(சென்ற இதழில் வெளிவந்த பேபி காம்ப்ளே அவர்களின் பேட்டி இந்த இதழில் நிறைவடைகிறது)
நீங்கள் எப்படி எழுதத் தொடங்கினீர்கள்? கடையில் வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டே உங்களுக்கு எழுத எப்படி நேரம் கிடைத்தது?
அது ஒரு பெரிய கதை! நான் காலை ஒன்பது மணிக்கு கடைக்குச் சென்றுவிடுவேன். அதன் பிறகு எனது கணவர் பொருட்கள் வாங்க சந்தைக்குச் செல்வார். அவர் மீண்டும் மாலை நான்கு மணிக்கு தான் திரும்புவார். இந்த இடைப்பட்ட நேரத்தில் தான் நான் எழுதுவேன். நான் என்னுடைய சமூகத்தின் துயரங்களை வார்த்தைகளாக்கி எழுதத் தொடங்கினேன். அதன் பிறகு நூலகத்தில் சேர்ந்து புத்தகங்களை வாங்கி படிக்கத் தொடங்கினேன். எனக்கு சற்று நேரம் கிடைத்தாலும், தீவிரமாக குறிப்புகள் எடுக்கத் தொடங்கி விடுவேன். இவ்வாறு எண்ணற்ற நோட்டுப் புத்தகங்களை நிரப்பத் தொடங்கினேன். எழுதுவது கடினமான வேலைதான்!
நான் எழுதுவதை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பேன். பழைய செய்தித் தாள்களுக்கு அடியில் நான் எழுதியவற்றை மறைத்து வைப்பேன். யாரும் பார்க்க முடியாத இடத்தில், பயனற்ற பொருட்களைப் போட்டு வைக்கும் பரணில்தான் நான் எழுதிய தாள்களை ஒளித்து வைப்பேன்.
நீங்கள் ஏன் உங்கள் எழுத்துகளை மறைத்து வைத்தீர்கள்?
முதல் காரணம், என்னுடைய கணவர். அவர் நல்ல மனிதர்தான். இருப்பினும் அவர் காலத்தைச் சேர்ந்த பிற ஆண்களைப் போலவே அவரும் பெண்களை தாழ்வானவர்களாகவே பார்த்தார். நான் எழுதுவதை அவரால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. நான் அவரைக் கண்டு பயந்ததால் தான் என்னுடைய எழுத்துகளை மறைத்தேன்.
உங்களுக்கு முப்பது வயது இருக்கும் போது நீங்கள் எழுதத் தொடங்கினீர்கள். ஆனால், அதை வெளியிடுவதற்குள் இருபது ஆண்டுகள் கடந்து விட்டன. இருபது ஆண்டுகளாகவா உங்கள் எழுத்துகளை மறைத்து வந்தீர்கள்?
(புன்னகைக்கிறார்) ஆமாம்! நான் எதையெல்லாம் எழுதினேனோ அவற்றை எல்லாம் அழுக்குப் படிந்த மூலைகளில் மறைத்து வைத்திருந்தேன். நான் எழுதத் தொடங்கும்போது எனது மகன் பள்ளிக்கு செல்லத் தொடங்கியிருந்தான். என்னைப் பொருத்தவரை, அவன் மெத்தப்படித்த அறிவார்ந்த ஓர் ஆண். எனவே என்னுடைய மகனும், கணவரும் என்ன சொல்லுவார்களோ என்று பயந்தேன். என்னுடைய கணவர் என்னை எப்போதுமே ‘வெகுளிப் பெண்’ என்று தான் அழைப்பார்! அவர் ஏதாவது சொல்லிவிடுவாரோ என்பதால் பயந்தேன். எனவேதான் இருபதாண்டுகளாக என் எழுத்துகளை யார் கண்களுக்கும் தெரியாமல் மறைத்தேன்.
அதன்பிறகு மாக்சைன் பெர்ன்ட்சன் (Mazine Berntson) எங்கள் ஊரான பால்டனில் வந்து தங்கினார். அந்த அம்மையார், பட்டியல் சாதியினர் பற்றி ஆய்வு செய்யும் ஒரு சமூகவியலாளர். அவருக்கு சில புள்ளிவிவரங்கள் தேவைப்பட்டதால் என்னை வந்து பார்த்தார். அவர் கள ஆய்வுக்குச் செல்லும் போது நானும் அவருடன் செல்லத் தொடங்கினேன். அவருடன் உரையாடும்போது நான் செய்து வரும் ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து தெரிவித்தேன். அம்பேத்கருடைய பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு நான் அவரை அழைத்தேன்.
