சூலை 15!
காமராசர் பிறந்த நாள்! இப்போது, கல்வி வளர்ச்சி நாள் என அறிவித்துப் பள்ளிகளில் போட்டி வைத்துப் பரிசளித்து விழாக் கொண்டாடச் செய்துள்ளார் கலைஞர். பேராயக் கட்சியோடு (காங்கிரசோடு) கூட்டணி வலுவாக்க இவ்விழா வெடுப்பு உதவும்.
இதே நாள் பிறந்த தமிழ்க்கடல் மறைமலையடிகள் இத்தமிழ் நாட்டரசால் நினைக்கப்படாததேன்? காமராசர்க்குக் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுவது போல், தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளார்க்குத் தனித்தமிழ் எழுச்சி நாள் கொண்டாடித் தனித்தமிழ் உணர்வையும் தனித்தமிழறிஞர்களையும் போற்றித் தமிழ் வளர்க்க வேண்டாவா?
மக்களோடும் தமிழறிஞர்களோடும் கூட்டணி வைக்கத் துடிக்கும் காலம் உருவாகும்போதுதான், இத்தமிழ் நாட்டில் தமிழும் தமிழறிஞர்களும் போற்றப்படும் நிலை உருவாகும்! அக்காலத்தை உருவாக்குவது நம் கடமையன்றோ?
தனித்தமிழ் இயக்கத் தந்தை
எப்போதும் தமிழ்த்தொண்டு, சிவத்தொண்டு செய்து வருவதாகக் கூறுவார் மறைமலையடிகளார். ஆயின் சிவத்தொண்டுக்கு முதன்மையளித்து வந்தார் என்பதே உண்மை. 1916இல் அந்த நிகழ்விற்குப் பின், தமிழ்த் தொண்டில் மறைமலையடியார்க்குக் கவனம் கூடியது எனலாம்.
ஒருநாள் மாலைப் பொழுதில் சுவாமி வேதாசலனார் தம் மகள் நீலாம்பிகையோடு தம் மாளிகைப் பூந்தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்தார். பண்ணிசைத்து வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் பாடலைப் பாடினார்.
“பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளை யைப்பெறு தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வந்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.”
இப்பாடலைப் பாடிமுடித்த வேதாசலனார், “நீலா! இப்பாடலில் தேகம் என்றொரு வடசொல் வந்துள்ளது. அவ்வொன்றனையும் நீக்கி, அவ்விடத்தில் யாக்கை என்னும் தமிழ்ச்சொல் அமையப் பெற்றிருக்குமானால், இச்செய்யுளின் ஓசையின்பம் எவ்வளவோ மேம்பட்டதாக இருந்திருக்கும். பிறமொழிச் சொற்கள் கலப்பதால் தமிழின் இனிமை குறைகின்றது. அன்றியும் நாளடைவில் தமிழில் கலந்த பிறமொழிச் சொற்கள் நிலைபெற்று, அச்சொற்களுக்கு நேரே வழங்கி வந்த நம் அருமைத் தமிழ்ச்சொற்கள் மறைந்துவிடுகின்றன” என்றார். அதனைக் கேட்ட நீலாம்பிகையார் “அப்படியானால், நாம் அயல்மொழிச் சொற்களை விலக்கித் தனித்தமிழையே பேச்சிலும் எழுத்திலும் போற்றுதல் வேண்டும். அவற்றுக்கான முயற்சிகளைக் கைவிடுதல் ஆகாது” என்றார். அப்படியே செய்வோம் என்று மகிழ்ந்தேற்றார் வேதாசலனார். இவ்வாறு இருவர் கூட்டால் எழுந்து தோன்றியது தனித்தமிழ் இயக்கம்! பேச்சு எழுத்து எல்லாம் தனித்தமிழிலேயே இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதன்படி ஒழுகலானார்.
