விழியோரத்தில் கசியும்
கண்ணீர்த் துளிகள்
கண்விழித்த பின்பு உணரும்
உறக்கத்தின் லயிப்பு
அந்தி நேரத்து ஆகாயத்தில்
விடைபெறும் சூரியன்
விடிகாலையில் விடைபெறும்
புல்லிதழ்களின் படிந்துள்ள
பனித்துளி
பள்ளி என்றவுடன் விடைபெறும்
குழந்தைகளின் குதூகலம்
கருக்கலில் விடைபெறும்
நட்சத்திரங்கள் கண்சிமிட்டி
எதையோ சொல்லத்துடிக்கும்
வானில் வர்ணஜாலம் காட்டும்
வானவில்
சற்று நேரத்தில் மறைந்தாலும்
கண்ணை விட்டு அகலாது
குடையில் விழும் மழைத்துளியும்
ஸ்பரிசத்தை நனைக்கும் மழைச்சாரலும்
விவரிக்க இயலா செய்தியை
செவிதனில் சொல்லிடும்
முதுமையடைந்த மனிதர்கள்
தங்களது ஞாபகச் சுவடுகளை
மீட்டியபடியே
வலம் வருவார்கள் வீதிகளில்
நாள்தோறும்
பேருந்து நிறுத்தமருகில் கையேந்தும்
பிச்சைக்காரன் தனது கனவுகளில்
யாருக்குப் பிச்சையிடுவான்.

Pin It