அதன்பிறகு அவர் ஒரு நாள், "நீங்கள் நிறைய வேலைகளை செய்கிறீர்களே, ஏன் அதைப்பற்றி எல்லாம் எழுதக்கூடாது'' என்று கேட்டார். நான் நிறைய எழுதியிருப்பதையும் ஆனால் அதை யாருக்கும் காட்டாதது குறித்தும் சொன்னேன். அவர், நான் எழுதியவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு தன்னுடைய பங்களாவிற்கு வரச்சொன்னார். என்னுடைய நோட்டுப் புத்தகங்களை அவரிடம் காண்பித்தேன். அவர் அப்போது தன்னுடைய ஆய்வுக்காகப் படித்துக் கொண்டிருந்தார். அவர் நான் எழுதியவற்றை நாள்தோறும் படித்துக் காட்டச் சொன்னார். நான் எழுதியவை எல்லாம் அவருக்குப் பிடித்திருந்தது. அதன்பிறகு அவர் ‘ஸ்திரி’ என்ற பெண்கள் இதழின் ஆசிரியருடன் பேசினார். இறுதியாக, அந்த இதழில் என்னுடைய எழுத்துகள் தொடராக வெளிவந்தன.
என்னுடைய சம்பந்தி வீட்டார் பூனாவில் இருந்தனர். அவர் ‘ஸ்திரி’ இதழில் நான் எழுதியவற்றைப் பார்த்து மிகுந்த வியப்படைந்து என்னைப் பாராட்டினார். எனக்கு பெரிய ஆச்சர்யம்! அதன்பிறகு தான் என்னுடைய குடும்பத்தில் இருந்தவர்களுக்கு என் எழுத்துகள் பற்றி தெரியவந்தது. அப்போது கூட அதைப்பற்றி அதிகமாக நான் அவர்களிடம் சொல்லத் தயாராக இல்லை. அதன் பிறகு மன்சன்மான் பதிப்பகத்தைச் சேர்ந்த திரு. குல்கர்னி, நான் எழுதிய தொடரை நூலாக வெயிடுவதாகச் சொன்னார். அன்றிலிருந்து நான் தொடர்ந்து பூனாவிற்குச் சென்று வந்தேன். நல்வாய்ப்பாக என்னுடைய மகன் பூனாவில் அப்போது படித்துக் கொண்டிருந்தான். அவனைப் போய் பார்த்துவிட்டு வருவதுபோல நான் பதிப்பகத்திற்குப் போய் வந்தேன். அந்தப் புத்தகம் வெளிவந்த பிறகுதான் என் வீட்டில் உள்ள அனைவருக்கும் என்னை ஒரு எழுத்தாளராகத் தெரியும்.
உங்கள் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் உங்கள் புத்தகத்தைப் படித்துவிட்டு என்ன சொன்னார்கள்?
அவர்களுக்கு அது பிடித்திருந்தது. எந்த எதிர்மறையான விமர்சனமும் எழவில்லை. என்னுடைய புத்தகத்தைப் படித்த கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் என் நூலை மிகவும் விரும்பியதாக கடிதங்கள் எழுதினார்கள்.
நாம் இப்பொழுது தலித் இயக்கத்தில் பெண்களின் அரசியல் பங்களிப்பு குறித்தும், அதற்குப்பிறகு ஏற்பட்ட வளர்ச்சி குறித்தும் பேசுவோம். டாக்டர் அம்பேத்கரின் இயக்கத்தில் பெண்கள் பெருமளவில் பங்கெடுத்தனர். அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கத்தில் பெண்களின் பங்களிப்பு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நீங்கள் சொல்லுவது சரிதான். டாக்டர் அம்பேத்கரின் இயக்கத்தில் பெண்கள் முக்கியப் பங்காற்றினார்கள். ஆனால், அதற்குப்பிறகு அது தொடரவில்லை. பாபாசாகேப் 1956இல் மறைந்தார். அவருக்குப்பிறகு, தலைவர்களிடையே பெரும் இழுபறி நிலை நீடித்தது. ஒவ்வொருவரும் தங்களை இன்னொரு அம்பேத்கராக நிரூபிக்க முனைந்தனர். இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது. மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. அம்பேத்கருடைய வாரிசு யார்? அதிகாரத்திற்கானப் போராட்டத்தில் மக்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். தலைவர்கள் மும்பையில் முகாமிடத் தொடங்கினர். ஒவ்வொருவரும் தன்னைச் சுற்றி துதிபாடிகள் இருக்கும்படி பார்த்துக் கொண்டனர்; தங்கள் புகழைப் பாடுவதிலேயே குறியாக இருந்தனர்.