காடம்பாடிச் சொக்கநாத - சின்னம்மை இணையர்க்குத் திருமணம் ஆகிப் பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு இல்லாததால், திருக்கழுக்குன்றம், வேதாசலனாரை ஒரு மண்டிலம் நோன்பிருந்து பெற்ற ஆண்மகவுக்கு அவ்விறையின் பெயரையே வைத்தனர். நாகை சொ. வேதாசலம் பிள்ளை என்றிருந்தவர், 1911இல் துறவறம் பெற்றபின் சுவாமி வேதாசலம் ஆனார். தனித்தமிழ்க் கொள்கையைக் கடைப்பிடிக்க முடிவெடுத்ததும், தன் பெயரை மறைமலை யடிகள் என்று மாற்றிக் கொண்டார். (வேதம் - மறை; அசலம் - மலை, சுவாமி - அடிகள்) பெற்றோர் வைத்த பெயர் என்றோ, இறைவனுக்கு நோன்பிருந்து பெற்று இறைவன் பெயர் சூட்டினர் என்றோ எண்ணாமல், கொள்கைக்காகத் தம் பெயரை மறைமலையடிகள் என்று மாற்றிக்கொண்ட மாண்பு எண்ணத்தக்கதாகும்.
மேலும், மறைமலையடிகளார் தம் இல்லத்தில் ஏற்படுத்திய சமரச சன்மார்க்க சங்கம் என்பதைப் பொது நிலைக் கழகம் எனவும், தாம் நடத்தி வந்த ஞானசாகரம் என்ற இதழின் பெயரை, அறிவுக்கடல் எனவும் மொழி மாற்றம் செய்தார். பின்னர் தாம் எழுதிய நூல்களைத் தனித்தமிழிலேயே எழுதினார். அத்துடன் நிற்கவில்லை. முன்னர்த் தாம் எழுதிய நூல்களை மறுபதிப்பாக வெளியிட்ட போது, அவற்றில் கலந்தெழுதியிருந்த பிறமொழிச் சொற்களை நீக்கிவிட்டு, அதற்கான தூய தமிழ்ச்சொற்களைப் பெய்து பதிப்பித்தார்.
பிறமொழிச் சொற்கள் கலப்பதால் மொழியின் இயல்பு கெடுவதையும், தமிழ்ச் சொற்கள் மறைந்தொழி வதையும், மொழித் தன்மை கெட்டு வேற்றுமொழியாகி விடும் கேட்டையும் விரிவாக எடுத்துரைத்துக் கட்டுரைகள் வரைந்தார். நீலாம்பிகையார் தனித்தமிழ்க் கட்டுரைகள் என்றே தனிநூலும் வரைந்துள்ளார். அவரே வடசொற்றமிழ் அகரவரிசை என்ற சிறந்த நூலும் தொகுத்து வெளியிட்டார்.
அடிகளாரின் அடிமனத்தில் இருந்த வித்து செடியாக வளர்ந்தது என்றே கூறல் வேண்டும். மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரும், மறைமலையடிகள் செடியாக வளர்த்த தனித்தமிழைத் தாம் மரமாக வளர்த்ததாகப் பெருமை கொள்வார்.
அடிகளார் தமிழில் பிறமொழி கலத்தல் எப்படி யிருக்கிறது என்பதை, “இயற்கைச் சொற்களால் அமைந்த தாகிய தமிழிற் பிற சொற்களைப் புகுத்துதல் எதுபோல் இருக்கிறது என்றால், எல்லா உறுப்புகளும் அமைந்த அழகியதோர் உடம்பில் உள்ள உறுப்புகளை வெட்டி எறிந்துவிட்டு வேறு மண்ணாலும் மரத்தாலும் செயற்கை யான அவ்வுறுப்புகள் போல் செய்து அவற்றை அதன்கண் ஒட்ட வைத்துப் பார்ப்பதற்கே ஒப்பாய் இருக்கின்றது” என்று எச்சரிக்கின்றார்.
