இன்றைய அரசின் தன்மை யறிய
முந்தைய அரசின் தன்மை யறிக
தனியாய் ஆய்ந்து உணர முற்படின்
பனியால் மூடிய பளிங்காய் மறைக்கும்
வர்க்கத்தை ஒடுக்க இன்னொரு வர்க்கம்
உறுதியாய் அமைக்கும் உறுப்பே அரசு
ஆண்டை ஆட்சியில் அடிமைகளுக்கும்
பண்ணை அரசில் உழுதூண் உழவர்க்கும்
பணியைச் செய்யவும் பணியாளர் தொடரவும்
தேவையின் அளவே கொடுத்துப் பிறபொருள்
யாவையும் கொண்ட ஆதிக்க வர்க்கம்
இம்முறை நிலைத்துத் தொடரும் பொருட்டு
வன்முறை அரசை மண்மீது திணித்தது
உருவம் மாறினும் குணந்தனில் மாறா
வெருவந்த அரசைக் கையில் கொண்ட
சந்தையைக் காக்கும் இன்றைய ஆண்டான்
இன்முகத் துடனே பொதுவெனக் கதைக்கிறான்
ஒருபாற் கோடும் வன்முறை அரசின்
கருப்பொருள் மாறாது யாவர் கையிலும்
உழைப்பவர் அரசும் வன்முறை அரசே
உழைக்கா தவரை ஒடுக்கவே செய்யுமே
 
(இன்றைய அரசின் தன்மையை அறிய வேண்டுமானால், முற்காலத்திய அரசுகளின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். (அஃதன்றி) தனியே ஆராய்ந்து பார்த்தால் பனி மூடிய கண்ணாடி (வழியே பார்க்கும் பொழுது)  மறைப்பது போல் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியாது. ஒரு வர்க்கத்தை ஒடுக்க இன்னொரு வர்க்கம் உறுதியாய் அமைக்கும் உறுப்பே அரசு ஆகும். ஆண்டைகள் ஆட்சியில் அடிமைகளுக்கும், நிலப் பிரபுக்களின் ஆட்சியில் உழவர்களுக்கும் தங்கள் வேலையைச் செய்வதற்கும், தொடர்ந்து (தலைமுறை தலைமுறையாக வேலை செய்வதற்கு) சந்ததிகளை உருவாக்குவதற்கும் தேவைப்படும் குறைந்த பட்ச பொருட்களை அளித்துவிட்டு மற்ற விளைபொருட்களைத் தாங்களே சுருட்டிக் கொண்ட ஆதிக்க வர்க்கம் (இச்சுரண்டல்) என்றும் நிலைத்திடும் பொருட்டு வன்முறை உறுப்பான அரசை மக்கள் மீது திணித்தது. (சமூக மாற்றத்தால்) உருவம் மாறினாலும் தன் குணத்தில் மாறாத, கொடுமை செய்யும் அரசைக் (அதிகாரத்தை) கையில் கொண்டுள்ள, சந்தைப் பொருளாதாரத்தைக் காக்கும் இன்றைய (முதலாளித்துவ) அரசு, இது (வர்க்கச் சார்புடையதல்ல) அனைவருக்கும் பொதுவானது என்று இன்முகத்துடன் பொய்யுரை சொல்கிறது. (ஆனால்) அரசு என்பது (என்றும்) ஒரு (வர்க்கச்) சார்புடையதே. அது உழைப்பவர் கைகளில் வரும் பொழுதும் வன்முறை உறுப்பாகத் தான் இருக்கும்; (அப்போது) உழைக்காத சோம்பேறிகளையும் (சுரண்டல் ஆட்சியை மீட்க முற்படுவோரையும்) கடுமையாக ஒடுக்கத் தான் செய்யும்.)
 
- இராமியா

Pin It