இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவின் சீர்குலைவு
அண்மைக் காலங்களில் காலநிலை மாற்றம் காரணமாக உயிர் வாழ்க்கை பெரிதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது. வளி மண்டலத்தில் கரியமில வாயுத் திரட்சி நமது உயிர்வாழ்க்கைக்கு மாபெரும் அச்சுறுத்தலைக் கொண்டு வந்துள்ள அதேவேளையில் சுற்றுச்சூழல் மீதான முதலாளித்துவத்தின் அழிவுத் தாக்கத்தை நாம் அனைத்து வாழும் உயிரினங்களுடனும் பகிர்ந்து வருகிறோம். சுற்றுச்சூழலின் மீது சமுதாயத்தின் தாக்கம் கடந்த சில நூற்றாண்டுகளாக, குறிப்பாக தொழில்புரட்சியிலிருந்து, வேகம் எடுத்து வருகிறது. மாபெரும் சூழலியல் பிளவை, பிரம்மாண்டப் பிளவை, அதாவது மார்க்ஸ் குறிப்பிட்ட உயிர்ப்பொருள் ஆக்கச் செயல்பாட்டுப் பிளவை (Metabolic Rift) உருவாக்கி, சமுதாயம் விரிந்துபரந்த சுற்றுச்சூழலிலிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு வருகிறது.
உயிர்ப்பொருள் ஆக்கச் செயல்பாடுகளின் உலகம்
சூழலியல் என்பது வாழும் உயிரினங்கள் புவியில் நிலவும் எண்ணிறந்த சுற்றுச்சூழல்களுக்கு ஏற்ப எவ்விதம் தகவமைத்துக் கொள்கின்றன என்பது பற்றிய கல்வியாகும். உயிரினங்கள் தமக்குள் பரஸ்பரம் உரையாடலில் ஈடுபடுகின்றன, பலநேரங்களில் அவை தமது தேவைகளுக்குப் பொருந்தும் வகையில் தமது வட்டாரச் சுற்றுச்சூழலை மாற்றிக் கொள்கின்றன. உயிரினத்துக்கும் அதன் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவின் தன்மை என்னவாக இருந்தாலும் அது அதன் சுழற்சித் தன்மையின் காரணமாக சமநிலைப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கரிமப் பொருள் சுழற்சியில், தாவரங்கள் வளிமண்டலத்திலிருந்து கரியமிலவாயு வடிவில் கரிமத்தை உறிஞ்சிக் கொண்டு, அதைத் தமது திசுக்களில் ஒன்றிணைத்துக் கொள்கின்றன. தாவரம் வளர்கிறது, மறு உற்பத்தி செய்கிறது, பின்னர் இறந்து போகிறது, அதன் பின்னர் மீண்டும் சிதைந்து அதன் தனிமக்கட்டமைப்புக்குத் திரும்புகிறது, கரியமிலவாயுவை மீண்டும் வளிமண்டலத்தில் விட்டுவிடுகிறது. நீர், வெடியம் (நைட்ரஜன்), மற்றும் பிற தனிமங்களின் சுழற்சிகளும் இதே போன்றவையாகும். விலங்குகளின் நேர்வில் இந்த நிகழ்ச்சிப்போக்கு சிக்கலானதாகும், அவை தமது வளர்ச்சிக்குத் தாவரங்களைச் சார்ந்திருக்கின்றன, மேலும் அவை தமது சொந்த சுழற்சிக்குள் நுழைகின்றன ஆனால் அதே விளைவுடன், அதாவது பிறப்பு, வளர்ச்சி, மறு உற்பத்தி, இறப்பு மற்றும் சிதைந்துபோதல். இந்த வழியில் உயிர்வாழ்தலை நீடிக்கச் செய்யும் பருப்பொருட்கள் குறைந்தபட்சமாகக் குறைந்து வருகின்றன. இந்தச் சுழற்சி ஓட்டங்களை நமது உயிரியல் மண்டலத்தின் உயிர்ப்பொருள் ஆக்கச்செயல்பாடுகள் என்று நாம் புரிந்து கொள்ள முடியும்.மனிதர்கள் தமது மூதாதையரான குரங்குகளிலிருந்து தோன்றியபோது. பிற நில பாலூட்டிகளின் சமூகத்தில் நுழைந்தனர், அவற்றுடன் தமது இருத்தலுக்குத் தேவையான மூலவளங்களுக்காகப் போட்டியிட்டனர், உண்மையில் அவர்களுடைய சுற்றுச்சூழலின் இயற்கையான சுழற்சிகளுக்குள் நுழைந்தனர். இருகால்கள் உயிரினத்தின் வளர்ச்சி, தமது பின்னங்கால்களால் ஊன்றி நிற்கும், திறன் அவர்களுடைய கருவிகளையும் ஆயுதங்களையும் கையாளுவதற்கு அவர்களுடைய கரங்களை விடுவித்தது, அது விரைவிலேயே இப்போது அவர்கள் வகிக்கும் மேலாதிக்க நிலைக்கு இட்டுச்சென்ற புதிய பரிணாம வளர்ச்சியின் அடியெடுத்து வைப்பாக இருந்தது.