ஒருமொழியில் பிறமொழிச் சொற்கள் கலப்பதால் மொழி வேற்றுமொழி ஆவதுடன், அம்மொழி பேசும் மக்களும் எப்படிச் சிதைந்து வேற்றின மக்களாய் மாறு கின்றனர் என்பதை விளக்குகிறார்: “ஒரு மொழி பல மொழியாவது அம்மொழிச் சொற்கள் திரிபடைதலினா லேயாம், ஒரு மக்கட் கூட்டத்தவராய் ஒற்றுமையும் வலிமையும் கொண்டு வாழ்ந்தவர், பல்வேறு மக்கட் பகுப்பினராய்ப் பிளவுபட்டு ஒற்றுமையும் வலிமையும் இழந்து வறுமைப்பட்டுத் தாழ்வது அவர் தமது பண்டை மொழிச் சொற்களைப் பலவாறு திரித்துப் பேசி அயன் மொழிச் சொற்களையும் எடுத்துச் சேர்த்து வழங்குதலினா லேயாம். பார்மின்! பண்டு ஒரு மொழி பேசிய ஒரு மக்கட் பெருங்கூட்டமாயிருந்த தமிழரே, இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளுவம், குடகம், தோடம், கோடம், கோண்டம், கொண்டம், ஓரம், இராசமாலம் முதலான பன்மொழி பேசும் பல்வகை மக்கட் பிரிவினர் ஆயினார். ஐயோ! 1911ஆம் ஆண்டு குடிக்கணக்கின்படி ஆறுகோடியே இருபது நூறாயிரமாகும். இத்துணைப் பெருந்தொகையினரான மக்கள் அனைவருந் தமக்குப் பழமையே உரியதான தமிழ்மொழி ஒன்றையே வழங்கி வந்தனராயின் அவர் எத்துணை ஒற்றுமையும் வலிமையும் நாகரிகமும் வாய்ந்தவராய் வாழலாம்! பழைய தமிழைப் பலவாறு சிதைத்துத் திரித்தமையாலும் வடசொற்களைக் கலந்துகொண்டமை யாலுமன்றோ இத்தனை பெரும் கூட்டத்தவரும் வெவ்வேறு சிறு கூட்டத்தவராய் ஒருவரோ டொருவர் அளவளாவுதற் கிடனின்று, வெவ்வேறினத்தவர் போல், வெவ்வேறு நாட்டவர்போல் நாட்கழிக்கின்றனர். இவர் எல்லாருந் தமிழாகிய பண்டை மொழியையே வழங்கிப் பிளவுபடாதிருந் தால், குமரி முதல் இமயம் வரையில் இற்றைக்குத் தமிழும் தமிழருமே பிறங்கி நிற்கும் பெரும்பேறு உளதா மன்றோ!” (முற்கால, பிற்காலத் தமிழ்ப் புலவோர், பக். 35, 36)
இந்திப் போராட்டம்
1937இல் இராசாசி சென்னை அரசின் முதல் அமைச்சரான போது 5, 6, 7ஆம் வகுப்புகளில் இந்தியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார். தமிழ் அறிஞர்களும், தமிழர் கட்சி, அமைப்பினரும் இந்தியை எதிர்த்துக் களத்தில் இறங்கினர்.