நான் ஒரு எடுத்துக்காட்டு தருகிறேன். ராம்தாஸ் அத்வாலே அப்போது இளைஞர், அறிவாளி, செயல் வீரர். அவர் ‘தலித் பேந்தர்’ இயக்கத்தைச் சேர்ந்தவர். அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் தலைமையில் போர்க்குணம் மிக்க இளைஞர்களைக் கொண்ட அமைப்பாக ‘தலித் பேந்தர்கள்’ திகழந்தது. உண்மையில் மக்கள் அவரை மிகவும் விரும்பி தங்களின் தலைவராக ஏற்றுக் கொண்டனர். பாபாசாகேப் செயல்திட்டத்தை அவரால் தான் செயல்படுத்த முடியும் என்று மக்கள் நம்பினர். பல்வேறு தலித்துகள் அவரைப் பின் தொடர்ந்தனர்.
குடியரசுக் கட்சி தலைவர்களைவிட ‘தலித் பேந்தர்’கள் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்தனர். பழைய காலம் மீண்டும் புதுப்பிக்கப் படுவதாக மக்கள் உணர்ந்தனர். ஆனால், ஆதிக்க சாதியினராக பார்ப்பனர்கள், ‘மராத்தா’க்கள் மற்றும் அவர்களுடைய கட்சிகளும் இந்நிலையை சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை. புதிய தலைமையில் தலித் சமூகம் வலிமை அடைவதால், தங்கள் அதிகாரம் பறிபோய்விடுமோ என்று அஞ்சினர். எனவே, இயல்பான தங்களின் தந்திரங்களைத் தொடங்கினர். அந்தத் தலைவர்கள் ராம்தாஸ் அத்வாலேவுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக உறுதிமொழி அளித்து ஆசை காட்டினர். ‘தலித் பேந்தர்' நலிவடையத் தொடங்கியது. குடியரசுக் கட்சி பல பிரிவுகளாகப் பிளவுபட்டு, ஒன்றுக்கொன்று சண்டையிடத் தொடங்கியது. மக்களைப் பற்றி சிந்திக்கவும், அவர்களுக்கு தலைமை ஏற்கவும் யாருமே இல்லாமல் போய்விட்டனர்.
அதே அரசியல்தான் இன்றும் தொடர்கிறது இல்லையா? எதையாவது செய்து அவர்களை கீழே வைத்திருப்பது
ரொம்ப சரியாக சொன்னீர்கள். அந்தக் காலத்தில் தலித்துகளுக்கு கல்வியறிவு இல்லாததால் இவ்வாறெல்லாம் நடந்தது. இன்று, தலித்துகள் கல்வியறிவு பெற்றிருப்பதால் இதுபோன்று நடக்கிறது. அந்தக் காலத்தில் ஒட்டுமொத்த கிராமமும் எங்களுக்கு தண்ணீர் தர மறுத்து, எங்களை அண்டவிடாமல் ஒதுக்கி ஒடுக்குமுறையினாலும், அநீதியாலும் எங்களை கீழானவர்களாக நிறுத்தினார்கள். தற்பொழுது கல்வியறிவு பெற்ற தலித்துகளும் கிராமங்களில் ஆதிக்க சாதியினர் நடந்து கொள்வதைப் போன்றே நடந்து கொள்கின்றனர். கல்விபெற்ற தலித்துகள் அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கின்றனர். அவர்களுடைய குழந்தைகள் நல்ல வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். ஏழை மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் எதைச் செய்தாலும், தங்களுக்காகவே செய்து கொள்கிறார்கள். ஏழை தலித்துகள் அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்க வைக்கப்பட்டுள்ளனர். என்னைப் பொருத்த அளவில் நான் இப்படித்தான் உணர்கிறேன்.
ஆனால், தற்பொழுது நிலைமை மாறி விடவில்லையா? தங்கள் மீதான ஒடுக்கு முறை குறித்தும், உரிமைகள் குறித்தும் தங்களின் அடையாளங்கள் குறித்தும் அவர்கள் விழிப்புணர்வடைந்து வருகிறார்களே?
