நான் இல்லாமல் போவதே இல்லை கண்ணம்மா...உன் கண்ணாடியில் சிமிட்ட மறந்த கண்களில் கருப்பு வெள்ளை கவிதை தானே நான். உன் சீக்கிர விழிப்பு நாளில் சிறு வனப் பனித்துளியென உன் மனம் சிலிர்க்கும் நினைவுச் சொட்டல் யாராம். என்னிடம் பல போது பதில்கள் இருந்ததில்லை. மாறாக நீ வந்தமரும் மதில்கள் ஏராளம். திசையற்ற இருத்தலில் நீ இருக்கவும் பறக்கவும் தானே என் பருவ காலங்கள்.

modern art 350யாருக்கும் தெரியாத என்னறையின் அரூப ஜன்னல் உனக்கான வழி. நீ ஒளியாய் வரலாம். காற்றாய் வரலாம். நிலவு கூட்டி நட்சத்திரங்கள் சூழ வரலாம். நண்பகல் நேரத்து மயக்கமாகவும் வருவது நீ என்றே அறிவேன். பின்னிரவு தலையணைத் தகர்ப்பாகவும் நீ தானே. சொற்களில் கூடு கட்டுபவள் மட்டுமல்ல நீ... சொந்தத்தில் வீடே கட்டுபவள். வாசல் முழுக்க வசந்த காலம் பதிக்க கற்றிருக்கிறாய். மலையேறும் இலையுதிர் காலத்துக்கு வேறென்ன வேண்டும்.

நீ தேடித் தேடி காணும் என்னை நான் ஓடோடி வந்து தருகிறேன். உள்ளத்து குகையில் நீயொரு ஆதி இருள். அது சூடும் நிழல் வழியே வெளியேறும் முதல் வெளிச்சம் நான். வனம் நடுவே ஒரு செவ்வியல் பாறையில் இப்படி ஒரு காதலை இந்தக் காலம் செய்திருக்கிறது. உன்னளவு வானமும் என்னளவு வானமும் பார் நீலத்தில் நீந்துவதை. அங்கிருந்து காணும் மலை நிலத்தில் நானும் இங்கிருந்து காணும் மலர்வனத்தில் நீயும் இடைவெளியெங்கும் இதயங்கள் தானே மைல்கற்கள்.

காதலொரு பிறழ்வு குணம். அதன் வால் பிடித்து நகரும் முத்தங்களுக்கோ மிருக குணம். கறை நல்லது போல இந்தக் கவிதைகள் நல்லது. அன்றி காதலின் கொடும் பசிக்கு வேறென்ன இருக்கிறது நம்மிடம். நாமே கவிதையாகி நாமே விதையாகும் தத்துவம் காதலின் மகத்துவம். கரைந்து ஒன்றாகி காற்றோடு இல்லாமல் போகையிலும் உன் குரல் எனக்கும் என் குரல் உனக்கும் கேட்கும் மந்திரம்... வெளி கொள்ளும் புன்னகையில் இருக்கும். பிறகு வெளியாய் காலத்துக்கும் மிதக்கும்.

என் தோளணிந்து கொள்ள தவிக்கும் உன் உயிரின் கனம் சில நேரங்களில் இலையாகவும் சில நேரங்களில் மரமாகவும். இடையே வந்து வந்து போகும் பறவையாகவும். எத்தனை நிம்மதி இந்தக் காதலுக்கு. கையேந்தி நிற்கும் சிலுவையில் வடியும் ஆன்ம குருதியின் நித்தியமெல்லாம் நின் ஜீவன் கொண்ட இவ்வுடல் பற்றிய சூடல் அல்லவா. உன் நிறத்தில் பூக்கும் என்னை நீ தானே சூடிக்கொள்கிறாய். பிறகு என் நிறத்தில் நிரம்பும் உன்னைக் கண்டு வெட்கமும் கொள்கிறாய்.

திசை தப்பிய கப்பலில் நாம் இருவர் மட்டுமே இருக்க கடல் கொள்ளா ஆசை. தீவொதுங்கி கரை சேர்ந்ததும் அது ஆதி வனமென ஓர் ஏதேன் தோட்டத்தை மீண்டும் சமைப்போம். திரும்பும் பக்கமெல்லாம் ஆப்பிள் மரம் வளர்ப்போம். நாம் ஆப்பிள் கடவுளின் பிள்ளைகள். நினைவின் பசி நிதானமிழக்கும் போதெல்லாம் நீ எனும் ருசி நீந்தி வருவது வாட்சப் விதி. தூர தேச இதயங்களை இணைக்கும் ஒற்றைப்பாலம் அலைபேசி எனும் அற்புதம்.