“அந்தோ! வடமொழி வந்து தமிழைப் பெரிதும் வீழச் செய்துவிட்டதே. அதை மேலும் குற்றுயிர் ஆக்கிவிட்டதே ஆங்கிலம்! இனி இந்தியும் வந்தால் தமிழ் ஒழிதல் திண்ணமே” என வருந்தியிருந்த மறைமலையடிகளார் தமிழ்நாட்டில் ஏற்பட்ட இந்தி எதிர்ப்புக் கண்டு வரவேற்றார். துறவு மேற்கொண்ட அடிகளார், பேரகராதிக் குழுவில் பணியாற்ற அழைத்தபோது, இறையடித் தொண்டைவிட்டு மாந்தர்க்குப் பணிபுரிதல் இயலாது என மறுத்துவிட்டார் (25-7-1926 நாட்குறிப்பு). கா. சுப்பிரமணியபிள்ளை, திராவிட ஆய்வு மைய இயக்குநர் பணிக்கு வேண்டுகோள் விடுக்க வலியுறுத்திய போதும், “இறைப் பணிக்கு என்னை ஆட்படுத்திக் கொண்ட பிறகு அவ்வேலைக்கு விண்ணப்பிக்க மாட்டேன். பதிவாளரே அப்பொறுப்பை அளித்தால் ஏற்பேன்” என்று விடை எழுதினார் (8-12-1926 நாட்குறிப்பு). 1932இல் பி.ஏ. ஆனர்சு தமிழ் வகுப்புக்குச் சிறப்புப் பேராசிரியராக அமர அழைத்தபோதும் நான் தனித்திருந்து ஆராய்ச்சி செய்து நூல்களை எழுதித் தமிழுக்கும் தமிழ் மக்கட்கும் நற்பணி செய்வதற்கு இடையூறாகும் என்று மறுத்துவிட்டவர் 1937இல் இந்திப் போராட்டத்தில் இறங்கித் தம்மை ஒப்படைத்துக் கொள்கிறார். 11-9-1937இல் திருவல்லிக்கேணிக் கடற்கரைக் கூட்டத்திலும் 4-10-1937 இல் கோகலே மண்டபத்தில் கூடிய மாநாட்டிலும்,
3-6-1938இல் சைதாப்பேட்டையில் கூடிய இந்தி எதிர்ப்புக் கூட்டத்திலும் தலைமையேற்று இந்தியைக் கட்டாயமாக்கு வதை எதிர்த்துப் போர்க்கோலம் பூண்டார்.
இந்தி ஆதரவாளர்களும் மறுத்துரைக்க முடியாத ஆணித்தரமான ஆராய்ச்சி முடிவாக, இந்திமொழி தமிழ்நாட்டில் நுழைவதைத் தடுத்திட வல்ல கருவியாக
மறைமலையடிகளார் இந்தி பொது மொழியா? என்னும் நூலை ஆக்கி அனைவருக்கும் பயன்பட அளித்தார்.
இந்திப் போராட்டத்தில் அடிகளாரின் மகனார் திருநாவுக்கரசு ஈரிடங்களில் மறியலில் ஈடுபட்டு ஆறு, ஆறு மாதச் சிறைத் தண்டனை பெற்று ஒரே காலத்தில் கொள்ளுமாறு சிறைப்பட்டார். அவர்தம் துணைவியார் ஞானாம்பிகை தம் ஐந்து மாதக் குழந்தையுடனும், மகன் மாணிக்கவாசகத்தின் துணைவியார் தம் மூன்று அகவைச் சிறுவனுடனும் சிறையுற்றனர். நீலாம்பிகையார் இந்தி எதிர்ப்பு மகளிர் மாநாட்டுத் தலைமையேற்று வெற்றி முழக்கஞ் செய்தார். எதிர்ப்பின் வலுவால் கட்டாய இந்தி 1940இல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
1948இல் மீண்டும் இந்தி கட்டாயக்கல்வி ஆகும் நிலை தோன்றியது. 17.7.1948இல் சென்னைத் தூயமேரி மன்றத்தில் கூடிய தமிழ் மாகாண இந்தி எதிர்ப்பு மாநாட்டில் திரு.வி.க., பெரியார் ஈ.வெ.இரா., ம.பொ.சி., அறிஞர் அண்ணா, நாரண துரைக்கண்ணன், பாவேந்தர் முதலியோருடன் பங்காற்றிக் கட்டாய இந்தியைக் கொணராதீர் என்று அடிகள் அறைகூவல் விடுத்தார். எக்கூட்டத்திற்கு வரவும் தொகையும் ஏந்துகளும் செய்யச் சொல்லிக் கேட்கும் அடிகள், இந்தி எதிர்ப்புக் கூட்டங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இன்றித் தாமாகக் கலந்து கொண்டது அவரது ஆர்வத்தையும் இந்தியை எதிர்த்துத் துரத்த வேண்டிய இன்றியமையாமையும் உணர்த்துகிறது.
