அன்பான குழந்தைகளே!

வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? இந்த மாதத்திலிருந்து உங்களுக்கென எட்டுப் பக்கங்களை ‘தலித் முரசு’ இதழில் ஒதுக்கிவிட்டோம். நாச்ங்களும் உங்களை மற்றவர்களைப்போல ஒதுக்கிவிட விரும்பவில்லை. இனி இந்தப் பக்கங்களில் உங்களுக்குப் பிடித்தமான கதைகள், பாடல்கள், ஓவியங்கள் என எல்லாம் உண்டு. நீங்கள் படித்துவிட்டு எங்களுக்கு எழுதுங்கள். படங்கள், பாடல்கள், கதைகள் ஆகியவற்றை அனுப்புங்கள்.

தேர்வுக் காலம் இது. பயப்படவேண்டாம்! நன்றாகப் படித்து எழுதுங்கள். உழைப்பிற்கு ஏற்ற பலன் எப்போதும் உண்டு. நாம் வெற்றி பெறுவோம். அதிக மதிப்பெண்ச்களை எடுப்போம் என்று நேர்மறையாகவே எப்போதும் நினைத்துக் கொள்ளுங்கள். நல்ல சிந்தனை, நல்ல பலனைத் தரும். இந்த காலங்களில் உங்களுக்கு வீணான மன அழுத்தம், படபடப்பு, நடுக்கம் எல்லாம் இருக்கும். அவை தேவையற்றவை. இயல்பாக இருங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். உங்களால் முடிந்த வரை முயற்சி செய்யுங்கள். முயற்சி என்பதுதான் மிகவும் முக்கியம்.

தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களே! நேரத்தை நிர்வகிப்பதைப் பற்றி ஸ்டீபன் காவே என்பவர் சொல்வதைக் கேளுங்கள்:

“வெற்றியடைவதற்கு குறுக்கு வழி எதுவும் கிடையாது. வெற்றிக்காக ஒருவர் கடுமையாக உழைக்க வேண்டும். ஒரு விவசாயி நிலத்தை உழுகிறார்; விதைக்கிறார்; உரமிடுகிறார்; நீர்ப்பாய்ச்சுகிறார், களைகளைப் பிடுங்குகிறார்; பூச்சிகளை விரட்டுகிறார், பிறகு தான் அறுவடை செய்கிறார்! இப்படி செய்து தான் அவர் ஓர் ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறை பலன் அடைகிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் எல்லா நிலைகளையும் கடந்து வர வேண்டும். அவர் இப்படி செய்யாமல், ஒரே வாரத்திலோ அல்லது பத்து நாட்களுக்குள்ளோ அறுவடை செய்து விடவேண்டும் என்று பேராசை கொள்ள முடியுமா?

ஒருவேளை இவர் மற்ற விவசாயிகளெல்லாம் வேலையில் மூழ்கி இருக்கும்போது கேளிக்கைகளில் மூழ்கி இருந்துவிட்டு, மற்றவருடைய நிலங்களில் வளர்ந்திருக்கும் பயிர்களைப் பார்த்தபிறகு விழித்துக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உடனே இரவு பகலாக உழுகிறார்; வேகவேகமாக விதைக்கிறார்; கழனி தளும்பத்தளும்ப நீரும் பாய்ச்சுகிறார்; தேவைக்கும் அதிகமாகவே உரமிடுகிறார். எல்லாம் முடிந்தபிறகு பத்து நாட்களிலேயே பயிர் வளர்ந்து விட வேண்டும் என்று காத்திருக்கிறார். அது நடக்குமா? ஒரு போதும் நடக்காது. பயிர் வளர குறுக்கு வழிகள் எதுவும் கிடையாது என்பது ஒரு விவசாயிக்குத் தெரியும்.

இதை தேர்வுகளோடு பொருத்திப் பார்ப்போம்! ஓர் ஆண்டு பாடங்கள் முழுவதையும் ஒரு வாரத்திலோ, பத்து நாட்களிலே படித்து விடலாம் என்று நினைத்தால் முடியுமா? இப்படிப் படித்து தேர்வில் முதல் மதிப்பெண்களை எடுத்துவிடலாம் என்று நம்பிக்கை கொள்ள முடியுமா? உடல் அழகனாக வேண்டும் என்று விரும்பும் ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் என தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் உடற்பயிற்சி செய்து ஒரு வாரத்திலேயே பலனை அடையலாம் என்றால் சாத்தியமாகுமா?

ஒருவர் ஒரு நாளுக்குரிய உணவை ஒரே வேளையில் சாப்பிட்டு விட முடியுமா? இதுபோலத்தான் ஓர் ஆண்டுக்கோ, ஒரு பருவகாலத்துக்கோ உரிய பாடங்களை ஒரே நேரத்தில் படித்து விட முடியாது. அப்பாடங்களை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் படித்து புலமை பெற வேண்டும், ஒவ்வொரு நாளும் சிலமணி நேரம் என்று.
Pin It