அனகாபுத்தூரில் அமைதியாக வாழ்ந்து வந்த ஏழ்மைநிலை மக்கள் தற்போது தங்கள் நிலத்தைப் பாதுகாக்க போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். தங்கள் உழைப்பைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அவர்களின் வாழ்க்கையில் “நீங்கள் இருக்கும் வீடு அடையாறு ஆக்கிரமிப்பு பகுதி, ஆகையால் இந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு இடம்பெயருங்கள்” என்ற செய்தி பேரிடியாக இறங்கியுள்ளது.
அனகாபுத்தூரில் ஆக்கிரமிப்பு இடம் என்று அரசாங்கம் கூறும் இடமான தாய்மூகாம்பிகை நகர், சாந்தி நகர், காயிதே மில்லத் நகர், டோபிகானா பகுதி போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் பல ஆண்டுகளாக அங்கே வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வீட்டைக் காலி செய்து அரசு கொடுக்கும் அடுக்கு மாடி கட்டிட வீடுகளுக்கு செல்லுமாறும், மீறி தாமதப்படுத்தினால் அரசு அதிகாரிகள் வேலை செய்வதை தடுத்ததாக இவர்கள் மீது வழக்குப் பதிய போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர் தாம்பரம் நகராட்சி அதிகாரிகள். அரசு அதிகாரிகள் கடுமையாக நடந்துகொள்வது ஏன்? திடீரென வீடுகளை இடிக்க சொல்ல வேண்டிய கட்டாயம் என்ன? அரசாங்கத்தால் தரப்பட்ட அனைத்து ஆவணங்களும் (குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, மின் இணைப்பு) அனைத்தும் சரியாக இருக்கும்போது தற்போது ஏன் ஆக்கிரமிப்பு என்று சொல்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.இந்த இடத்தில் இருந்து வெளியேறி அரசு கட்டி கொடுத்துள்ள அஞ்சுகம் நகர் அடுக்குமாடி குடியிருப்பிற்கு செல்ல முதலில் வருபவர்களுக்கே முதலிடம் எனவும் இம்மக்களிடம் சொல்லப்பட்டிருக்கிறது. அன்றிலிருந்து அனகாபுத்தூர் மக்களின் அன்றாட வாழ்க்கையே தலைகீழாக மாறி விட்டது.
இதில் அதிகம் பாதிக்கப்படுவது முதலில் பெண்களும் குழந்தைகளும் தான். குடும்பத்திற்காக பெண்கள் எவ்வளவு கடினமான பணியையும் செய்யத் தயாராக இருந்தாலும், குடியிருக்கும் நிலமே உங்களுக்கு சொந்தமில்லை என சொல்லி தங்களை நிலமற்றவர்களாக மாற்ற அரசே முன் வருவது அவர்களை நிலை குலையச் செய்கிறது. தன் குடும்பமும் மக்களும் அமைதியாக வாழ, போராடுவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
“நான் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை என் எதிரிதான் தீர்மானிக்கிறான்” என்றார் தேசியத் தலைவர். அப்படி கையில் எடுத்தது தான் இவர்களின் போராட்டம்.
19ம் நூற்றாண்டில் ரொட்டிக்காவும், அமைதிக்காகவும் ரஷ்ய தெருக்களில் பெண்கள் ஒன்று கூடி நின்றனர். ஒரு தாயின் நோக்கம் தனது குழந்தைகளின் பசியை போக்குவது, இரண்டாவது நாட்டு மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதை வேண்டியே தன்னெழுச்சியாக வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தனது குடும்பத்திற்காக எதையும் தாங்கும் வலிமைகொண்டவர்கள் பெண்கள். அதே வேளையில் தனது குடும்பம் இன்னலுக்கு உள்ளாகும் போது அதை களைய ஆயத்தமாவது பெண்கள்தான். ஆதிகாலத்தில் தாய் வழிச்சமூகமாக வாழ்ந்த காலத்தில் பெண்கள் இனத்தை காக்க உணவிற்காக வேட்டையாடியும், விலங்குகளிடமிருந்து பாதுகாக்க கருவிகொண்டு, காத்து நின்று, தம் உயிர் போனாலும் குடும்பத்தையும் இனத்தையும் காக்கும் பணியை முன்னெடுத்து சென்றவர்கள் என்ற மரபில் வந்தவர்கள் என்பதை நம் கண் முன்னே கொண்டு வந்தது அனகாபுத்தூர் பெண்கள் எழுச்சி.
பெண்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் பெரும்பாலும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை என்பதை நிரூபித்து வருகிறார்கள் அனகாபுத்தூர் பெண்கள்.
