people 312காது திறந்து கேட்பது ஒரு வகை பரிணாமம். அது பெரும்பாலைய காதுகளுக்கு இன்னும் எட்டவில்லை என்பது தான் வருத்தம். கொஞ்சமாக பேசி நிறைய கேட்ட மனிதர்கள் தான் இந்த உலகை வழி நடத்தி இருக்கிறார்கள். அப்படியே உல்ட்டாகவா செய்தோர்.. வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கிறார்கள். வேடிக்கை பார்ப்பது அப்படி ஒன்றும் குற்றம் இல்லை என்றாலும்.. அது தொடரும் பட்சத்தில்... நம் வரை வந்த பரிணாமம் நம்மோடே நின்று விட வாய்ப்பிருக்கிறது.

ஒருவர் பேசுகிறார் என்றால் அதை காது கொடுத்து மட்டும் அல்ல இதயம் கொடுத்தும் கேட்க வேண்டும். அவர் என்ன பேசுகிறார் ஏன் பேசுகிறார் எதை பேசுகிறார் என்ற எந்த புரிந்துணர்வும் இன்றி உடனே அந்த பேசுபொருள் குறித்தான தன் அனுபவத்தை மொக்கையாக முன் வைப்பது சிறுபிள்ளைத்தனம். முதலில் ஆழமாக கேட்க வேண்டும். அதை அசை போட்டு... பிறகு அவர் முடித்து விட்டார் என்று உணர்ந்த பிறகு அதற்கு பதில் சொல்ல ஆரம்பிக்க வேண்டும். அதில் தான் கற்ற பின் நிற்க அதற்கு தக இருக்கிறது.

பேச பேசவே....அல்லது பேச்சை முடிக்கும் முன்னே தன் புராணத்தில்.. இப்படி தான் எங்கூர்ல... ஒரு நாள் நான் பஸ்ல போகும் போது... எங்க வீட்டுல கூட இப்பிடி தான்... ஐயோ என் பையன் இருக்கானே... இதில் எதிலுமே தொடர்பற்று கூட இருக்கலாம் எதிரே பேசிக் கொண்டிருக்கும் பேசுபொருள். ஆனால் சும்மா புகுந்து கெக்கபிக்கவென போட்டு தாக்குதல் அசூயை. ஆக பொறுமை. கவனம். உள்வாங்கல். அதன் பிறகு அதற்கான பதிலையோ... எதிர் வாதத்தையோ... எதிர் கேள்வியையோ முன் வைப்பது தான் முதிர்ச்சி.

அதே போல ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போதே கேட்பதில் கவனம் கொள்ளாமல்...அதற்கு என்ன பதில் சொல்லலாம் என்று வார்த்தைகளை தேடி கொண்டும் வாக்கியங்களை கோர்த்து கொண்டும் இருப்பதும் கூட தன் நிலையாமையைத்தான் வெளிப்படுத்துகிறது. அவருக்கு என்ன பதில் சொல்ல வேண்டும்.. அவரை என்ன சொல்லி காலி செய்ய வேண்டும் என்று யோசிக்கையில் அவர் பேசுவதை முழுவதுமாக புரிந்துணர முடியாமல் போய் விடும். ஒரு வித பதட்ட நிலையிலேயே கேட்க செய்யும் சூழலுக்கு நம்மை நாமே ஆட்படுத்திக் கொள்வது அறிவு வளர்ச்சி அற்ற இடத்தில் இருப்பதை ஊர்ஜிதம் செய்கிறது. முழுமையாக கேட்கும் பட்சத்தில்... முழுமையாக உள்வாங்கும் பட்சத்தில்... அதற்கான பதிலோ... எதிர் கேள்வியோ... வாதமோ ஓரளவுக்கு அறிவுள்ள ஆளாக இருக்கும் பட்சத்தில் தானாகவே வெகு இயல்பாக கிளம்பும். அதற்கு... செய்ய வேண்டியதெல்லாம் காதுகளில் கஞ்சத்தனம் கூடாது...என்பது தான்.

இன்னும் சில பேர் இருக்கிறார்கள். அவர்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள். எதிரே இருப்பவர் கேட்கிறாரா இல்லையா என்ற கவலை இல்லை. பட்டனை தட்டிய பேசுபொருள் போல அர்த்தமில்லாத அந்த நேர கொட்டி தீர்த்தலில்... எந்த ஒரு மானுட சமநிலையும் அங்கே செயல்படாது. அடைத்து கொண்ட தேங்கிய நீரை குத்தி விட்டால் கொப்பளித்துக் கொண்டு வருமே அப்படி இருக்கும்... மொத்தத்தையும் ஒப்பித்து விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடுவார்கள். கேட்பவன் கேனையானாகும் நேரம் இது.

அவர்கள் சொல்வதை கேட்போர் கேட்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதே நேரம் கேட்போர் பேசுகையில்... அத்தனை நேரம் இருந்த உற்சாகம் வடிந்து ம்ம் ம்ம்ம் ம்ம்ம் என்று மட்டுமே சொல்லி... திரும்பவும் தன் டர்னை எடுத்துக் கொண்டு தான் விட்ட இடத்தில் இருந்து தொடங்குவார்கள். மிக சல்லியான பழக்க வழக்கம் இது.

