும் ஆற்றலாக ஊன்றி நிற்பதை அறிவாயாக. நீ செய்த, செய்கின்ற கொடுமைகளை மக்கள் பொறுத்துக் கொள்ளலாம். (ஆனால் அழிவை ஏற்படுத்தும்) சந்தை விதிகளை இயற்கை பொறுத்துக் கொள்ளுமா?)

- இராமியா

Pin It