கதிரவன் கதிரின் வெப்பந் தன்னை
எதிராய் விரிக்கும் சிறுகுடை தடுக்கும்
எரிதழல் ஆகும் தரைதனில் இருந்து
இருதாள் களையும் காலணி காக்கும்
பகலவன் கனலோ வேனிலில் மட்டுமே
அகன்ற ஞாலத்தில் பிறநிலம் உளவே
சந்தையின் இயக்கம் நிலைத்திடும் பொருட்டு
வன்முறை அரசை நடத்திடும் காவலன்
தடங்கல் பொறாஅன் கடக்கவும் விடான்
முடக்கும் எல்லையில் மூக்கை நுழைப்பான்
இத்தகைக் காவலன் கதிர்நிகர் ஆகான்
எத்தனை முறையும் துணிந்து கூறலாம்
 
(கதிரவனின் கதிர் உமிழும் வெப்பத்தை, அதற்கு எதிராய்ச் சிறு குடையை விரிப்பதன் மூலம் தடுத்து விட முடியும். வெப்பமடைந்த தரை கால்களைச் சுடாமல் இருக்க, காலணிகளை அணிவதன் மூலம் பாதுகாத்துக் கொள்ள முடியும். சூரியனின் வெப்பம் வேனில் காலத்தில் மட்டுமே தகிக்கும். மேலும் வெப்பம் தகிக்காத குளிர் நாடுகளும் இப்பூமியில் உள்ளன. (ஆனால்) சந்தையின் இயக்கம் நிலையாக இருக்கும் பொருட்டு (உழைக்கும் மக்களுக்கு எதிரான) வன்முறை அரசை நடத்தி வரும் (முதலாளித்துவ) காவலன் (தன் செயல்களுக்குத்) தடங்கல் ஏற்படுவதைப் பொறுத்துக் கொள்ளமாட்டாதவன்;  (பழங்குடி மக்கள் போன்று) இவர்களின் தொடர்பே இன்றி வாழ்பவர்களையும் (தங்கள் வழியில்) கடந்து செல்ல விடமாட்டாதவன்; (முதலாளித்துவ அமைப்பு வேண்டாம் என்று முதலாளித்துவ அரசை முடக்கி) சோஷலிசப் பாதையில் செல்லும் நாடுகளின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைப்பவன். இத்தகைய காவலனுக்குக் கதிரவன் நிகராக மாட்டான் என்று எத்தனை தரமும் துணிந்து கூறலாம்)

Pin It