1
பூவனமொன்றில் பறந்து திரிந்த தேன்சிட்டோன்று
பயணமாகிறது அடுக்ககங்களின் ஆரண்யத்துக்குள்...
இசையும் கீதமுமாய் இழைந்தப் பொழுதுகள் வாய்க்குமோ இனி?
இரைச்சலும் புழுதியும் பழக வேணுமினி..
வேகங்களைக் கூட்டத் தேவையிருப் பாதங்களில் சிறகுகள்
கலைமகள் அலைமகள் கடைக்கண் பார்வைக்குத்
துணை நிற்க வேண்டுமே மாதங்கி நிதம்பசுதனி!
மெல்லிசைக்கருவிகளைத் துறந்த கரங்களில்
மகுடியும் வாளும்
பட்டினப்பிரவேசமினிப் பயமில்லை
ஜெயமுண்டு மகளே !!!
 
2
நல்ல்ல்ல நாள் இன்று
நடைமேடையில் இல்லை
வெண்துகில் மூடிய சடலப்படுக்கை
3
மிக அவசரமசரமாகப் புலர்கிறது
மாநகரர்களின் புலரி
 
விழிகளைத் திறக்கவியலாத்
துயில் சுமையழுத்த
அதட்டி எழுப்புகின்றன கடிகாரமுட்கள்
 
கூந்தல் ஈரம் முகரோமம்
காலணிப்பளபளப்பு மாதக்குருதி
ம்ஹுஉம்
நேரமிருப்பதில்லை எதற்குமே!
பெண்டுலத்தின் உதை வாங்கிய காலைகளில்
 
அண்மையின் ஈரமுத்தச்சுவையோ
சேய்மையின் கவிதை ருசியோ
பிரியம் பூசிய நட்பின் அழைப்போ
பிரக்ஞை ஏதுமின்றி
உள்செல்லும் உணவு சுவையறியாமல்
 
வாகனங்கள் வாண்டுகள் ஒத்துழைக்காத
காலைகள் சாபம் நிறைந்தவை
 
யார்மீதும் மோதாமல் சச்சரவு ஏதுமின்றி
பிதுங்கும் பயணங்களில் செருகி
அலுவல் நுழையும் நேரம்
"நல்ல காலை" முகமன்னோடு வரவேற்கும்
புன்னகைத் ததும்பும் குரலின் மீது
பாய்கிறார்கள் மாநகரர்கள்
வெறிப்பிடித்த  நாய் என........
 
- அன்பாதவன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It