அவர்கள் அனைத்துவகை உணவுகளையும் உண்கிறவர்களாக இருந்தார்கள், மேலும் அவர்கள் வேட்டையாடிச் சேகரிப்பதை உணவை அடையும் முறையாகப் பயன்படுத்தினார்கள். உணவைச் சேகரிப்பதில் அவர்கள் பன்றிகள் மற்றும் பெரிய பறவைகள் போன்ற விலங்குகளுடன் போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். பன்றிகள் தாம் உண்ணக்கூடிய சிறுதீனிகளுக்காக நிலத்தை மூக்கால் தோண்டிக் கொண்டிருந்தன, பறவைகள் தாவரங்களின் பழங்களை உணவாக்கிக் கொண்டிருந்தன. பெரும்பாலான சூழ்நிலைமைகளில் போட்டி மிகவும் இலகுவாகத்தான் இருந்தது ஆனால் காலநிலை அழுத்தச் சூழ்நிலைகளில் (எ.கா.நீண்ட வறட்சிக் காலம்) அது தீவிரமாக இருந்தது. வேட்டையாடுவது இன்னொருபுறம் சிக்கலானதாக இருந்தது. அது உயர்தரமான உணவைக் கொடுத்தது ஆனால் அது பிற ஊனுன்னிகளுடன் நேரடியான போட்டியாக இருந்தது. இங்கு ஆயுதங்களைப் பயன்படுத்துதல் சந்தேகத்துகிடமின்றி மனிதர்களுக்கு போட்டியிடுவதற்கு கூடுதலாக உதவக்கூடியதாக இருந்தது. மனிதர்கள் எப்போதும் பிற ஊனுன்னிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளக் கூடியவர்களாகவும் தங்களுடைய இரையைப் பெறுவதற்குத் தாக்கக் கூடியவர்களாகவும் ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடியவர்களாகவும் இருந்தார்கள் அது தெளிவாகவே வெற்றிகரமான ஒரு செயலுத்தியாக இருந்தது, மனிதர்கள் பூமியின் பலபகுதிகளுக்கு வேகமாகப் பரவினார்கள்.