அனகாபுத்தூர் மக்களின் இருப்பிடத்தை ‘அடையாறு ஆக்கிரமிப்பு’ என சொல்லி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்ற தாம்பரம் நகராட்சி கடந்த 5 மாதங்களாக அவர்களுக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறது. இதனை தொடர்ந்து மே பதினேழு இயக்கத் தோழர்கள் அவர்களை நேரில் சந்தித்து அவர்களின் உரிமைக்காக போராட தொடர்ந்து உடன்நிற்போம் என உறுதி அளித்தனர். இதன் தொடர்ச்சியாக அனகாபுத்தூர் மக்களுக்காக 12.10.2023 வியாழன் அன்று மாலை அனகாபுத்தூரில் மே17 இயக்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மாலை 6 மணிக்கு துவங்கவிருந்த கூட்டத்திற்கு, மக்கள் 5 மணிக்கே வருகை புரிந்தனர். அதில் 95% பேர் அனகாபுத்தூர் பெண்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது. அதில் இரண்டு பெண்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தனர். அவர்கள்தான் அனைத்து வீடுகளுக்கும் சென்று பெண்களைச் சந்தித்து, “நமக்காக மே பதினேழு இயக்கம் எடுக்கும் இந்த பொதுக்கூட்டத்தில் நாம் அனைவரும் கலந்துகொள்ள வேண்டியது முக்கியமானது” என அனைவரிடமும் பேசியிருக்கின்றனர். மேலும் போராட்டத்தில் வந்து பங்கேற்குமாறு அனைவரிடமும் எடுத்துச் சொல்லி இருக்கின்றனர். கூட்டத்திற்கு வருகின்ற பெண்களை இருக்கையில் வரிசையாக அமரவைத்து அவர்களுக்கு எந்த வித அச்ச உணர்வும் வராமல் கவனித்து கண்காணிப்பு வேலையைச் செய்தனர். பொதுக்கூட்டம் நிறைவு பெரும் வரை, நின்று கொண்டே அனைத்து பெண்களையும் கவனித்து கொண்டும், இயக்கத்தோழர்கள் பேசுவதை கவனித்துக்கொண்டும், கூட்டத்தில் எந்த சலசலப்பு வராதவாரும் கவனித்து கொண்டனர்.
மேலும் “அனைவரும் சாதி, மதம், கட்சி கடந்து ஒற்றுமையாக இருந்தால் தான் நம் நிலத்தை காப்பற்ற முடியும்” என்ற முக்கியமான கருத்தையும் அவ்விரு பெண்களும் வலியுறுத்தினர்.
பொதுக்கூட்டத்திற்கு வந்த நடுத்தர வயது பெண்ணிடம் மே பதினேழு இயக்கத் தோழர் ஒருவர் பேசியபோது அவர் கூறியது:
“அனகாபுத்தூரில் எங்கள் இடத்தில் நாங்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகிறோம். கடந்த 5 மாதங்களாக மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள், காவல்துறையினர் என பலரும் வந்து இடத்தை விட்டு செல்லுமாறு கூறுகின்றனர். மேலும் நிலத்தை அரசுக்கு கொடுத்துவிட்டு, அடுக்கு மாடி குடியிருப்புக்கு செல்லுமாறு வற்புறுத்துகின்றனர். காலங்காலமாக வசித்து வரும் வீட்டின் இடத்தை விட்டுப் போக மனதே வரவில்லை. நினைத்துப் பார்த்தாலே நெஞ்சைடைத்து விடுவதுபோல் இருக்கிறது” எனக் கண்ணீர் விட்டபடி கூறினார்.
அடுத்து 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி பேசுகையில், “நான் ஒரு இதய நோயாளி. தற்போது 4வது மாடியில் வேறுவீடு தருவதாக சொல்கின்றனர். என்னால எப்படி படிக்கட்டுகள் ஏற முடியும்? லிப்ட் கூட இல்லை. ஏற்கெனவே உடல் நலமில்லாத எனக்கு இந்த மனப்புழுக்கத்தால் இன்னும் உடல்நிலை கெட்டு மரணத்தை உண்டாக்கிவிடும் போல் இருக்கிறது” என்று கூறினார்.
