சித்திரவதைக்கு எதிரான உலக நிறுவனம் (OMCT), உலக நாடுகளில் அமைந்துள்ள 200 குடிமைச் சமூக அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் வலையமைப்பானது கொடும் சித்திரவதைகளுக்கு எதிராகவும், ஆபத்தில் உள்ளவர்களை பாதுகாப்பதற்கும், மனிதநேயமற்ற நடவடிக்கைகளுக்கு எதிராகவும், உலகெங்கிலும் உள்ள மனித உரிமைக் காப்பாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் போது, அவர்களுக்கு ஆதரவாகவும் பாதுகாப்பதற்கும் துணை நிற்கிறது. பெண்கள், குழந்தைகளை, பழங்குடியினர், புலம் பெயர்ந்தோர், பிற ஒடுக்கப்பட்ட சமூகங்கள் உட்பட பாதிக்கப்படக் கூடியவர்களை பாதுகாப்பதற்காக பணியாற்றுகிறது.

அண்மையில் மார்ச் 2023 மாதத்தில், தமிழ்நாட்டின் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தைச் சார்ந்த அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி ஆகிய காவல் நிலையங்களில் காவலர்களால் நடத்தப்பட்ட பல்வேறு கொடூர சித்திரவதை சம்பவங்களை கேள்வியுற்று பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு 11.04.2023 அன்று மின்னஞ்சல் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இக்கடிதம் தமிழாக்கம் செய்யப்பட்டு தங்களுக்கு பகிர்கின்றோம்.

***

திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் காவல் உட்சரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. பல்வீர்சிங் இ.கா.ப மற்றும் இதர காவல்துறை அலுவலர்களால் நடந்தப்பட்ட உடல்ரீதியான, பாலியல் ரீதியான கொடூரமான சித்திரவதை குறித்த திறந்த மடல்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திருமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,

    சித்திரவதைக்கு எதிரான உலக நிறுவனம் (OMCT) மிக அதிக குடிமைச் சமூக அமைப்புகளை கொண்ட மிகப் பெரிய வலையமைப்பாகும். இவ்வமைப்பு சித்திரவதை, ஒட்டு மொத்த இன இழிப்பு, கட்டாயமாக காணாமல் போதல், முறையற்ற சிறை வைப்பு, மனிதாபிமானமற்ற தண்டனை, தரந்தாழ்ந்த நடைமுறைகள் போன்ற மனிதநேயமற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் அமைப்பாகும். மேற்கண்ட மனிதாபிமானமற்ற சித்திரவதைகளுக்கு எதிராக செயலாற்றி வரும் மனித உரிமைக் காப்பாளர்களுக்கு உரிய ஆதரவும், பாதுகாப்பும் அளித்து வருகிறது. அண்மையில் மார்ச் 2023 நாளன்று தமிழ்நாட்டின் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தைச் சேர்ந்த அம்பாசமுத்திரம், வி.கே.புரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில் காவலர்களால் நடத்தப்பட்ட பல்வேறு கொடூர சித்திரவதை சம்பவங்களை கேள்வியுற்று பெரும் அதிர்ச்சிக்குள்ளானதே இம்மடல் எழுத காரணம்.

எங்களிடம் வரப்பெற்ற பத்து கொடூர சித்திரவதை தொடர்பான வழக்குகளில் அருண்குமார் என்ற இளைஞன் மற்றும் அவரது இளைய சகோதரர் 17 வயது சந்தோஷ்குமாரும் அடங்குவர். இருவரும் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் இருவரும் கடந்த 10.03.2023 அன்று கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் மீது வி.கே.புரம் காவல் நிலையத்தில் குற்ற எண் 65/2023 இன் படி ஒரு முதல் தகவல் அறிக்கையும், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் குற்ற எண்

49/2023 இன் படி ஒரு முதல் தகவல் அறிக்கையும், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் குற்ற எண் 69/2023 இன் படி ஒரு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டு இவர்கள் இருவரும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கைது செய்யப்படுகிறார்கள். உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. பல்வீர் சிங் இ.கா.ப., அவர்கள் கல்லால் தங்கள் பற்களை அடித்து உடைத்ததாகவும், பின்னர் இடுக்கி பயன்படுத்தி தங்கள் பற்களை பிடுங்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்களின் வாயில் கற்களை வைத்து கன்னங்களில் அடித்ததால் வாயில் காயம் ஏற்பட்டு கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் உதவி காவல் கண்காணிப்பாளர், இதர காவல் ஆய்வாளர்கள், காவல் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவல் அலுவலர்கள் என அனைவரும் அருண்குமாரின் தலை (ஏற்கனவே தலைப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போடப்பட்ட இடத்தில்), விரல்கள் மற்றும் பிட்டங்களில் நீண்ட குச்சியால் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