மனித இனம் தோன்றுதல்
தொடக்கத்தில் சிறிய எண்ணிக்கையில் ஒருபடித்தான மனித இனக் குழுவின் பரிணாம வளர்ச்சியின் தோற்றம் இருந்தது படிப்படியாக அறிவுபெற்ற மனிதர்களின் மேலாதிக்கம் தோன்றியது. முதலில் ஆப்பிரிக்காவில் தொடங்கி, பூமியின் நிலம் சார்ந்த மேற்பரப்பின் அனைத்துப் பகுதிகளிலும் விரைவாகப் பரவினார்கள். மனித உயிரினத்தின் மேலாதிக்கமும் அதன் சுற்றுச்சூழலின் மீதான தாக்கமும் காரணமாக அறிவுபெற்ற மனிதர்களின் வரவுக்கும் உலகின் பலபகுதிகளில் பெரிய பாலூட்டிகள் பரவலாக அழிந்ததற்கும் தொடர்பிருக்கிறது என்று கூறப்படுகிறது. இருப்பினும், மனிதர்கள் உணவுக்கான தாவரங்களை பயிரிட்டது, அதாவது விவசாயம், மனித இனத்தின் நடத்தையில் மிகவும் பாரதூரமான மாற்றத்தை ஏற்படுத்தியது. ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் பல்வேறுபட்ட பரந்துவிரிந்த பகுதிகளில் குறைந்தபட்சம் ஆறு தனித்தனி நிகழ்வுகளில் விவசாயம் தோன்றியது. அதேநேரத்தில் நிலத்தை உழுவதற்கான கற்கருவிகள் நேர்த்தியாகச் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன, அதனால் பயிர் செய்வதற்குப் பொருத்தமான பகுதிகளில் மனிதர்கள் குடியேறியதால் தொடக்க கால சமுதாயங்கள் இப்போது சுற்றுச்சூழலின் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. ஏறத்தாழ அதே நேரத்தில் வேட்டையாடுதல் தேவைக்கு மிகுதியானதாக ஆனதால் விலங்குகள் பழக்கப்படுத்தப்பட்டன.
விவசாயம் வளர்ச்சிபெற்று, உலகெங்கும் பரவியதால். பெரிய பெரிய குடியேற்றங்களின் வளர்ச்சியுடன் மக்கள்தொகையும் அதிகரித்தது, அது உணவு உற்பத்திக்கும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த அதன் நுகர்வுக்கும் இடையில் பௌதீகரீதியான பிளவுக்கு இட்டுச் சென்றது. உணவு கிராமப்பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்டது, பின்னர் தொலைதூர நகர்ப்புறப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதன் பின்விளைவாக வளிமண்டலத்திலிருந்தும் மண்ணிலிருந்தும் தாவரங்களாலும் மறைமுகமாக தாவரங்களை நுகர்ந்த விலங்குகளாலும் பெறப்பட்டிருந்த ஊட்டச்சத்துக்கள் நகர்ப்புற சமூகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன, ஊட்டச்சத்து சுழற்சியை நிறைவு செய்யக்கூடிய கழிவுப் பொருட்கள் திரும்பக் கொண்டுவரப்படவில்லை.
இந்த நிகழ்ச்சிப்போக்கு தொடர்ந்ததால், குறிப்பாக நகர்மயமாக்கல் தலைசுற்றச் செய்யும் மட்டத்தை எட்டிய தொழில்புரட்சி காலத்தின் போது, விவசாயத்திற்கான இடர்ப்பாடுகள் பல்கிப்பெருகின, மேலும் மண்ணில் மூலவளங்களின் அழிவை ஈடுகட்டுவதற்கான முயற்சியில் பல்வேறு தொழில்நுட்ப உத்திகள் வளர்த்தெடுக்கப்பட்டன.
மார்க்ஸ் வருகிறார்
மனிதர்களுக்கும் பூமிக்கும் இடையிலான உயிர்ப்பொருளாக்கச் செயல்பாட்டு உரையாடலைப் பற்றியும், மனிதன் “அவனுடைய சொந்த செயல்பாடுகள் மூலமாக தனக்கும் இயற்கைக்கும் இடையிலான உயிர்ப்பொருளாக்கச் செயல்பாட்டில் இடைநின்று இணைக்கிறான், ஒழுங்குபடுத்துகிறான், கட்டுப்படுத்துகிறான்\” மேலும் அவ்வாறு செய்வதன் மூலம் நிலவிக் கொண்டிருந்த சுழற்சிக்கு இடையூறை ஏற்படுத்தி, உயிர்ப்பொருளாக்கச் செயல்பாட்டில் பிளவினை உருவாக்கியுள்ளான் என்றும் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். விவசாயம் தொழில்மயமாக ஆனதால் சந்தையும் அதன் உற்பத்திப் பொருட்களை மேலும் மேலும் நகரங்களுக்கு அனுப்பிவைத்தது, அதனால் ஊட்டச்சத்துக்கள் மண்ணுக்குத் திரும்புவது குறைந்தது. மூலதனம் தொகுதி ஒன்றில் மார்க்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“முதலாளித்துவ விவசாயத்தில் அனைத்து முன்னேற்றமும் தொழிலாளரின் உழைப்பைப் பறிக்கும் கலையில் மட்டுமல்லாது, மண்ணின் வளத்தையும் பறிக்கும் கலையிலும் முன்னேற்றமாகும் … எனவே முதலாளித்துவ உற்பத்தி தொழில்நுட்ப உத்திகளையும் உற்பத்தியின் சமூகச் செயல்பாட்டின் அளவையும் மட்டுமே வளர்த்தெடுக்கிறது, உடன்நிகழ்வாக அனைத்து செல்வங்களுக்கும் மூலாதாரமான -- மண்ணையும் மற்றும் தொழிலாளரையும் -- சீர்குலைக்கிறது.”
