MY NAME IS KHAN திரைப்படம் உள்ளூர் அரசியல் தாதாகிரி தனங்களால் மிகுந்த பரபரப்புகளுக்கு நடுவில் திரையிடப்பட்டது மும்பையில். அதனாலேயே நிறைய ஸ்டார் அந்தஸ்த்தை திரைவிமர்சன ஊடகத்தில் மிகவும் எளிதாகவும் பெற்றது. My name is khan, iam not a terroரிச்ட் இதுதான் கதையின் மையம். வழக்கம் போல கரண் ஜோகரின் காட்சி அமைப்புகள், வெளிநாட்டு கதைக் க‌ளம், கதாநாயகன் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் காட்சி, இத்தியாதி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

பம்பாய், ரோஜா, நாயகன் என்று இந்தியாவின் வெவ்வேறு இடங்களை கதைத்தளமாக்கி இந்திய முகத்துக்கு ஏற்ற மாதிரி நடிகைகளைத் தேர்வு செய்து இந்தியாவின் பெருநகரங்களில் வசூலை அள்ளும் வித்தையில் மணிரத்னம் எப்படி கெட்டிக்காரரோ அது போலவே பாலிவுட்டில் வெளிநாட்டு இந்தியர்களை முன்வைத்து அதற்கு ஏற்றது மாதிரி கதைக்கரு, கதை நிகழ்வுகள், கதை நிகழ்விடங்களை அமைத்து இந்திய பாலிவுட் சினிமாவை உலக அரங்கில் ஜெர்மன், சீனா, ஜப்பான், அமெரிக்கா, நார்வே, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மற்றும்  அரபு நாடுகளுக்கு  எடுத்துச் சென்று டாலர்களிலும் யூரோக்களிலும் குளிர்காயும் வித்தையை நடத்திக் கொண்டிருப்பவர் கரண் ஜோகர். போலந்து, ஜெர்மனி, ரஷ்யாவில் எந்த பாலிவுட் படங்களுக்கும் கிடைக்காத சிவப்பு கம்பள வரவேற்பு இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கிறது என்பதும் உண்மை.

அதற்கான மிகச்சிறந்த கதைக்கருவாக கிடைத்திருப்பது அமெரிக்காவில் 11/9 க்கு முன்பும் அந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னும்.

கதைக்கரு, தளம் இவற்றில் கரண் கள ஆய்வுகள் எதுவும் செய்யவில்லை என்று குறைபட்டுக் கொள்கிறார் நியுயார்கிலிருந்து திரைவிமர்சனம் எழுதும் அஸீம் சாப்ரா (Aseem Chhabra). இந்த விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் MY Name is khan, iam not a terrorist என்று சொல்வதற்கு, மற்ற KHAN நடிகர்களிடம் இல்லாத துணிச்சல் ஷாருகானிடம் இருக்கிறது. அதற்காக அவரைப் பாராட்டுவதில் தவறில்லை.

கதையில் அவருக்கிருக்கும் உளவியல் சிக்கலும் அதன் காரணமான உடல் அமைப்பு, எண்ணம், செயல்பாடுகளில் காட்டும் வித்தியாசம் கதைக்கு வலு சேர்க்கிறதா என்பதை கரண் ஜோகரிடம் தான் கேட்க வேண்டும்.

கதை நாயகன் இப்படிப்பட்டவனாக காட்டப்பட்டால் தான் MY Name is khan, iam not a terrorist என்று அவன் அமெரிக்க ஜனாதிபதியிடம் சொல்ல நினைப்பதை மக்கள் சரி என்று ஏற்றுக்கொள்வார்கள் என்று கற்பனை செய்து ஒரு மிகப்பெரிய விசயத்தைச் சொல்வதற்கு ஒரு நொண்டிக் குதிரையில் பயணித்திருக்கும் கோமாளித்தனத்தைக் கண்டு காமெடி காட்சி இல்லாத குறையை இப்படி நிவர்த்தி செய்து கொண்டார்களோ என்று சமாதானம் சொல்லிக்கொண்டாலும்.. சரி விட்டு தள்ளுங்கள்.