ஆம், நீங்கள் சொல்வது போல விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும், கொடூரமான மனிதத்தன்மையற்ற அதே ஒடுக்குமுறை அமைப்பு இன்றும் எல்லா வரையறைகளையும் மீறி இயங்கிக் கொண்டிருக்கிறதே! 1956இல் பாபாசாகேப் பவுத்தத்தை தழுவினார். ஒட்டுமொத்த ‘மகர்’ சமூகமும் அவரைப் பின்பற்றி பவுத்தர்களாக மாறியது. ஆனால் நாளடைவில் பிற சமூகங்கள் கைவிடப்பட்டன. நாங்கள் இந்து மதத்தையும், இந்து கடவுளர்களையும் அவற்றை வழிபடுவதையும் கைவிட்டுவிட்டோம். ஆனால், மற்ற 12 பாலுடேõர்ஸ் என்ன ஆனார்கள்? அவர்கள் என்னவாக இருந்தார்களோ, அப்படியே நீடிக்கிறார்கள் அதாவது இந்துக்களாக. சாம்பர்ஸ், டோர்ஸ், மால்ஸ் மற்றும் பிற சாதியினர் தங்களுடைய மதத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை. அவர்கள் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. பவுத்தர்கள் தனித்துவிடப்பட்டிருக்கிறார்கள். எனவே தற்பொழுது பவுத்தர்களுக்கு எதிராக ஒட்டுமொத்த கிராமமும், ஊரும் இருக்கிறது. ஏன் ஒட்டுமொத்த நாடே அவர்களுக்கு எதிராக இருக்கிறது.
இதற்கான தீர்வுதான் என்ன?
நாம் எல்லா இடங்களிலும் பவுத்தத்தை பரப்ப வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், நாம் அவ்வாறு செய்ய அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இது உண்மையிலேயே மிகவும் இக்கட்டான சூழல்தான். நாங்கள் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறோம். இந்தப் போராட்டத்தில் நாம் சாவதாக இருந்தாலும், கடுமையாகப் போராடித்தான் தீரவேண்டும். இதுதான் நம்முடைய எதிர்காலமாக இருக்கிறது. நாம் பவுத்தர்களாக மாறியதிலிருந்து இந்து மதம் முன்னெப்போதைக் காட்டிலும் மூர்க்கமாகவும் ஆதிக்க மனப்பான்மையுடனுமே செயல்படுகிறது. பழமைவாதிகள் முன்பை விட வலுவடைந்து வருகின்றனர்.
உங்களுக்குத் தெரியுமா, முன்பைவிட தற்போது எண்ணற்ற சத்தியநாராயண பூஜைகள் நடந்தேறி வருகின்றன. தற்பொழுது நடைபெறும் எண்ணற்ற புத்தாக்க மத நிகழ்ச்சிகளைப் பாருங்கள். டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பவுத்தராக மாறிய பிறகு, இந்துக்கள் தங்களின் மதத்தைப் பற்றி கூடுதல் உணர்வுள்ளவர்களாக மாறிவிட்டார்கள். தற்பொழுது திட்டமிட்டே பவுத்தர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். ஊடகங்கள் இந்துமதவாதிகளின் பிடியில் இருக்கின்றன. திட்டமிட்ட தங்களின் பரப்புரைக்காக அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். நாம் இந்த சவாலை முறியடித்தாக வேண்டும்.
அந்த 12 பாலுடோர்ஸ் அந்தக் காலத்தில் எப்படி நடந்து கொண்டனர்? அவர்களுடைய நோக்கம் என்ன?
நாங்கள் அனைவரும் ஒன்றாகவே இருந்தோம். சாம்பர், தோர், தோஷ்டி மற்றும் பிறர் எல்லாருமே ஆதிக்க சாதியினரால் சுரண்டப்பட்டவர்களே. நாங்கள் கிராமத்திற்கு வெளியில் தள்ளப்பட்டோம்; அவர்கள் கிராமங்களிலேயே இருந்தனர். ஆனால் நாங்கள் எல்லாருமே சூத்திரர்கள் தான். உண்மையில் ‘மராத்தா’க்களும் சூத்திரர்களே! ஆனால் பார்ப்பனர்கள் மிகவும் தந்திரமாக இதுபோன்ற அனைத்து சாதிகளையும் கிராமங்களில் தங்களின் தேவைக்கேற்ப வைத்துக் கொண்டு, நன்கு திட்டமிட்ட முறையில் அவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி நிலைப்படுத்தி விட்டனர்.