அடுத்து பேசிய ஒரு பெண்மணி (பெயர் லட்சுமி), அவருக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த எட்டு வயது சிறுமியைக் கைகாட்டி, “இந்த பாப்பாவுக்கு அம்மா இல்லை, அப்பா மது குடிப்பவர். எப்போதும் மது குடித்து வந்து பிரச்சினை செய்பவர். அதனால் இந்தக் குழந்தையை அவரது பாட்டிதான் வளர்க்கிறார். பாட்டி பத்மாசேசாத்திரி பள்ளிக் கூடம் நடத்த வில்லை. வீட்டருக்கே உள்ள கடைத்தெருவில் கருவாடு விற்கும் தொழில் செய்து வருகிறார். அதுவும் கடை போட்டு அமரவில்லை. இரண்டு கற்களை வைத்து ஒரு பலகை போட்டு கீழே தரையில் அமர்ந்து கருவாடு விற்கிறார். அதன் மூலம் வரும் சொற்ப வருமானத்தில் தனது பேத்தியை படிக்க வைக்கிறார். மாலை பள்ளி விட்டு வந்ததும் தன் கடையருகே தன் கண்முன்னே விளையாட வைத்து அருகில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு சமைத்துக் கொடுத்து வளர்த்து வருகிறார். கடை வைத்திருக்கும் இடத்திற்கும் வீட்டுக்கும் அதிக தூரம் இல்லை. மேலும் தனது உடல் நலனில் அக்கறை கொள்ளாததால் எடை கூடி அதிகம் நடக்க இயலாத நிலையிலும் குடும்பத்தின் நிதிநிலையை சமாளிக்க, பேத்தியை படிக்க வைக்க பாடாய் படுகிறார்.
இந்த நிலையில் இருக்கும் இவரையும் “வீட்டை இடித்து விடுவோம், காலி செய்து கொண்டு அஞ்சுகம் நகரில் அடுக்கு மாடி குடியிருப்பிற்கு செல்லுங்கள்” என அச்சுறுத்துவதால் இவரது வாழ்வாதாரம் என்ன ஆகும்? இங்கே அவர் குடியிருக்கும் வீட்டிற்கும் கடைக்கும் அதிக தூரம் இல்லை. ஆனால் புதிய இடத்திற்கு சென்றால் இவரால் தனது வியாபரத்தை தொடர முடியாது. பேத்தியின் படிப்பு, எதிர்காலம் என்ன ஆகும் என்பது கேள்விக் குறிதான். இதனை நினைத்து நினைத்து மேலும் மன உளைச்சலில் அவர் இருக்கின்றார்” என்று கூறினார்.
அடுத்து சலவை தொழில் செய்யும் பெண் ஒருவர் கூறுகையில் :
“நாங்கள் 50 வருடங்களுக்கு மேலாக இங்கே குடியிருக்கிறோம். என் கணவர் இருந்தபோது துணிகளை துவைத்து iron செய்து கொடுக்கும் தொழிலை செய்து வந்தோம். எங்களுக்கு இரண்டு பிள்ளைகள். நீண்ட காலம் ஓலை வேய்ந்த வீட்டில் தான் இருந்தோம். பகலில் துணிகளை சலவை செய்து, காய வைத்து, எடுத்து வைத்தப் பிறகு இரவு நேரங்களில் (கரி போட்டு) இஸ்திரி போடும் வேலையை செய்வார் எனது கணவர். நாங்கள் தூங்குவதற்கு இரவு நெடுநேரம் ஆகி விடும். இப்படி இரவு பகலாக கடினமாக உழைத்து சிறிது சிறிதாக எறும்பு சேர்ப்பது போல் சேர்த்து வைத்து கல்லு வீடு கட்டினோம். சிறிது காலத்திலேயே எனது கணவர் இறந்து விட்டார். அவர் சென்ற பிறகு என்னால் சலவை செய்ய முடியவில்லை. இஸ்திரி செய்து தருவது மட்டுமே செய்கிறேன். நாள்முழுவதும் நின்றபடி வேலை செய்வதால் எனது கால்களும் முட்டியும் வீங்கி விடுகிறது. இந்த நிலையில் இருக்கும் என்னை தொலைவில் இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புக்கு போகச் சொன்னால் எனது நிலை தலைகீழாக மாறிவிடும். அதுவுமில்லாமல் எனது கணவர் இந்த வீட்டை பார்த்து பார்த்துக் கட்டினார். ஒவ்வொரு செங்கல்லும் அவர் பெயரை சொல்லும். அவரின் நினைவைத் தாங்கி இருக்கும் வீட்டில் அவரது மூச்சுக்காற்று இருக்கிறது. அவரது நினைவில் வாழும் இந்த வீட்டை இடிப்போம் என்று சொன்னதுமே எனது இதயத்துடிப்பு அதிகமாகி விட்டது” என்று கண்ணீர் விட்டுக் கதறினார்.