முதலாளிகளால் தொழிலாளரின் உபரி உழைப்பு அபகரிக்கப்படுவதன் மூலம் தொழில்துறை உற்பத்தி அதன் தொழிலாளர்களைச் சுரண்டுவதைப் போலவே, முதலாளித்துவம் மண்ணிலிருந்து அதன் ஊட்டச்சத்துக்களை அபகரிக்கிறது முதலாளித்துவம் மண்ணை மதிப்பிடும் திறனை மட்டுமே கொண்டது, பரந்த உயிர்க்கோளத்தை விரிவாக்குதன் மூலம் பணடங்களை மிகுதியாக உற்பத்தி செய்வதற்கும் முதலாளிகளின் செல்வத்தை அதிகரிக்கவும் அது பங்களிப்புச் செய்கிறது. அது சுற்றுச்சூழலைப் பற்றி ஒர் விடயமாகவே கருதுவதில்லை, மூலவளங்களின் இழப்பு, தொழிலாளர்களை மொத்தமாக அழித்து விடுதல், அல்லது உற்பத்தியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் கழிவு ஆகியவற்றின் காரணமாக பண்டங்களின் உற்பத்தி தடுக்கப்படும் என்றால் மட்டுமே முதலாளித்துவம் மாசுபடுத்தலைப் பற்றிக் கவலைப்படுகிறது.
முதலாளித்துவம் சுற்றுச்சூழலை மீட்கிறது, அதில் முதலீடு செய்கிறது என்றால், அது உற்பத்திக்குத் தேவையான குறைந்தபட்ச மூலவளங்களைப் பராமரிப்பதற்காக இருக்கும் அல்லது சுற்றுச்சூழல் பணியில் இலாபம் ஈட்டுவதற்காக இருக்கும். அதன் விளைவாக பெருமளவு காடுகள் அழிப்பு போன்ற பிரச்சனைகள் எழுகிறபோது, முதலாளித்துவம் ஒற்றைத் தன்மை கொண்ட தோட்ட மரங்களை நடுவதன் மூலம், அவை விரைவில் கட்டுமான மரங்களுக்குப் பயன்படும் என்ற நம்பிக்கையில் அதற்குப் பதிலளிப்புச் செய்கிறது. அல்லது மறுசுழற்சி நிகழும் இடங்களில் இலாபகரமாக இருக்கும் அளவுக்கு மட்டுமே செய்கிறது, உலகின் வடக்கின் பெரும்பகுதியில் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை, ஆனால் கழிவுகளை வெளிநாடுகளில் நிலத்தில் கொண்டு சேர்க்கும் கழிவு நிறுவனங்கள் அதன் மூலம் இலாபம் ஈட்டிக் கொள்கின்றன. முதலாளித்துவம் இயற்கையை மேலும் மேலும் பண்டங்களை உற்பத்தி செய்வதில் இணைத்துக் கொள்ளப்படும் ஒன்றாகவே பார்க்கிறது, அதன் மூலம் சமூக மற்றும் இயற்கை உயிர்ப்பொருளாக்கச் செயல்பாட்டுக்கிடையில் பிளவை எப்போது அதிகரிக்கச் செய்கிறது, இயற்கையிலிருந்து மிகுதியாக எடுத்துக்கொண்டு மிகவும் குறைவாகவே திருப்பிக்கொடுக்கிறது. இந்த அழிவைத் தடுத்து நிறுத்துவதற்கு முதலாளித்துவம் இலாபத்தை முன்னிறுத்தியே அனைத்து வகையான உத்திகளையும் முயற்சி செய்கிறது.