மிகவும் தீரமிக்க ‘மகர்’கள் இந்த நாட்டின் தொல்குடிமக்கள். இவர்கள் பார்ப்பனர்களின் வண்டிக்கு நுகத்தடியாகப் பயன்படுத்தப்பட்டனர். ஏனெனில், அவர்கள் இந்த சாதியைக் கண்டு மிகவும் பயந்தனர். அதனால்தான் அவர்கள் மீண்டும் பலம் பொருந்தியவர்களாக மாறிவிடக்கூடாது என்பதற்காக, நிரந்தரமாக ஒடுக்குமுறைக்கு ஆட்படுத்தப்பட்டனர். ‘மாதங்’ சாதியைத் தவிர அனைத்து சாதியினரும் கிராமங்களில் தங்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களும் தங்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிக்கொண்டதால், ‘சாம்பர்ஸ்’ எங்களை திட்டுவார்கள். நாங்கள் தோர்ஸ்களை எங்களுக்கு கீழானவர்களாக கருத நிர்பந்திக்கப்பட்டுள்ளோம். ‘மாதங்’குகளும் எங்களுக்கு கீழானவர்களாக கருதப்படுகிறார்கள். இவ்வாறாக நாங்கள் கருதும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து அவர்களை அப்படி கருதுவதால், அவர்கள் எங்களிடமிருந்து தொலைவில் இருக்கிறார்கள்.
‘மாதங்’குகள் ஏன் உங்களுடன் இணைந்து, பவுத்தத்தை தழுவவில்லை?
அதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலில் அவர்கள் இந்து மதத்தை கேள்வி கேட்கவில்லை. இரண்டாவது அவர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் இருந்தனர். ஒரு கிராமத்தில் ஓரிரண்டு ‘மாதங்’குகளின் வீடுகளே இருக்கும். இந்து மதத்தை எதிர்ப்பதற்கான பலம் அவர்களுக்கு இல்லை. எனவே, இந்து மதத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதே பாதுகாப்பானது என்று அவர்கள் எண்ணினார்கள். அதனால் தான் நாங்கள் எண்ணிக்கையில் மிகப்பெரிய சமூகமாக இருந்தாலும், தனித்து விடப்பட்டதாகக் கருதுகிறோம்.
தலித்துகள் இன்று சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?
தலித்துகள் கிராமங்களிலிருந்து மாநகரங்களை நோக்கி நகர்கின்றனர். பலர் வேலைகளைத் தேடி இடம் பெயர்கின்றனர். கணிசமான மக்கள் தொகையினர் கிராமங்களை விட்டுச் சென்று விட்டனர். வெறும் ஏழு அல்லது எட்டு பவுத்த குடும்பங்கள் மட்டும் இருந்தால், கிராமத்தினர் அவர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்த முடியும். ஆனால், இருபதிலிருந்து முப்பது வீடுகள் இருந்தால், அவ்வாறு செய்ய இயலாது. பூனா, மும்பை போன்ற மாநகரங்களில் அல்லது பால்டன் போன்ற நகரங்களில், அவர்கள் மீது அழுத்தம் தர முயல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால், எத்தனை பேருக்கு கல்விக்கான வாய்ப்புகள் இருக்கின்றன? எத்தனை பேருக்கு வேலை கிடைக்கிறது?
அடிப்படையில் எங்களுடைய மக்கள் இன்றளவும் ஏழைகளாக இருக்கின்றனர். அதுவும் தற்பொழுது எண்ணற்ற பிரிவுகள் இருக்கின்றன. சிறிய குழுக்களுக்கு எதிராக பெரிய குழுக்கள்; அம்பேத்கரியல்வாதிகளுக்கு எதிராக அம்பேத்கரியல்வாதிகள் அல்லாதோர், மேல் பண்பாடுக்கு எதிராக வேர் பண்பாடு. ஆனால், ஒரு விஷயத்தை நான் சொல்லியாக வேண்டும். இன்று இடஒதுக்கீட்டை விட தீண்டாமை ஒரு பெரிய பிரச்சனையாக இல்லை. ஆனால் எந்தப் போராட்டத்திற்கும் ஒரு நல்ல தலைவர் வேண்டுமே! டாக்டர் அம்பேத்கர் சொல்வது உண்மையானது. “வேலைகளிள் பின்னே ஓடாதீர்கள், வியாபாரத்தை தொடங்குங்கள்.'' பல்வேறு வங்கிகளும், கடனுதவி வழங்கும் வசதிகள் இருந்தும் இதன் மூலம் எத்தனை ஏழைகள் பயனடைகின்றார்கள்? அரசின் திட்டங்களையே எடுத்துக் கொள்ளுங்களேன், அவை மக்களை சென்றடைவதில்லை. நாம் மூடநம்பிக்கை, ஊழல், குடி போன்றவைகளுக்கு அடிமைகளாகி விட்டிருக்கிறோம். இவற்றின் மீதெல்லாம் ஒரு கட்டுப்பாடில்லை.