இனி விசயத்திற்கு வருவோம். நடிகர் ஷாருக்கானுக்கு அமெரிக்கா போயிருந்தபோது அவருடைய KHAN என்ற பெயர் அடையாளம் காரணமாக தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். பல மணிநேரம் காத்திருக்க வைத்தார்கள். மம்முட்டிக்கும் இதே நிலமை ஏற்பட்டது. ஏன் இந்தியாவின் நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கே இந்த அனுபவம் ஏற்பட்டதை எல்லோரும் அறிவோம். மத அடையாளத்தை தீவிரவாதியின் அடையாளமாகக் காட்டியதில் வல்லரசுகள் மட்டுமல்ல, உலகளாவிய அனைத்து ஊடகங்களுக்கும் முக்கிய பங்கு இருக்கத்தான் செய்கிறது. அதனால் தான் MY Name is khan, iam not a terrorist  என்று சொல்வதில் இருக்கும் புரிதல், MY name is Rahul, iam not a terrorist என்று சொல்வதில் கிடைப்பதில்லை.

அமெரிக்காவின் இச்செயல் என்னவோ 11/9 க்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம் என்றோ உளவியல் சிக்கல் என்றோ கரண்ஜோகர் காட்டியிருப்பது முழுவதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மையல்ல. ஏனெனில், ஈரானிய திரைப்படம் - வட்டம் (2000) படத்தின் இயக்குநர் (Jafer Panahi) ஜாஃபர் பனாஹி டிரான்ஸிட் விசா வைத்திருக்கவில்லை என்ற காரணத்திற்காக நியுயார்க் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டு கைகளிலும் கால்களிலும் விலங்கிடப்பட்டு ஹாங்காங்குக்கே திருப்பி அனுப்பபட்டார். ஹாங்காங்கில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு அங்கிருந்து புவனோஸ் அய்ரஸில் நடக்கும் திரைப்பட விழாவுக்கு செல்லும் வழியில் 15.4.2001ல் இது நடந்தது. அப்போது அமெரிக்காவில் அவரது வட்டம் திரைப்படம் திரையிடப்பட்டிருந்தது. அப்படத்திற்காக அவருக்கு "கருத்துச் சுதந்திரத்திற்கான" பரிசு வழங்கப்பட்டது. அப்பரிசை திருப்பி அனுப்பி தனக்குப் பட்டம் வழங்கிய திரைப்பட சங்கத்திற்கு அவர் எழுதிய கடிதத்தில் அவர் கைது செய்யப்பட்டு கேவலமாக நடத்தப்பட்டதைப் பதிவு செய்திருக்கிறார்.

KHAN என்ற பெயர் அடையாளம் அமெரிக்கர்களுக்கு மட்டுமல்ல நம் மகாத்மாக்களுக்கும் அலர்ஜியாகத்தான் இருந்திருக்கிறது. இல்லை என்றால் இந்திய ஜனநாயகத்தின் அரச பரம்பரைக்கு காந்தி என்ற அடையாளம் ஏன் வலிந்து கொடுக்கப்பட்டது? Kஹன்ச் எல்லோரும் காந்தி என்று மாற்றம் பெற்றது ஏன்? இந்திராகாந்தி கான். ராஜீவ்கான், சோனியாகான், ராகுல்கான்.. இப்படியாக ஒரிஜினலாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

இந்திராகாந்தியின் பெயரில் இருக்கும் காந்தி யார்? இப்படி நிறைய கேள்விகள் அண்மைக்கால வரலாற்றிலிருந்து மிகவும் சாதுரியமாக கள்ள மவுனத்தின் மூலம் மறைக்கப்பட்டு மறக்கப்பட்டு விட்டது.

