1.குவிந்த விரல்களுக்குள் படபடக்கும் சிறுவண்ணாத்தி

குவிந்த விரல்களூடே
குறுக்கும் நெடுக்குமாய் சிவந்த ரேகைகள் வழிகிற
உள்ளங்கைச் சிறைக்குள்
படபடக்குஞ் சிறுவண்ணாத்தி புலன்களுக்குள்
குவியமிலா நெடுங்கனவுச் சிதறுகை
கரைந்திடுங் கணங்களில்
 வர்ணங்களின் பிசுபிசுப்பும்
படபடப்பின் அமர்முடுகலும்
ஒருசேர உணர்த்திய விபரீதங்களின் நடுக்கங்களோடு
சடாரென விரியும் பிஞ்சுவிரல்களே வரைந்திடுமோ
விண்ணளவுக்குமான அதன்  விடுதலையை.

2.பிழைபிழையான இனங்காணல்

பிழையான அவதானங்களும்
பிழையான கருதுகோளுமாய்
நிகழ்ந்தேறிய சோதனை முடிவது
துர்மணமாய்
குடுவைதனைச் சுற்றிச் சுழன்றதில்
ஆய்வறை தாண்டியே
அடுத்தடுத்த அறைகளுமே மூச்சுத் திணறுகையில்தான்
மெல்லப் புரிதலுறுகிறேன்.....
இன்றளவும் மிகச்சரியென இறுமாந்திருந்த
என் பிழைபிழையான இனங்காணல்தனை.

3.உன்னிரு மின்வரிகள்

கமழும் பூக்கூடையாய் பாசத்தை மட்டுமே ஏந்தி வருமென்
 ஆயிரங்கேள்விகளுக்கோர் ஒற்றைப் பதிலாய்…..
வானம் பத்திரப்படுத்தும் அபூர்வ மின்னலென…..
இருந்து நின்று எப்போதாவது வந்துசேரும்
விளிப்பு முடிப்பற்ற உன்னிரு  மின்வரிகள்.
பரிவு பந்தமெலாஞ் சீவிச்சீவிக் கழித்தபடி தனித்திருக்குமவை
சுமாராய் உன்போலான போதுமென்ன
வரிக்குறளை விரித்து விரித்து வாங்கிய பட்டமுண்டு
வரிக்கு முன்னும் பின்னுமாய் 
விட்டிருக்கும் நெடிய இடைவெளிகளை
முன்னம் நீ புழங்கிய சொல்லிட்டே நிரப்புவேன்.
அழகிய கவிதையாயது மேலெழுந்து மேகமாய் மிதக்கும்
சடசடத்துக் கீழிறங்கும்
அலையெழுப்பி அகவும்
கீச்சிட்டபடி ரீங்காரமிடும்
 தென்னம்பிஞ்சுகள் சொரித்தவாறே
பூவிதழை அசைத்தசைத்துப் பனியுதிர்க்கும்
பாகாய் பரவிப்பரவி உறைய வைக்கும்
ஆய்ந்து முடித்ததுதான் நியுற்றன் விதியெனில்
 ஒரு தென்னைமரமாய்
நெடிந்தோங்கியிருக்குமுன் பெருங் கர்வங்கூட
என்றாவதுடைந்து சிதறத்தானே கூடும்
ஓயாது தட்டுமென் வலிய அன்பின்முன்.

4.மைதானம்

உதைத்தலின்போதே நிகழ்ந்துவிடுகிறது
உதைபடுதலும்
வலிமையின் தீவிரங்களில்தானே
வலியின் உச்சங்கள்
ஒரு குண்டுமுனைக் காந்தம்போலே
வளரிளம் பருவத்தர் பார்வைதனை
வெகுஇயல்பாய் ஈர்த்துவிடுகின்றன விளையாடல்கள்
ஆனாலும்
வெறும்பாடநூலுக்காய்
எப்போதுமே அப்புலந்தனைச்
சிதைப்பதிலேயே குறியாயிருப்பர் தந்தையர்
காலங்காலமாய் களைக்காமலேயே
 ஓடி உதைத்து விளையாடுமிவர்
சொற்பந்துகளுக்குள் அதிர்ந்து நசுங்கி
மூச்சுத் திணறுகிற மைதானமாய்  அன்னையர்.

- கிண்ணியா எஸ்.பாயிஸா அலி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It