பெண்கள் அதிகளவில் துன்பப்படுவதாக நினைக்கின்றீர்களா?
ஆமாம். இடஒதுக்கீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலான கல்வியறிவற்ற பெண்கள் தனகர், ரமோஷி போன்ற சமூகங்களிலிருந்து வருகின்றனர். அவர்களுக்கு கிராமத் தலைவராகும் வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் எத்தனை பெண்களால் சுதந்திரமாகப் பணியாற்ற முடிகிறது? ஆதிக்க சாதி ரவுடிகள் அவர்களைப் பணி செய்ய விடுவதேயில்லை. அவர்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள். பெண்கள் இன்றளவும் அடிமைகளாகவே இருக்கிறார்கள். தலித் பெண்கள் மட்டும் அல்ல, என்னைச் சுற்றியிருக்கும் பெண்கள் ஆதிக்க சாதிகளிலும் அடிமை சாதிகளிலும். அனைத்துப் பெண்களும் பிரச்சினையை சந்திக்கின்றனர். குறிப்பாக கிராமத்துப் பெண்கள். அவர்களுடைய ஒடுக்குமுறை வெளியே வருவதில்லை. ஆதிக்க சமூகங்களின் அரசியல் கட்சிகளிலிருந்து நெருக்கடி கொடுப்பதால், அனைத்துப் பாலியல் வன்முறைகளும் குடும்ப மானம் கருதி அப்படியே அமுக்கப்படுன்றன. அவர்களுடைய பொருளாதார நிலை சற்று உயர்ந்திருந்தும், பெண்கள் கடுமையாக உழைத்தும் பெரும் பிரச்சினைகளையே சந்திக்கின்றனர்.
நீங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கஷ்டப்பட்டிருக்கிறீர்களா?
என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில், மற்ற பெண்களைப் போலவே நானும் கஷ்டப்பட்டிருக்கிறேன். ஆனால், எல்லாரும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, என்னுடைய துயரத்தைப்பற்றி மட்டும் நான் எப்படிப் பேச முடியும்? என்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சில பிரச்சனைகள் இருந்தன. அந்தக் காலத்தில் ஆண்கள் எப்போதுமே பெண்களைத் தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும் என்று எண்ணினர். தான் சந்தேகப்படும் மனைவியை கணவர்கள் அடிப்பது, அப்போது சர்வசாதாரணமாக இருந்தது. நானும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒருமுறை நாங்கள் ஒரு கூட்டத்தில் பங்கேற்க மும்பை சென்றிருந்தோம்.
நாங்கள் ரயிலில் பொதுப் பெட்டியில் பயணித்தோம். கூட்டம் அதிகமாக இருந்தது. சில இளைஞர்கள் என்னைப் பார்த்தனர். என் கணவர் உடனே என்னை சந்தேகப்பட்டு என்னை கடுமையாகத் தாக்கினார். மூக்கிலிருந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது. ஆனால் ரயிலில் மக்கள் நம்மைப் பார்க்கத்தானே செய்வார்கள்? இல்லையா? அவர்கள் அப்படிப் பார்ப்பதை எப்படித் தடுக்க முடியும்? ஆனால், இதை எல்லாம் அவரிடம் விவரிப்பதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் அதை காது கொடுத்து கேட்க மாட்டார். மேலும் நாங்கள் அந்த நிகழ்ச்சிக்காக அங்கு தங்கவுமில்லை. அன்று மாலையே நாங்கள் திரும்பினோம். என் கணவருக்கு அவ்வளவு ஆத்திரம், என்னை ரயிலில் அடித்துக் கொண்டே வந்தார். இவை எல்லாம் அப்போது சாதாரணம். என் வாழ்க்கை முழுவதும் நான் இத்தகைய வன்முறைகளை சந்திக்க வேண்டியிருந்தது.
இதை எப்படிப் பொறுத்துக் கொண்டீர்கள்? உங்களுக்கு எங்கிருந்து பலம் வந்தது?