ஒரு குழந்தை தன தாயைத் தவிர வேறு யாரிடம் இருந்தாலும் அதற்கு தூக்கம் வராது. அசௌகர்யத்தால் நெளியும். கடைசியில் அழ ஆரம்பித்து விடும். பிறகு தன் தாயின் ஸ்பரிசத்தை உணர்ந்து அவர் மடியில் படுக்க வைத்த பிறகுதான் அழுகையை நிறுத்தும். அதுபோல்தான் அங்கிருக்கும் மக்களின் எண்ணமும் இருக்கிறது. அதாவது “சிறிய வீடாக இருந்தாலும் ஓடு வீடாக இருந்தாலும் காலங்காலமாக வாழ்ந்த இடத்தில், சோறு இல்லையென்றாலும் பச்சைத் தண்ணீரை குடித்து நிம்மதியாக படுத்துத் தூங்குவோம். ஆனால் அந்த நிம்மதியைக் குலைத்துவிட்டார்கள். எப்போது வந்து வீட்டை இடித்துவிடப் போகிறார்களோ என்ற பயத்திலேயே பித்து பிடித்தது போல் இருக்கிறோம். சாப்பாடுகூட சாப்பிட பிடிக்கவில்லை. அப்படியே சாப்பிட்டாலும் ருசி இல்லை. இருக்கும் இடத்தை விட்டுப் போக மனம் வரவில்லை. மேலும் அரசுக் கட்டி கொடுத்து குடிபோகச் சொல்லும் அடுக்குமாடி குடியிருப்பு என்பதே ஒரு கூண்டுக்குள் மொத்த பறவைகளையும் அடைப்பது போல்தான். ஒரு தெருவில் வரிசையாக இருக்கும் வீட்டில் வசிப்பதற்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். முதலில் நல்ல காற்றே சுவாசிக்க முடியாது. சுதந்திரமாக இல்லாமல் அடைபட்டு இருப்பதுபோல் இருக்கும். ஆத்திர அவசரத்திற்கு இறங்கிப் போக முடியாது. வேலைக்குப் போவதும் கூட கடினமாகத் தோன்றும். பள்ளி செல்லும் மாணவர்களின் படிக்கும் பள்ளிகள் மாறும். அதனால் மாணவர்கள் உளவியல் சிக்கலில் சிக்கநேரிடும். அதனால் பள்ளிக்கு செல்லும் ஆர்வம் கூட குறைய ஆரம்பித்து விடும்” எனவும் அம்மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
இவற்றை எல்லாம் தாண்டி அரசு கட்டிக் கொடுத்துள்ள அஞ்சுகம் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்திருப்பதே நீர் நிலையை ஒட்டித்தான் இருக்கிறது. அதுவும் இவர்கள் தற்போது இருக்கும் இடத்தைக் காட்டிலும் ஆற்றை ஒட்டிய பகுதியிலேயே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அஞ்சுகம் நகர் குடியிருப்பு நான்கு மாடிகள் கொண்டது என்றாலும் லிப்ட் வசதி இல்லை, காரணம் லிப்ட் வைத்தால் அதை தாங்கும் கட்டிடமாக வலுவாக இல்லை என்றும் அம்மக்கள் கூறுகிறார்கள். மேலும் கையால் அழுத்தி எடுத்தால் அப்படியே உதிர்ந்து கொட்டும் நிலையிலும் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இவர்கள் நிலத்தை எடுத்துக் கொண்டு உயிருக்கே உத்திரவாதம் இல்லாத குடியிருப்பில் வாழச்சொல்வதென்பதும் பாசிச அடக்குமுறையே .
சமூக அடித்தட்டு நிலையில் உள்ள மக்களை இதுபோன்று அலைகழித்து அவர்களின் நிம்மதியைக் குலைப்பது என்பது மிகவும் மோசமான செயல்.
மேலும் “ஆளும் அரசு ஏழை, எளிய மக்களின் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டுமே ஒழிய அவர்களின் வாழ்விடங்களை அழித்து மரங்கள் நட்டு பூங்கா வளர்ப்பதால் எந்த நன்மையும் வந்துவிடாது. மரங்கள் நடுவதற்கு இடமா இல்லை? அனகாபுரத்தில் உள்ள மக்கள், நாம் ஏதோ அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியிலிருந்து முதலில் வெளிவந்து விடுங்கள்” என பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கேட்டுக் கொண்டார்.
இது போன்ற எளிய மக்களின் நிலத்தைப் பிடிங்கி அவர்களை நிலமற்றவர்களாக மாற்றுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும் சென்னையின் பூர்வகுடிகளை அகற்றி சிங்கார சென்னையாக அழகுபடுத்த முயலுவது என்பது கண்கள் இல்லாமல் இயற்கையை ரசிப்பது போல்தான். இதே கறார்தனத்தை கார்ப்பரேட் கம்பெனிகளிடமும் அரசு கடைபிடிக்குமா என்பது கேள்விக்குறிதான். ஆனாலும் இந்த அராஜக போக்கை கண்டும் காணாமல் எங்களால் இருக்க இயலாது. எளிய மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக, மே 17 இயக்கம் என்றும் களத்தில் இருக்கும் என்பதை சொல்லிக் கொள்கிறோம்.
- மே பதினேழு இயக்கம்