நேர்த்தியாக வரையப்பட்ட
எனது ஓவியம்
இரண்டு கிளைகளுக்கிடையில் தொங்குகிறது
அதன் அர்த்தத்தைப் புரிவதற்கு
நான் சில நேரங்களில் வெறுமையாகவிருக்கப் பழகவேண்டும்
அது போலவே யாரோ ஒருவரைப் பின் தொடரவும் பழகவேண்டும்

ஓவியக் கிளைகளில் வசித்த குருவிக்குஞ்சு
தாவி மண்ணில் விழுகிறது
அதன் நெஞ்சிலிருந்தும் அடிவயிற்றிலிருந்தும்
வழிந்தோடும் திரவம்
பெருநதியாகிப் பின் தன்னொளி பெருக்குகிறது

காலத்தை உண்டு செரிக்கப் பழகிய பின்னர்
அடுத்ததாகத் தான் தேர்ந்தெடுத்திருப்பது
வார்த்தைகளைக் கலவிக்கு விடுவதாகுமென
மகிழ்ந்து சொல்கிறது என் ஓவியம்

அதிக வருத்தமும் இல்லாமல் ஒரு முடிவும் இல்லாது
அநாமதேயமாக ஒரு சொல்
என்னிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறது

மலையளவு ஆசைகளை முன் நிறுத்தி
எல்லைகளுக்கு அப்பால் தொங்குகிறது ஓவியம்
அதன் அர்த்தத்தைப் புரிவதற்கு
சேற்றுடை தரித்து நெளித்து நெளித்து
சுவடுகள் தெரியாதபடி ஆடத்தொடங்குகிறேன்
அவ்வளவே.

- அ.கேதீஸ்வரன்

Pin It