நான் எழுதத் தெரிந்தவன். நீயோ இதயம் தெரிந்தவள். நான் சொற்களுக்கு காத்திருக்கையில் நீ உன் சொக்கனுக்கு காத்திருக்கிறாய். எழுதி தீராத கடிதங்கள் என்னிடம் நிறைய இருக்கின்றன. வந்து சேராத புது காலத்தில் நம்மை விதைத்திருக்கிறேன். நீந்தி தீராத நதியெங்கும் நீ நீர்... நான் இலை. மூழ்கினாலும் உன்னோடு உன் நீர்கால மண்ணோடு. மறதி நோய் வரலாம். மறதிக்கும் மறுபொருள் கிடைத்தால் அது உன் நினைவின்றி வேறென்ன.

நான் நோன்பிருந்தால் தாங்காது உனக்கு. நானே நோம்பாக வேண்டும் உன் சிறுவயது சிற்பத்துக்கு. என் செருப்பணிந்து ஊர் சுற்றும் உன் காதலைத்தான் நான் மெழுகேற்றி வானத்தில் விட்டிருக்கிறேன். வந்து சேரும் ஒளியெல்லாம் நிலவு பிரதிபலித்தவை. உண்மையில் அது என் உயிர். ஒப்புக்கொடுத்தலை உணர்ந்தது உன்னிடம். சரணடைதலை சந்தித்தது உன்னிடம். காதலின் தீபத்தை அணையாமல் காக்கும் அந்தக் கண்களில் தான் என்னை ஊற்றுகிறேன்.

நீ மனதுக்குள் பதியமிட்ட என்னைக் காண்பது பனித்துளியில் புரண்டெழுந்த ஓர் அதிகாலையைப் போல இருக்கிறது. நீ இதயத்தில் தூவி விட்ட என்னை உணர்வது மலை உச்சியில் மாலையை மாற்றிக்கொண்ட இரு பறவையைப் போல இருக்கிறது. என் ரசனையின் வழியே நான் வந்து சேர்ந்த இடத்தில் மிக அழகானது உன் கனவு. என் தேடலின் வழியே நான் கண்டடைந்த மிகு நுட்பத்தின் மைய உரு உன் வனம். வனத்தில் தொலையும் தொன்ம தோள்களில் உனக்கும் சேர்த்தே சிறகிருக்கிறது.

சொல் சொல் எப்படி என்னை ஏந்திக் கொண்டாய். எங்கிருந்து என்னில் தாவிக் கொண்டாய். சிற்பத்தில் இருக்கையிலும் சர்ப்பமாய் சீரும் என் அகம். உனக்குத் தெரியும்... விஷமற்ற பூச்சாண்டியை இழுத்தணைத்து முத்தமிட. கைகள் கோர்த்து தோள் சாய்ந்து சகலத்தையும் சரித்து விட. யுத்த முனையிலும் உன் முத்த முனை நினைவில் ஒரு கவிதை வரும். காற்றினில் எழுதி விட்டு காலத்தை உருட்டிச் செல்லும் என் நாட்களுக்கு நீயே பூட்டு. நீயே சாவி.

எந்தப் பூவிலும் இதயம் இருப்பது போல... உன் எந்த நினைப்புக்கும் சுவாசம் இருக்கிறது. மூப்பில்லா மூக்குத்தியில் முத்தம் ஒன்று கூடும். முகம் அலம்பிய பிறகும் துடைக்காத நீர்த்துளிகளில் மூக்குத்திகள் கூடும். நல்லவேளை நான் சித்திரக்குள்ளன் அல்ல. தூக்கிக்கொண்டே அலைந்திருப்பாய். நல்ல தவம் நான் செய்திருக்கிறேன். உன் உள்ளங்கை மருதாணி வாசத்தில் பார் இப்படி மணக்கிறேன்.

நேரத்துக்கு வந்து மியாவ் சொல்லும் சித்திரப் பூனை நீ. மதில் மேல் நானல்ல.. மதிலேதான் நான். குறுக்கு நெடுக்கு நடை.. நீட்டி நிமிர்ந்த தூக்கம்... உன் மொழியில் அழைத்து உன் விழியில் கருணை பாய்ச்சி... நீயொரு நிகழ் நிறை பிராணி. நானோ ரசிக்கும் பரிணாமன். சிறு வயதில் உன் ஊரில் நானும் என் ஊரில் நீயுமாகவே இருந்திருப்போம். இப்பெரும் வயதில் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறோம் கவனி.

