தயவுசெய்து தூக்கிலிடுங்கள்
உடனே...
தாமதிக்காமல்....
தூக்குத்தண்டனை சாலச்சிறந்தது.

எல்லோரையும்
எல்லோரையும்
எல்லோரையுமே...
ஒருவர் பின் ஒருவராக...

ஒருவனை தூக்கிலிடுவதென்பது
அவனுக்கு வழங்கப்படுகிற
குறைந்தபட்ச கருணை;
உடனடி நிவாரணம்.
மேலும் அதுவே
அவனுக்கான
இறுதிவிடுதலைச் சாத்தியம்

ஒருவனைத் தூக்கிலிடுவதை
யார் துவக்கி வைத்தது
என்பது தேவையற்றது.
ஆனால்
அது நிறுத்தக்கூடாதது.
ஆகவே தொடர்ந்து தூக்கிலிடுங்கள்.

காத்திரமான
கயிறுகள்
கிடைக்காமற்போகையிலோ
இரும்பு லீவரை இழுக்கும் பணிக்கு
எவரும் முன்வராமல் போகையிலோ
தூக்கிலிடுவதை நிறுத்துதல்
பற்றி யோசித்துக்கொள்ளலாம்.
இப்போதைக்கு
தூக்கிலிடுதல் தொடர்ந்து நடந்தேறட்டும்.

ஒரு கொடிய தண்டனை
என்று அதனை
ஆட்சேபிக்கிறவர்களை
என்னிடம் வரச்சொல்லுங்கள்.
எடுத்துரைக்கிறேன்.
அது ஒரு தனிமனிதனின் மீது
அரசாங்கம் காட்டும்
அளவற்ற தனிப்பெருங்கருணை என்பதை.

நிறுத்தாமல் தூக்கிலிடுங்கள்.
பிண உற்பத்திசாலைக்கு
இன்னொரு பெயர்
தேசம்
என்று அழுத்தந்திருத்தமாய்
கல்லறைவாசகம்
எழுதப்படுவதற்கு
தேவை குருதியல்ல.
தூக்கிலிடப்படுகிறவனின்
கடைசித்துளிக் கண்ணீர் மட்டுமே.

தயவுசெய்து தூக்கிலிடுங்கள்.
எல்லாம் அமைதியாக
இருக்கின்றன.
இப்போதைய
ஒரே தீர்வு
தூக்கிலிடுவது தான்.

தூக்கிலிடப்பட்ட பிரேதத்தை
விடுதலை செய்வதன் மூலமாய்
அரசாங்கமொன்றின்
பேரன்பு
தூக்கிலிடப்படுகிறவனின்
குடும்பத்தினருக்கு
மட்டும் புரிகிறது.
மிக நன்றாக.

ஆம்.
அது தான்
தீர்வு.
அது
மட்டும் தான்.

நிராகரிக்கப்பட்ட
கருணை மனுக்கள்
வெறும் காகிதங்கள்.
அவற்றைக்
கழிவறைக்காகிதங்களாய்
உபயோகித்துக்கொள்ளட்டும்
அரசபுனிதர்கள்.

எல்லாம் சரியாகிவிடும்.
தூக்கிலிடுங்கள்.
உடனே...
உடனே...
உடனே...

Pin It