மாரி பொய்ப்பின் வயலும் பொய்த்தது
வாரி வழங்கும் வளமை குறைந்தது
தொழிலில் புரட்சியால் நீரைத் தேக்கும்
வழியும் தெரிய வளமை நிலைத்தது
அறிவியல் வளர பொறிகள் விரிய
குறைவிலாப் பொருளும் நம்முடைத் தாயின
எண்ணிலா நலன்கள் சேர்ந்திட்டாலும்
உண்மையில் அவற்றைத் துய்க்கா வண்ணம்
இணைப்பாய் வந்த சந்தை முறைக்குப்
பிணையாய் இருப்பது செய்நன்றி யாகா
பயிருடன் விளையும் களையை நீக்கலே
உயரனை வாழ்வின் மெய்யறிவாகும்

(மழை பொய்த்துப் போனால் வயலும் பொய்த்தது. (அதனால் வயல் நமக்கு) வாரி வழங்கும் வளமை குன்றியது. (ஆனால்) தொழிற் புரட்சியின் பின்பு (அணை கட்டி) நீரைத் தேக்கும் அறிவியல் வளர்ந்த பின் (நீர் மேலாண்மையினால் வேளாண்) வளமை நிலைத்து உள்ளது. அறிவியல் வளர வளர (நாம் பயன் படுத்தும்) இயந்திரங்களும் பெருகி, குறைவில்லாத படியாகப் பொருட்கள் (உற்பத்தி செய்யப்பட்டு) மனித குலத்திற்கு உரியதாயின. (இவ்வாறு தொழிற் புரட்சியானது) எண்ணற்ற நலன்களைக் கொண்டு வந்து இருந்தாலும், அவற்றை எல்லாம் துய்க்க முடியாதபடி, சந்தைப் பொருளாதார முறை அதன் இணைப்பாய் வந்துள்ளது. (மனித குலத்திற்கு மிகுந்த நன்மையைச் சேர்க்கும் விதமாக உற்பத்தி முறையில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்து இருந்தாலும் உண்மையில் அவற்றை அனுபவிக்க முடியாதபடி செய்துள்ள) இச் சந்தை முறைக்கு விசுவாசமாக இருப்பது செய்நன்றி ஆகாது. பயிருடன் விளையும் களையை நீக்குவது போல, (தொழிற் புரட்சியுடன் விளைந்த) சந்தை முறையை ஒழித்துக் கட்டுவதே உயிரினும் மேலான வாழ்க்கையின் தத்துவமாகும்.

- இராமியா

Pin It