காற்றுச் சிறகில் உப்பு மூட்டை தூக்கி விளையாடும் ஒரு பறவையின் நினைப்பை போல உன் என் நம் வெளி வானவில்லை தூக்கி விளையாடுகிறது. தோட்டத்தில் சீனி மிளகாய் கண்டு கண்கள் வியந்த காலம் காரணமே இல்லாமல் கண்களில் நினைவு கொள்கிறது. உன் செல்லக் கடியின் சேதியாக இருக்குமோ. பீன்ஸ்க்கு நீரூற்றிய நினைவும் தான். உன் கிண்கிணி சிரிப்புக்கு பொருந்துவதாக ஒரு காதலன் நம்புவான்தானே.

உன் வெவ்வவேகள் சொற்களில் கள் என்றால் மற்றவர் முறைப்பர். நீ முயங்குவாய். உன் கொலுசொலி கூவல்களில் ஆவல் அதிகம் கண்ணே. ஜல் ஜல் என்பதே மற்றவரை என்னிடம் இருந்து தள் தள் என்பதாக இருக்கும். பொய்யாய் கடிப்பதும்... முதுகு துளைக்க கட்டிப் பிடிப்பதும் இருவரி கவிதை. ம்ஹும் இருவரின் கவிதை.

தாங்கத் தெரிந்த மரம் நீ. தாவத் தெரிந்த பறவை நான். தோகை விரிந்த நிலம் நீ. தேகம் விடுத்த நிழல் நான். பூக்களின் தேசத்தில் உன்னையே தலைவி ஆக்குகிறேன். பூவரச வாசத்தில் நீந்தும் இவனை கண்களால் கைது செய்.

வலது வகிடு இருக்கட்டும். உருது பூக்கள் கிடைக்காவிடினும் உயிர் பூக்கள் சூடிடுவேன். முகம் நிறையட்டும் புன்னகை. அதிலும் தேன் எடுக்கக் கற்றவன். உடல் வலிமை கூட்டு. மலை வேந்தனோடு மல்லுக்கட்டுவது மலர் பறிப்பதும் தாண்டி. ஒற்றை நாக்கு எமோஜி இப்போது கற்பனித்துக் கொள். ஈரவிழி எமோஜிகள் வேண்டாம். தூரவெளி நெருங்கும் எமோஜிகள் செய்வோம்.

ஒரு ஜீவன் அழைக்க ஒரு ஜீவன் திளைக்க.. உண்மையில் நமக்காக அழும் காதலை தூக்கிக் கொஞ்சி சிரிக்க வைப்போம். உணர்வெல்லைக்கு சென்று நிற்கும் இடத்தில் ஆளுக்கொரு பிடி நாமே நமக்கு. வினோதம் விசிலடிக்க ஒரு மாயத்தில் நின்று மகோன்னதம் செய்யும் சித்து இந்தக் காதல். படியேறி நடை கூடிய பிறகும் பறக்கவே நினைக்கும் பாதி மலை யாத்திரை.

போகிற போக்கில் கவிதை ஆக்க தெரிந்த என்னைத் தான் பூஜித்து பூவிதழ் தரித்து கடவுளாக்கி போகிறாய். என்ன ஒன்று... பக்தையைத் தேடி பிரார்த்திக்கும் கடவுள் இது. தொடர்பில் இருக்கும் பிரபஞ்ச விதியில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். என் தோளில் இருக்கும் உன் யுகமும்... அதில் அழகழகாய் அடுக்கிக்கொண்டு செல்லும் உன் அகமும்.

நான் சித்தனோ யுத்தனோ தெரியாது. ஆனால் முத்தன். உன் முழுக்க தியானிக்க தெரிந்த புத்தனும். பின்னிருந்து தாவும் உன்னை முன்னிருந்து மேவும் என்னை மாற்றிக் கொண்டு ஆடை சூடுகையில் அங்கொரு நதி பிரவாகம் கொள்கிறது. அதே நேரம் ஒரு திரி இரு திரேகம் பற்றுகிறது. நீ என்னோடே ஊர் சுற்றும் யசோதரையாக இரு.. என்ன இப்போ.

ஆகாயத்தின் அத்தனை சந்து பொந்துகளில் இருந்தும் எட்டிப் பார்க்கும் உன் ஒருவளைத்தான் நான் மதி என்கிறேன். மாற்றி யோசித்த நாளிலும் இருள் சூழ வந்து நிற்கும் உன்னில் கவிழ்ந்து கொள்ளும் கடைசி குண்டு பல்பும் நானே. புலப்படும் புதிர் ஒன்றில் இரு கைகளிலும் சாவியோடு இருக்கும் உன்னைச் சுற்றியே தொலைந்து போகட்டும் என் பூட்டிய கதவு. ஜன்னல் திறந்து ஒளி பாய்ச்சும் உன் கீற்றில் நான் கொத்து தூசுகள்.