கூடவே இவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர சித்திரவதை பற்றி மருத்துவர்கள் அல்லது நீதித்துறை நடுவர் உட்பட வேறு யாரிடம் கூறினாலும், மீண்டும் சித்திரவதைக்கு உள்ளாகக் கூடும் என்று மேற்கண்ட காவல்துறை அலுவலர்களால் மிரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இளம் சிறார் நீதிக் குழுமத்தில் அருண்குமாரின் இளைய சகோதரர் சந்தோசையும் இன்னொரு சிறுவன் குணசேகரன் என்பவரையும் ஆஜர்படுத்திய பின் இருவரையும் அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பியுள்ளதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்ட எட்டு நாட்களுக்கு பின் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் அம்பாசமுத்திரம் மற்றும் வி.கே.புரம் காவல் நிலையங்களில் பாலியல் ரீதியாகவும் அவமதிக்கப்பட்டதாகவும் இவர்களின் பாலுறுப்பின் விதைப்பைகள் மீது பூட்ஸ் அணிந்த கால்களால் கொடூரமாக மிதித்ததாகவும் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரகாஷ் சிங் எதிர் இந்திய ஒன்றிய அரசு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, காவல்துறை சீர்திருத்தச் சட்டம், 2013இன் கீழ் ஏற்படுத்தப்பட்ட “மாவட்ட காவல் புகார் ஆணையத்தினை” திருநெல்வேலி மாவட்ட மாவட்ட ஆட்சியர் முறையாக பயன்படுத்தப்படவில்லை என எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் எதையும் சேரன்மாதேவி நீதித்துறை நடுவர் அவர்கள் முறையாக பதிவு செய்யவில்லை என்றும் எமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பரம்வீர்சிங் சைனி எதிர் பல்ஜித் சிங் (2020) வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவுகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் செயல்படுத்தப்படவில்லை. குறிப்பாக, காவல் நிலையத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், நுழைவாயிலில் கேமராக்கள், அவற்றை அணுகுவதற்கான உரிமை, மாவட்ட மற்றும் மாநில அளவிலான மேற்பார்வைக் குழுவை நிறுவுதல் பற்றி தெரிவிக்கும் சுவரொட்டிகள் வைக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மாநில / மாவட்ட அளவிலான மேற்பார்வை குழுவினை அணுகும் வாய்ப்பு குறித்து எங்குமே சொல்லப்படவில்லை என எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையமும் காவல் அடைப்பில் சித்திரவதை தொடர்ந்து நடைபெற்று வருவதை ஏற்றுக் கொண்டுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையமும் பல்வேறு குடிமைச் சமூக அமைப்புகளும், சித்திரவதை கொடுமைகளுக்கு எதிராக மிகச்சிறிய அளவிலேயே சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை வருத்தத்தோடு பதிவு செய்துள்ளன. இந்திய அரசு சர்வதேச அரங்குகளில் சித்திரவதை என்பது இந்தியக் கலாச்சாரத்திற்கு அன்னியமானது என்று சொல்லி வருவதோடு, ஐ.நாவின் சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கையை ஏற்புடைமை செய்வதாகும். சித்திரவதையை தடுப்பதற்கான உள்நாட்டுச் சட்டங்களில் மாற்றம் செய்வதாகவும் உத்தரவாதம் அளித்து வருகிறது. எனினும் அரசு எந்தவித நடவடிக்கைகளையும் இதுவரை எடுத்துவிடவில்லை என்பதே உண்மை. எனவே இந்திய அரசு சித்திரவதைக்கெதிரான நடவடிக்கைகளை எடுக்கவும், உரிய வகையில் உள்நாட்டு சட்டங்களில் மாற்றம் செய்யவும் இவ்வமைப்பு கோருகிறது.

