நீயே உழைப்பால் பசிப்பிணி அகற்றிபும்
நலங்கள் பலவும் துய்த்தோன் மனிதனே
இதுவோ உன்னுடை விருப்பம் போல
செதுக்கிய தாலே வளங்குறை ஞாலம்
சந்தை முறைமை தொடர்வத னாலே
எந்திரத் தனமாய் உயர்ந்திடும் வெப்பம்
புவியை மீளா அழிவுப் பாதையில்
சேர்த்திடும் முன்னால் தடுத்து நிறுத்த
சமதர்ம முறையை ஏற்றிடு வாயே
கேட்டனை யாயின், நீ வேட்டது செய்ம்மே!

(இந்த உலகில் (அனைவரது) பசிப் பிணியையும் அகற்றும் அளவிற்கு உணவு உற்பத்தியைப் பெருக்கியும், மேலும் பிற நலங்கள் துய்ப்பதற்கும் பொருட்களை உற்பத்தி செய்யும் வல்லமை படைத்த மனித குலத்தைச் சேர்ந்தவன் நீ. இதுவோ உன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப, தன்னைச் செதுக்கிக் கொண்டதால் வளம் குறைந்து கொண்டு வரும் பூமி. (புவி வெப்ப உயர்வை அதிகப் படுத்தும் பொருட்களையே உற்பத்தி செய்ய வற்புறுத்தும்) சந்தை முறைமை தொடர்வதனால் எந்திரத்தனமாக உயர்ந்திடும் வெப்பம் இப்புவியை மீள முடியாத அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் முன்னாலேயே அதைத் தடுத்து நிறுத்த, சமதர்ம முறையை ஏற்றிடுவாய். நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டாய். நீ உன் விருப்பப்படி செய்வாயாக.
 
- இராமியா

Pin It