நாண வெயில் சூடி அலையும் கான நதியா நீ. நாணல் அசைத்து நானொரு பொன்னூஞ்சல் எனும் மென் காற்றின் தோள் நான். வெட்கம் தாங்காமல் இப்போதெல்லாம் நீ தேங்க்ஸ் என்பதில்லை. மாறாக தா கிஸ் என்கிறாய். முத்தமிட தெரிந்தவனுக்கு தானே முற்றாது காதல். யுத்தமிட தெரிந்தவனுக்கு தானே முட்டாது கொம்பு. கரையோர கால் தடங்களில் கணுக்காலும் பதிவது காதலின் மகத்துவம். பட்டாம் பூச்சிக்கு உன் பெயர் வைத்து விட்டேன். இனி கிறக்கமே அதன் பறத்தல்.

உன்னைப் போல காதலிக்க தெரியாத துருவன் நான். காதலின் வழி பாறையில் நீர் கசிய கற்றவள் நீ. காற்றின் வழியே வந்து கதவு தட்டவும் கற்றவள் நீ. ஆனால் உன்னைச் சுற்றி வளைக்கும் இக் கைகளில் மென் சுவை இருக்கிறது. மைவிழியை யாழ் வாசிக்க செய்யும் ஜென் மொழி இருக்கிறது. அது உன் மொழியில் கிசுகிசுக்கவும்... உன் பெண் மொழியில் முணுமுணுக்கவும் பழகி வைத்திருக்கிறது.

நேருக்கு நேர் நிற்கையில்..பேருக்கு பேர் முட்டிக்கொள்வது போல ஒரு விளையாட்டு விழிகளில் நொடிகளில். நெற்றி முட்டுகையில்... நிதானம் இழக்கவே விரும்பும் நான்கு கால்களிலும் காதலின் தூண்கள். அணைப்புக்கு முன்னும் பின்னும் ஒரு கனவு இருக்கும். அதில் வண்ணங்கள் சூழ... வானவில்லும் சேர... பட்டாம்பூச்சி தன் பங்கு கலரையெல்லாம் கொண்டு வந்து கொட்டும். கனவில் வண்ணம் வராது என்று காதலுக்கு தெரியாது. கண்கள் ஒட்டி சிமிட்ட மறப்போம்.

ஒரு செம்போத்தின் ப்ரவுன் நிறத்தில் காதலை உணர்கிறேன். ஒரு முன் பகலின் வெயில் றெக்கையில் விசிறி காணும் மாயம் தானே இந்தக் காதல். இதழ் ஒட்டுகையில் இனி நீயும் நான். இன்னும் சில இதயம் இருந்தால் எத்தனை நன்று.. அதையும் உனக்கு தந்து பணமாலை போல இதயமாலை சூட்டி பார்ப்பேன். இருதய கோளாறு இல்லை இது. அதில் மலரும் தேனாறு குறித்து இது.

உன் வாசலில் இடறி விழக் காத்திருக்கும் ஒளியில் எல்லாம் என் நிழல் மொழி மூச்சிரைக்கும். முகம் குனிந்து வாசி. நெற்றியில் தாவி ஏறும் என் அடுக்கு புள்ளி... அன்றைய நித்திரையில் ஓர் ஓவியம் நிகழ்த்தும் சூடிய அடுக்கு மல்லி. இப்படித்தான் இருப்போம். மலை கடந்தும் மலர்த்தும் மாயக்காற்றில் மந்திரம் சொன்னேன் வந்து விடு.. காலத்துக்கும் தான். கைக்குட்டை காதல் கடிதங்கள் நிரம்புகிறது. வாங்க வேண்டும் இன்னும் ஒரு பீரோ.

என் வெளி மறைந்த நினைப்பிலும் நீயொரு துளியாய் மழை ஏந்திக் கொண்டிருப்பது கோடை கால காற்றில் எழுதிய கொத்து மலர் சுவடு. கொண்டலாத்தி கொண்டு வந்த மலை தேச வேர் உன் ஞாபகம். செங்குருவி ஈசிச் சென்ற ஒரு வளைவின் நேர்கோடு நின் சிரிப்பு. மறுபிரவேசம் கொண்டு நகர்ந்து விட்ட மினுக்கியின் சட்டையில் தான் எத்தனை வேலைப்பாடு. சர்ப்ப சட்டையிலும் பரவசம் கொள்ளும் ஆதி நாம் ஆம் நாம்.

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.