பிளவை எதிர்கொள்ளுதல்
மார்க்ஸ் குறிப்பிட்ட காலத்தில் இருந்ததைவிட இந்தப் பிளவுகள் ஒவ்வொரு ஆண்டும் பெரிதாக ஆகிக்கொண்டே செல்கின்றன, அவை இயற்கையுடனான நமது உறவுகளின் அனைத்து அம்சங்களையும் பாதிக்கின்றன. விவசாயம் பூமிப்பரப்பின் சுற்றுச்சூழலில் தொடர்ந்து கழிவுகளைக் கொட்டிவருகிறது –காடுகள் அழிக்கப்படுகின்றன, அதனால் இறைச்சிப் புரதத்தின் உற்பத்தி நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டற்றுத் தொடர்கிறது. நீரியல் சுற்றுச்சூழல் தொழில்துறைரீதியான அளவுக்கு மிஞ்சிய மீன்பிடித்தலால் பேரழிவுக்கு உள்ளாக்கப்படுகிறது, புதைபடிவ எரிபொருளிலிருந்து வரும் கரியமிலவாயுவினால் மற்றுமின்றி தொழில்துறை நிகழ்ச்சிபோக்குகளால் ஏற்படும் கழிவு வாயுக்கள் மூலமாகவும் வானியல் சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்படுகிறது.
ஒட்டுமொத்த மனித இனத்துக்குமான இருத்தலியல் நெருக்கடியின் சாரத்தை முதலாளித்துவத்தின் கீழ் சூழலியல் பேரழிவாகக் குறிப்பிடும் இஸ்த்வான் மெசாரஸ் பின்வருமாறு எழுதுகிறார்:
“முதலாளித்துவ அதிகார அமைப்பின் அடிப்படை முரண்பாடு, அதனால் ‘முன்னேற்றத்தை’ அழிவிலிருந்து பிரிக்கமுடியாது, அல்லது ‘முன்னேற்றத்தை’ கழிவிலிருந்து பிரிக்க முடியாது – எப்படியாயினும் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும். அது உற்பத்தித்திறனை எந்த அளவுக்கு மிகுதியாகக் கட்டவிழ்த்து விடுகிறதோ அந்த அளவுக்கு அழிவு சக்திகளையும் மிகுதியாகக் கட்டவிழ்த்துவிடும். உற்பத்தியின் அளவை எந்த அளவுக்கு மிகுதியாக விரிவாக்குகிறதோ அந்த அளவுக்கு மூச்சுத்திணறச் செய்யும் கழிவுக் குவியல்களுக்குள் அனைத்தையும் புதைத்துவிடும்.”
இன்று முதலாளித்துவத்தால் உருவாக்கப்படும் அழிவு காலநிலை மாற்றத்திலும் இயற்கைச் சுற்றுசூழல் அழிவிலும் வெளிப்படுகிறது. நாம் இப்போது மிகப்பெரிய அளவில் நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலியல் பிளவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமகால சுற்றுச்சூழல் அழிவு, இந்தப் பிளவை அங்கீகரித்துப் பகுப்பாய்வு செய்வதற்கு மார்க்சின் கூற்றை மையமாக எடுத்துக் கொள்ளச் செய்கிறது. இந்தப் பிளவு முதலாளித்துவத்தின் கீழ் சரிசெய்ய முடியாதது என்று காட்டுவதன் மூலம், சூழலியல் சோசலிஸ்டுகள் ஒரு புதிய அமைப்பைக் கட்டியமைக்க வேண்டியதன் தேவையை மார்க்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
- கிரேக் பீகின்
நன்றி: பிரிட்டனைச் சேர்ந்த சோசலிச அமைப்பான 21 ஆம் நூற்றாண்டில் புரட்சிகர சோசலிசம்., மற்றும் ஜனதா வீக்லி.
தமிழில்: நிழல்வண்ணன்