திருவள்ளுவராண்டு
அடிகளார் செய்த அருஞ்செயல்களுள் திருவள்ளுவர் ஆண்டு கண்டமையும் ஒன்றாகும். தமிழர்களுக்கெனத் தனி ஆண்டுமுறை வேண்டுமென்றும், அவ்வாண்டு முறை, உலகம் ஏற்கும் ஒப்பற்ற பொதுமறை உருவாக்கிய திருவள்ளுவர் பெயரால் அமைதல் வேண்டும் என்றும் ஆராய்ந்தார் அடிகள். நல்ல தமிழ் அறிஞர்களோடு கூடி, திருவள்ளுவர் ஆண்டு கி.மு. 31 எனத் தீர்மானித்து அறிவித்தார். திருவள்ளுவர் திருநாள் விடை (வைகாசித்)த் திங்கள் பனை (அனுடம்) நாள் எனவும் திட்டம் செய்தார். இத்திட்டத்தை ஏற்றுத் திருவள்ளுவர் திருநாட் கழகம் என ஒரு கழகமே தோன்றியது. கி.பி., கி.மு. என்பதுபோல், தி.பி., தி.மு. என வழங்கும் நிலை உருவானது. கி.பி. ஆண்டுகளுடன் 31 ஆண்டுகளைக் கூட்ட தி.பி. ஆண்டு வரும்.
இவ்வாண்டு முறையைத் தமிழ்ப் பற்றாளர்களும் தமிழ் அமைப்புகளும் ஏற்றுப் போற்றினர். ஈழநாடு திருவள்ளுவர் ஆண்டை நடைமுறைக்கு ஏற்றது. நாள்காட்டி, நாட்குறிப்பு, கணியம் ஆகியவற்றிலும் மேற்கொண்டனர். தமிழ்நாட்டு அரசும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்று அறிவித்தது. இவ்வாண்டு முறையை மேலும் சீராக்கி மாதங்களையும் தமிழ் வழியதாக்கி நடைமுறைப்படுத்தச் செய்தவர் ஞா. தேவநேயப் பாவாணர் ஆவர். சுறவம் (தை) முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதையும் பாவாணர் பற்றாளர் தொடர்ந்து கடைப்பிடித்து வெளிப்படுத்தி வந்தனர். தமிழ்நாட்டரசு 2009இலிருந்து நடைமுறைப் படுத்த 2008இல் சட்டம் செய்தது.
குமுகாயப் பணிகள்
குமுகாயச் சீர்திருத்தப் பணிகளிலும் மறைமலை யடிகள் நாட்டம் செலுத்தினார். மடத்துத் தலைவர்கள் எல்லாக் குலத்தவர்க்கும் வேற்றுமையின்றிச் சமயச் சடங்குகள் கற்பிக்க முயற்சி செய்ய வேண்டும் என்றார். கைம்பெண்கள் தாலியறுத்தல், மொட்டையடித்தல், வெண்புடவை யுடுத்தல், பட்டினி போடல் முதலியவற்றை வெறுத்து நீக்குதல் வேண்டும் என்றும் கைம்பெண் மணம் முற்காலத்திலும் இருந்திருப்பதாலும் நூல்களில் ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பதாலும் அதனைச் செயல்முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும் என்றார். கலப்பு மணத்தையும் வரவேற்றார்.
தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழுக்குத் தலைமை தருதல் வேண்டும் என்றும் தமிழைத் தனிப் பாடமாக ‘பி.ஏ. ஆனர்சு’ வகுப்புக்கு ஏற்படுத்தல் வேண்டும் என்றும் பொதுநிலைக் கழகத்தில் தீர்மானம்வழி வலியுறுத்தியுள்ளார் அடிகளார்.