அவர் ஏதாவது உப்புசப்பில்லாத விஷயங்களுக்குக்கூட என்னை அடிப்பார். உண்மையில் அவர் மிகவும் சந்தேகப்பார்வை கொண்டவர். என்னுடைய வெகுளித்தனத்தை நிரூபிக்க நான் பெரு முயற்சி செய்தேன். நான் இதை அவரிடம் விவரிக்க அழுதிருக்கிறேன், கெஞ்சியிருக்கிறேன். அதன்பிறகு சில நாட்களுக்கு எல்லாமே இயல்பாக இருக்கும். மீண்டும் ஒரு வாரம் கழித்து ஏதாவது நடக்கும். உடனே சந்தேகப்பார்வை மீண்டும் தலையெடுக்கும். இத்தகைய விஷயங்களை நான் தொடர்ந்து சந்தித்து வந்தேன். பெரும்பாலான பெண்கள் இப்படித்தான் தங்கள் வாழ்க்கையை நடத்தினர். ஒவ்வொரு பெண்ணுக்கும் இது தெரியும். இத்தகைய வேதனைகளைப் பேசித்தீர்க்க ஒவ்வொரு பெண்ணும் முயல்வதுண்டு.
ஒருவருடைய கணவனை கைவிட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொள்வது பிரச்சினையைத் தீர்க்காது. ஏனெனில், ‘புருஷத் தன்மை’ என்பது அனைத்து ஆண்களிடமும் ஒரே மாதிரிதான் இருக்கும். எனவே எங்கும் செல்வதில்லை என நான் தீர்மானித்துக் கொண்டேன். என்ன வந்தாலும் ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்வது என்று எனக்கு நானே முடிவு செய்து கொண்டேன். நான் எதிர்வினையாற்றவில்லை. “அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதை அவர் செய்யட்டும், அவரைத் தவிர வேறு யாரும் அப்படி சொல்வதில்லை. சரி இருக்கட்டும்'' என்று அடிக்கடி சொல்லிக் கொள்வேன். சமூகத்தில் உள்ள மற்ற அனைவரும் என்னைப் பாராட்டுவார்கள். என் குடும்பத்தில் ஆண்கள் மற்றும் பெண்களின் முழு ஆதரவு எனக்கிருந்தது. உண்மையில் அது தான் என்னுடைய பலம்.
இத்தகைய வன்முறை மற்றும் கணவரின் சந்தேகப் பார்வை குறித்த அச்சம் போன்றவைதான் பெண்கள் அரசியல் தலைமையை ஏற்க விடாமல் செய்ததா?
ஆமாம், பெண்கள் முழுமையாக தலைநிமிர்ந்து தங்களுடைய கணவர்களைப் பார்ப்பதற்கேகூட பயப்படுவார்கள். நல்வாய்ப்பாக நான் பால்டனில் இருந்ததால், இங்கிருக்கும் மக்களுக்கு என்னை நன்கு தெரியும். எனக்கு என்னுடைய தந்தை, அண்ணன்கள் மற்றும் சமூகத்தில் உள்ள மற்றவர்களின் ஆதரவு இருந்ததால்தான் என்னால் ஓரளவுக்கேனும் சாதிக்க முடிந்தது.
நீங்கள் எப்போதாவது உங்கள் தந்தையிடமோ, அண்ணனிடமோ அல்லது நண்பர்களிடமோ இது குறித்து விவாதித்தது உண்டா?
இல்லை, இல்லவே இல்லை. என்னுடைய வேதனைகளை நான் யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. நான் தனியாகத்தான் பேசிக்கொள்வேன். சில நேரங்களில், விரக்தியாக இருப்பதாக உணர்வேன். எல்லாவற்றையும் விட்டொழிக்கலாம் என்று நினைப்பேன். எனக்கு ஒரு மூத்த மாமா இருந்தார். அவருக்கு ஒரு கண்ணில் பார்வை இல்லை. அவர் எங்களுக்கு புராணக்கதைகளில் வரும் பெண்களைப் பற்றி சொல்வார். ஒருவேளை அந்தக் கதைகள் என் மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். அவை தான் எனக்கு பலத்தை அளித்தது. இதையெல்லாம் கடக்க என் மாமியார், நாத்தனார் என எல்லாருமே என்மீது அன்பைப் பொழிந்தனர். என் கணவரைத் தவிர வேறு யாரும் அப்படி நடந்துகொள்ளவில்லை. குடும்பத்தில் பெண்களை ஆண்கள் தான் ஒடுக்குகிறார்கள் இது ஏதோ கடந்தகால நிகழ்வு அல்ல. சுதந்திரத்திற்குப் பின்பும், தன் மனைவியை ஏதோவொன்று சந்தேகப்பட வைக்கிறது.
