ஈர்பத்தாண்டுகள் ஒன்றாய் நாமிருந்தோம்
வீட்டுக் கூரையின் ஓட்டைகள் வழியே
உத்தரவின்றி கதிரொளி நுழைகையில்
எம் நான்கு விழிகளும் ஒன்றாயே குவிந்தன
மழைநாட்களில் ஒழுகல் பரவாமல்
நாமிருவரும் சேர்ந்தே பாத்திரங்களை நிறைத்தோம்

உன் வியர்வையின் விலைக்கு
அரிசியும் தேங்காயும் பெரும்பாடாயினும்,
மரவள்ளி, கஞ்சி, சம்பலும் சோறுமென
மகிழ்வோடு எல்லா நாளும் உண்டு கழித்தோம்

செறிவாகி, ஐதாகி,
ஐதாகி, செறிவாகி கரைந்து கலந்ததில்
அழகியவிரு குஞ்சுகளைப் பொறித்தோம்
இன்பம் மட்டும்தான் எல்லா நாளுமென
இறுமாந்திருந்தோம்

தசாப்தங்கள் பலவாய்
விழுங்கும் விழியோடு தவமிருக்கும்
வேடனின் அம்புக்கொரு நாள் இலக்காவோமென
எண்ணியும் பாராமல் திளைத்திருந்தோம்

கூரையின் விட்டம் குறியானதுமே
இறக்கைகள் சிதைந்தோம்
இன்னுமொரு கூடு எமக்கமையுமென
உறுதியுரைத்து தேற்றினாய் தளராத நெஞ்சுடன்

தனித்தனிக் கூடுகளில் குலாவிப் பழகிய நாம்
வெளிகளில் கூட்டமாக்கப்பட்டோம்
செறிவென்பதே இல்லாமலாகி
ஐது மட்டுமே நமக்கென்றானது

சுற்றிலும் வேடர்கள் துரத்த
அஞ்சியஞ்சி ஓடினோம்,
அடுத்த கணமென்பதே அவநம்பிக்கையாக
சலிப்பும் விரக்தியும் விஞ்சியிருந்ததெம்மை

அது கடைசித் தருணம்
வேடன் வெல்வான் அன்றில் நாம்
கூரிய அம்பொன்று உன்னொரு காலை கிழித்திருந்தது
குருதி வழிய, சதைகள் சிதைந்து தொங்க
நொண்டியாய் பின்தொடர்கிறாய் நீ
குஞ்சுகளைக் கவ்வி முன்னோடும் என் பின்னால்

பிணக்குவியலில் தடுக்கிவிழுந்தெழுந்து
இறுகிய விழிகளை உன் பக்கம் திருப்புகிறேன்
கழுத்திலிருந்து குருதி வழிய வருகிறாய் நீ
உன் தலை கொய்யப்பட்டிருக்க,
முண்டமென பலரும் பதறி வெருண்டனருனைக் கண்டு

ஓடிவந்தணைப்பதற்குள் வீழ்ந்தாய் களத்தில் நீ
திரும்பியும் பாராமல் குஞ்சுகளை கவ்வியடி ஓடினேன் நான்
உன் தலைக்கு நிகழ்ந்ததுபோலதான்
வென்றது யாரென்றும் விளங்கவில்லை எனக்கு
களத்தில் வீழ்ந்தவுண்ணை விட்டுவந்தது மட்டுமே
உயிருள்ள எனக்குள்
குருதியாய் சொட்டுகிறது இன்னும்!!!

Pin It