குழந்தைகள் சுதந்திரத்தோடு வாழும் உரிமை பெற்றவர்கள். குழந்தைகளை காவலில் வைப்பது என்பது, அவர்கள் கேவலமான சித்திரவதைகளுக்கு இட்டுச் செல்லும் என்பதையே காட்டும். குறைந்த கால காவல் என்பது கூட குழந்தைகளின் அனைத்து வகை வளர்ச்சியையும் பாதிக்கும் என்பது உண்மை. குழந்தைகள் மீது ஏவப்படும் சித்திரவதைகள் ஏற்படுத்தும் தாக்கம் பெரிய வயதினர் மீது நடத்தப்படும் தாக்கத்தின் விளைவைக் காட்டிலும்அதிகமாகவே இருக்கும். எனவே தான் காவலில் வைக்கப்படும் குழந்தைகளை அணுகும் முறையில் மாற்றம் வேண்டும் என்றும், குழந்தைகள் மீது எவ்வித சித்திரவதைகளும் நடத்தக்கூடாது எனவும் அறிவுறுத்துகிறோம். குழந்தைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவதற்கான கடமை மாநிலங்களுக்கு உள்ளன.

எனவே சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை வேண்டிக் கொள்வதெல்லாம்,

  1. மேற்கூறிய அனைத்து வழக்குகளிலும் சித்திரவதை செய்ததாகக் கூறப்படும் குற்றவாளிகளை “தன்னிச்சையான புலனாய்வுக் குழுவினால்” மூலம் உடனடியாக விசாரித்து, வழக்குத் தொடுத்து, தண்டிக்க வேண்டும்.
  2. காவல் தடுப்பில் குழந்தைகளை அடைத்து வைப்பது தடுக்கப்பட வேண்டும். இந்தியாவின் சர்வதேச சட்டக் கடமைகளுக்கு ஏற்ப நாட்டின் சிறார் நீதிச் சட்டங்களை திறம்பட செயல்படுத்துவதை தமிழக அரசு உறுதி செய்தல் வேண்டும்.
  3. இந்திய தண்டனைச் சட்டம், சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 மற்றும் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் 2015 இன் விதிகள் இந்த வழக்கில் செயல்படுத்தப்படுவதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்.
  4. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் செலவில் மிக உயர்ந்த மருத்துவ மற்றும் பல் மருத்துவ பராமரிப்பு வழங்குதல் மற்றும் அவர்களின் மருத்துவ சிகிச்சையின் காரணமாக வேலை நாட்கள் இழப்புக்கான இழப்பீடு வழங்குதல் வேண்டும்.
  5. இந்திய உச்ச நீதிமன்றத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ள பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் 2015 மற்றும் சாட்சிகள் பாதுகாப்புத் திட்டம் 2018 - அத்தியாயம் IV A இன் விதிகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் பயனுள்ள பாதுகாப்பை தமிழக அரசு உறுதிசெய்திட வேண்டும்.
  6. சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சிகிச்சை அல்லது தண்டனைக்கு எதிரான ஐ.நா.வின் உடன்படிக்கையை இந்திய அரசு உடனடியாக ஏற்புறுதி செய்வதற்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும். உலகளாவிய காலமுறை மீளாய்வின் முதல், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது கூட்டங்களில் சித்திரவதைகள் தொடர்பாக தொடர்ச்சியாக இந்திய அரசிற்கு முன்வைத்த பரிந்துரைகளை இந்திய அரசு ஏற்கா நிலையில், இதனை அங்கீகரிப்பதற்கான அழுத்தங்களை தமிழக அரசு முன்வைத்திட வேண்டுகிறோம்.
  7. காவல் மற்றும் நீதிமன்றக் காவலில் நடைபெறும் சித்திரவதைகளைத் தடுப்பதற்கும், குற்றமாக்குவதற்கும் உள்நாட்டுச் சட்டத்தை இயற்றுமாறு கடுமையாகப் பரிந்துரைக்கிறோம்.

இத்திறந்த மடலில் தரப்பட்ட உண்மையான கரிசனைகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளவும், மேலும் இச்செய்திகள் பற்றிய மேலும் விளக்கம் வேண்டியிருப்பின் எப்போதும் உதவத் தயாராகவுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- ஜெரால்ட் ஸ்டேபராக், பொதுச் செயலாளர், சித்திரவதைக்கு எதிரான உலக நிறுவனம் – OMCT

Pin It