உனக்கும் எனக்கும்
பொதுவானவர்கள் சிலர்.
முக்கியமாக
நாம் நண்பர்களாகுமுன்பே
நம் தோழமையான
அவனும் அவளும்.

அவளுடனே நீ எப்போதும் காட்சி தருவாய்.
அவன் அவ்வப்பொழுது என்னுடன் வருபவன்.

உன் கோபப்பொழிதல்களில்
அவள் உனக்குப்
பின்னணிக் குரல் தருவாள்.

என் விரக்தித் தருணங்களில்
அவன் என்னைச்
சமாதானம் செய்வான்.

நம் அனேக சந்திப்புகளில்
நீ அவளுடன் வருவாய்.

என்னுடன் அவன் வருவதற்கு
உன் முன்அனுமதி அவசியம்.

நீயும் அவளுமாய் வரும்வரையான
தாமதப் பொழுதுகளில்
அவனுடன் காத்திருப்பேன்.
நீங்கள் வந்ததுமாய்க்
கிளம்பிச் செல்வான் அவன்.

நமக்குச் சொந்தமான
கண்ணாடிவிரிசல்கள்
நாம் நிகழ்த்தியவை.

இன்னமும் நிகழ்ந்துவிடவில்லை
நம் அடுத்த சந்திப்பு.
எதிரெதிர் பேருந்து நிறுத்தங்களில்
நின்றுகொண்டிருக்கிறோம்
பொது மஞ்சள் கோட்டை
தாண்டிவரும் உத்தேசமின்றி.

இன்னும் ஒரு சிறுகுறிப்பு.:

நானின்று பார்த்தேன்
அவனும் அவளும்
இறுகக் கட்டிக்கொண்டு
இருசக்கர வாகனத்தில்
சென்றுகொண்டிருப்பதை.

Pin It