இன்றும் ஒரு பிணம் விழுந்துவிட்டது
அவர்கள் பேசுவதற்கு வசதியாக...

தொடர்ந்த
மரணத்தின் பேரபாயத்தை
நத்தையைப்போல சுமந்து
சவக்கிடங்கு திசை நோக்கி
நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

அவர்கள் பேசுகின்றனர்
இது நேர்ந்திருக்கக் கூடாதென...

புறாக்கூண்டு வீட்டுக்குள்
திணித்து ஊட்டப்படும்
நெடியேற்றும் வெளிச்சத்தில்
பூச்சுகளற்ற முகங்கள்
ஒளிபரப்பப்படுகிறது திரும்பத் திரும்ப
அவர்கள் பேசுவதற்கு வசதியாக.

இந்நேரம் அவர்கள் வந்துகொண்டிருக்கக் கூடும்.

இறந்தவனின் பொண்டாட்டி
குழந்தைகள்
வயது முதிர்ந்த அம்மா, அப்பா
தங்கச்சிகள்
யாராயினும் அழக்கூடாது
அவர்கள் இப்பொழுது நம்மோடிருக்கையில்

சவக்களை பீடித்த முகத்தின்
கண்ணீர்த் துளிகளை
துடைக்கும் கரங்கள் அவர்களுடையது;

உறுதியான சொற்களால்
நம்மை காப்பாற்றுவதற்கென்றே
இருப்பதாக நம்பவைக்கப்பட்டபின்
புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வேளையில்
நம் துயரத்தை பிரதிபலிக்கும் கண்களை
அம்முகத்தில் நீங்கள் பார்க்கக்கூடாது...

திரட்டப்பட்ட உணர்ச்சிகளின்
எல்லா வடிவங்களையும்
ஒற்றைக் காசோலையால் புனரமைத்தபடி
பின் அவர்கள்
வேறொரு பிணம் தேடி
செல்ல வேண்டும் ஆகையால்

நம் துயரத்தை பிரதிபலிக்கும் கண்களை
அம்முகத்தில் நீங்கள் பார்க்கக்கூடாது...

அவர்கள் பேசுவதற்கு வசதியாக...

Pin It