தம் மக்களுக்குத் தனித்தமிழ்த் திருமணமாக அடிகளாரே நிகழ்த்தினார். பிறருக்கும் செய்துவைத்தார். “வடமொழி மந்திரங்களைக் கூறும் புரோகிதன் வேண்டு மென்பது தேவையில்லை. பெற்றோர்களோ மற்றோர்களோ உடனிருந்து தமிழ்மொழியிலேயே வாழ்த்தி மணமுறையைச் செய்து முடித்தல் போதும். இதற்கு வடமொழி மந்திரம் - நம்மால் புரிந்துகொள்ள முடியாத மந்திரங்களைப் பயன்படுத்த விடுவது நல்லதல்ல” என்று தெளிவாக்கு கின்றார். இப்படி வடமொழிச் சொற்களை எல்லாவற்றிலும் நீக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
திருமணம் பற்றிய அடிகளாரின் சீர்திருத்தக் கருத்துகள்: சிறுபருவ மணத்தை ஒழித்தல் வேண்டும். பெண்மக்களுக்கு 20 ஆண்டும் ஆண்மக்களுக்கு 25 ஆண்டும் நிரம்புமுன் மணஞ்செய்தல் ஆகாது. ஆணையாவது பெண்ணையாவது விலைகொடுத்து வாங்கும் கொடிய பழக்கத்தை வேரோடு களைவதற்கு எல்லாரும் மடிகட்டி நிற்றல் வேண்டும்.
முப்பது ஆண்டுகட்கு உட்பட்ட பெண்கள் கணவனை இழந்துவிடுவார்களானால் அவர்களைத் திருமணம் செய்து கொடுத்தல் வேண்டும். ஆண்மக்களில் 40 ஆண்டுகட்கு மேற்பட்டவர்கள் இளம்பெண்களை மணம் செய்தல் ஆகாது. அவர் அகவையத்த கைம்பெண்ணையே மணம் செய்து கொள்ளும்படித் தூண்டுதல் வேண்டும்.
சாதிவேற்றுமை கூடாது என்னும் அடிகளார், “சாதிவேற்றுமைகளை உண்டாக்கிய மூலங்களை நன்கு ஆய்ந்து கண்டு பின்னர் அவ்வேற்றுமைகளை ஒழித்தலே இன்றியமையாது செயற்பாலது ஆகும்” என்கிறார். “தம்மோடு உடனிருந்து உணவுகொள்ளாதவர் வீட்டில் தாமும் உணவு எடுத்தல் ஆகாது” என்றும் கூறுகிறார். காதல் மணத்தை வரவேற்கும் அடிகளார், “சாதி வேற்றுமை என்னும் கொடிய தூக்குக் கயிறானது காதல் அன்பின் கழுத்தை இறுக்கிவிட்டது” என்கிறார்.
பாவாணர்க்குச் சான்றிதழ்
எவரையும் இந்த அளவிற்கு மறைமலையடிகள் நம்பி ஏற்றிப் போற்றியதில்லை. மொழிப்பேரறிஞர் ஞா. தேவநேயப்பாவாணர்க்கு மறைமலையடிகள் அளித்துள்ள சான்றிதழின் ஒரு பகுதி:
“...மொழியியல் ஆராய்ச்சித் துறை மிகவும் விரிவும் ஆழமும் உடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்துகொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினோம். அந்த நேரத்தில் திரு. தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றோம். அத்துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதியிருப் பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம். சொல் லாராய்ச்சித் துறையில் திரு. தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம்.”
நிறைவாக, நிறைமலையாம் மறைமலையடிகள் பற்றித் தேவநேயப்பாவாணர் மதிப்பீட்டுடன் முடிப்போம்:
“பனிமலையின் உயரம்; நீல ஆற்றின் நீளம்; அமைதிவாரியின் ஆழம் - ஆகியவை ஒருங்கே அமைந்தவர் மறைமலையடிகள்.” நாமும் தமிழை வாழவைத்து வாழ்வோமாக!