எடுத்துக்காட்டாக, வேறு இடம் இல்லாததால் வீட்டின் முன்புறம் அமர்ந்து ஒரு பெண் சமையல் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருக்கிறபோது அழுக்குத் தண்ணீரை இயல்பாக ஏதாவது ஒரு திசையில் வீசி எறிவார். ஆனால், அது அவள் தன்னுடைய காதலுக்கு காட்டும் சமிக்ஞையாக கொள்ளப்படுகிறது. உடனே அந்தக் கணவன் அந்த மனைவியை தாக்குவார். “அழுக்குத் தண்ணீரை ஏன் அந்தக் குறிப்பிட்ட திசையில் எறிகிறாய்? அங்கு யார் நிற்கிறார்கள்? இது யாருக்கான சமிக்ஞை உன் காதலனை எங்கு சந்திப்பாய்?'” அந்த ஏழைப்பெண் பேசும் சக்தியையே இழந்து விடுகிறாள். தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு வார்த்தைகூட பேச பயப்படுவாள்.
அவள் தனது தலையில் இரண்டு அல்லது மூன்று பானைகளை சுமந்து செல்லும்போது, அவள் பானைகள் விழாமல் பார்த்துக் கொள்ள தனது கைகளைத்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் அது கூட சந்தேகத்திற்குரியது. வலது கையா, இடது கையா? அது சமிக்ஞையா? உன் கையை ஏன் அப்படி வளைத்திருக்கிறாய் அது பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வி. அதற்கு அவள் எப்படி பதிலளிப்பாள்? பெண்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்று கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஆனால் இந்த வேதனைகளை எல்லாம் அவர்கள் சந்தித்து, சாதித்துமிருக்கிறார்கள்.
இதுபற்றி எல்லாம் எழுத நீங்கள் நினைத்ததுண்டா?
என்ன செய்வது, என்ன இருந்தாலும் அவர் என் கணவராயிற்றே! எனக்குத் திருமணமாகி என்னுடைய பல ஆண்டுகளை அவருடன் கழித்திருக்கிறேன். தவிர, கல்வி வாசனையே இல்லாமல் எந்த முன்னேற்றமுமின்றி இருக்கும் என்னுடைய சமூகத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருந்தது. அது நம்முடைய மதிப்பைப் பெரிதும் குறைத்துக் கொண்டதாக இருக்கும். மேலும் பல்வேறு பெண்களின் நிலையும் இதுதான். நானும் இதற்கு விதிவிலக்கல்ல. எனவே இதை ஏன் எழுத வேண்டும் என நினைத்தேன். இதற்கான மூலகாரணம் ஆண்களின் ஆணவம்தான். அந்தக்காலத்தில் கணவன்மார்களுக்கு செய்வதற்கு வேறு வேலை இல்லை. கல்வி இல்லை, வேலை இல்லை, உணவுக்குக்கூட அவர்கள் பிச்சை எடுக்க வேண்டியிருக்கும், இந்நிலையில்தான் அவர்களுடைய ஆண் அகங்காரம் அவர்களுக்கு ஒருவித அடையாளத்தைக் கொடுத்தது.
" நான் ஒரு ஆண், நான் பெண்களுக்கு மேலானவன், நான் மதிக்கப்பட வேண்டியவன். ஒட்டுமொத்த கிராமமும் எங்களை துன்புறுத்தினால், நாங்கள் பெண்களைத் துன்புறுத்துவோம்.' தந்தைமார்களும் தங்களுடைய மகன்கள் தங்களின் மனைவிகளை செருப்பாக கருதவேண்டும் என்று அறிவுறுத்தினர். கணவனின் காலடிதான் மனைவியின் இருப்பிடம். தாங்களும் பொருட்படுத்தக்கூடிய நபர் தான் என்று மற்றவர்கள் கருத வேண்டும். அதற்கு இது பயன்படுகிறது. இப்பொழுது எல்லாம் மாறிவருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு மூலம் சிலவற்றை சாதிக்க முடிகிறது. அந்த வெற்றியில் அவர்களின் அகங்காரம் மட்டுப்பட்டுள்ளது. எப்படி இருப்பினும், என் சமூகத்தின் வேதனைகளே எனக்கு எப்போதும் முக்கியமானதாகப்படுகிறது. சொந்த வேதனைகளை விட நான் என்னை முழுமையாக என் மக்களுடன் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்தவகையில் ‘ஜினா ஆம்சா’ சுயசரிதை ஒட்டுமொத்த என்னுடைய சமூகத்திற்கானது
சந்திப்பு: மாயா பண்டிட்
தமிழில்: புலேந்திரன்அ