இன்னும் சில புத்திசாலிகள் உண்டு. ஒரு கேள்வியை கேட்டு விட்டு அதற்கு பதில் கிடைக்கும் முன்பாகவே அடுத்த கேள்வியை அல்லது தான் திரட்டி வைத்திருக்கும் பதிலை சொல்லிக் கொண்டே சிரிப்பார்கள். கோமாளியைப் பார்ப்பது போலவே இருக்கும்.

ஓர் உரையாடலில்... இருவர் இருக்கிறார்கள். இருவருக்குமான இடைவெளி... முற்றுப்புள்ளி... கமா... ஆசுவாசம்... மூச்சு விட்டு பேச்சு எடுத்தல் போன்ற வடிவம் இருக்கிறது. ஒரு பக்கமே ஊத்து ஊத்தென்று ஊத்திக் கொண்டிருந்தால்... அது எதிரே இருப்பவரை அவமதிப்பதற்கு சமம். ஓர் அவமதிப்பதில்... அவமரியாதையில் ஒரு நல்ல உரையாடல் எப்படி சாத்தியம்.

சக மனிதர்கள் இல்லாமல் இந்த உலகத்தில் சமநிலை இருப்பதில்லை. அதை மனிதர்கள்... பேசுவது கேட்பது உணர்வது புரிந்து கொள்வது போன்ற பரிணாமத்தில் இந்த வாழ்வின் அடிப்படைத் தேவையாக்கி இருக்கிறார்கள். அதை அதன் போக்கில் இன்னும் அழகூட்ட வேண்டுமே தவிர பேச்சு திமிரு... பேச்சு டாமினேட்... பேச்சு கொழுப்பு என்று எதுவும் வேலைக்காகாது.

முதலில் கேட்க வேண்டும். பிறகு அலச வேண்டும். பிறகு பதில் சொல்ல வேண்டும். அதே தான் எதிர் தரப்பில் இருப்போருக்கும். செவிடன் காதில் சங்கூதும் கதையும் ஆகாது. ஊமை ஊரை கெடுக்கும் பொருளும் ஆகாது. காதுள்ள வாயுள்ள இருவரின் உரையாடலில்... நேரில் என்றால் கண்கள் சந்திக்க வேண்டும். அலைபேசி என்றால்.. காதுகள்... சந்திக்க வேண்டும்.

நான் ஸ்ட்ரெஸ்ல இருக்கேன் என்று உடன் இருப்போரிடம் கொட்டித் தீர்ப்பது வேறு. அதே போல அந்த கூட இருப்போர் கொட்டி தீர்கையிலும்... அதை முழுதாக கேட்கும் பக்குவமும் வேண்டும். இல்லை என்றால் சந்தர்ப்ப வாதத்தின் பிடியில் ஆட் கொள்ளப்பட்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

அதே போல பேச்சுக்களில் அர்த்தமுள்ளவை அவசியம். ஆழமான துயரங்களை மேலாப்பு வக்கிரத்தில் வீசி எறிந்து விடல் ஆபத்து. அதையும் எதிரே இருப்போர் கண்டும் காணாமல் அவர் கேட்கும் கேள்வியிலேயே குறியாய் இருப்பது அபத்தம். எந்த இருவர் பேசினாலும் ஒருவர் வாய் திறக்கையில்... மற்றவர் காதுகள் தான் திறந்திருக்க வேண்டும். இது தான் ஒருவருக்கு ஒருவர் தரும் மரியாதை. அதைத்தான் படிக்கும் பாடமும்.. சிந்திக்கும் நேரமும் நமக்கு கற்று தருகிறது. புரிந்துணர்வுடன் கூடிய உரையாடலில் தான் பேசப்படும் பொருள் அர்த்தமுள்ளதாகிறது.

அதீத மிகைப்படுத்தலின் வழியே நம்மையும் அறியாமல் கட்டமைக்கப்படுவது நம் அறியாமை தான். தானத்தில் சிறந்த தானம் நிதானம் என்று சும்மாவா சொன்னார்கள்.

இந்த உலகில் மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் எந்த உயிரும் ஸ்பெஷல் எல்லாம் இல்லை. எல்லாம் இருப்பதால் எல்லாம் இயங்குகிறது. சிறப்பு வாய்ந்தது என்றால் ஓர் உயிர் பேசும் போதோ... இன்னொரு உயிருடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போதோ... காதுகள் திறந்து கண்கள் திறந்து இதயம் திறந்து அதைப் புரிந்து கொள்ளும் வகையில் உள் வாங்குதல் தான். அதில் இருந்து தான் இயக்கம் ஆரம்பிக்கிறது. இல்லையெனில் வெறும் தர்க்கம் மட்டுமே மிஞ்சும். தர்க்க ரீதியில் தான் பூமி சுழற்சி என்ற போதிலும் உணர்வு ரீதியில் தானே உயிர்கள் இயங்குகின்றன.

காதுகள் திறக்க ஞானக் கண்களும் திறக்கும். நம்புங்கள்.

- கவிஜி

Pin It