இந்திரா மணந்து கொண்ட ஃப்ரோஸ்கான் எப்படி, ஏன் ஃப்ரோஸ்காந்தி ஆனார்? யார் காரணம்? இந்திராவின் கணவர் பெயர் feroze khan. இவர் நவாப் கானின் மகன். நவாப்கான் பார்ஸி பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இசுலாமிய தந்தைக்கும் பார்ஸி தாய்க்கும் பிறந்தவர் ஃப்ரோஸ்கான். பரோஸ்கானின் தாய் இசுலாமிய

மார்க்கத்திற்கு மாறி நவாப்கானைத் நிக்கா செய்து கொண்டார். ஃப்ரோஸ்கானின் தாய் வழி குடும்பப் பெயர் காந்தி என்று சிலர் சொல்கிறார்கள். அவருடைய தாய் பார்ஸி என்பதும் பார்சிகளில் காந்தி என்ற குடும்பபெயர் இருப்பதும் மறுப்பதற்கில்லை. இலண்டனில் மசூதியில் இந்திராவும் ஃப்ரோஸ்கானும் நிக்கா செய்து கொண்டதை இலண்டன் பத்திரிகைகள் செய்தியாக்கின. அதன் பின் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டவர் மகாத்மா என்று போற்றப்படும் கரம்சந்த் மோகன் தாஸ் காந்தி அவர்கள்.

காந்தி தன்னுடைய குடும்பப் பெயரை ஃப்ரோஸ்கானுக்கு கொடுத்தார் என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி எல்லாம் யாரும் நினைத்தால் சம்பந்தமில்லாமல் யாருடைய குடும்ப பெயரையும் யாருக்கும் கொடுக்க முடியுமா என்ன? இதெல்லாம் மகாத்மாவுக்குத் தான் வெளிச்சம்.

சத்தியம் தவிர வேறு எதையுமே பேசாத எழுதாத நம் மகாத்மாவின் சத்திய சோதனையில் இந்தப் பெயர் மாற்றக் கதை மட்டும் மிஸ்ஸிங்.!! இந்திரா, ஃப்ரோஸ்கான் திருமணத்தை எதிர்த்த நேருவுக்கு காந்தி வழங்கிய இந்த அதி அற்புதமான மந்திரவிளக்கு khanகளை காந்தியாக்கியது தான்.

இலண்டனில் ஃப்ரோஸ்கான் என்ற பெயர் ஃப்ரோஸ்காந்தி என்று ஒரு அஃபிடவிட் (affidavit) மூலம் மாற்றம் பெற்றது. இதில் ரொம்பவும் புத்திசாலித்தனமாக இது பெயர் மாற்றம் மட்டும்தான், மத மாற்றம் அல்ல என்பதும் குறிக்கப்பட்டது. அதன் பின் இந்தியா திரும்பியவுடன் இந்திராவுக்கும் கானாக இருந்த காந்தியாக மாற்றப்பட்ட ஃப்ரோஸ் காந்திக்கும் இந்திய இந்து வைதீக முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

ஃப்ரோஸ் காந்தி இறந்தப் பின் இசுலாமிய முறைப்படி புதைக்கப்படவோ பார்சிகள் முறைப்படி வல்லூறுகளுக்கு இரையாக மரணக்கிணற்றில் வீசப்படவோ இல்லை. இந்து முறைப்படி சிதைக்கு எரியூட்டினார்கள். சாம்பலை எடுத்து வந்து அலகாபாத்தில் கல்லறை கட்டப்பட்டது. ஃப்ரோஸ் காந்தியின் கல்லறையை காந்தி அரச பரம்பரையில் வந்த யாரும் கண்டு கொள்ளவில்லை. ஏனெனில் உண்மையில் அது காந்தியின் கல்லறை அல்ல, கானின் கல்லறை என்ற மண்ணுக்குள் புதைக்கப்பட்ட உண்மைதான்.

தாய்வழி குடும்ப பெயரைப் பயன்படுத்துவது தவறு என்று சொல்லவரவில்லை.. இந்திய அரசியலில் இந்தப் பெயர் மாற்றம் எவ்வளவு சாதுரியமாக, திட்டமிடப்பட்டு எதிர்கால அரசியல் அதிகாரப்பகிர்வுக்கு துணை செய்யும் வகையில் ஆளும் வர்க்கத்தால் சாதிக்க முடிந்தது என்பதை நினைத்துப் பார்க்க வைத்தது ஏதோ ஒரு வகையில் இந்தப் படம் .

MY Name is khan, iam not a terrorist  என்று சொல்வதற்குப் பதிலாக MY Name is Gandhi, iam not a terrorist என்று சொல்லிப்பாருங்களேன். கேட்பவர்கள் நமக்கு ஏதோ ஆகிவிட்டது என்கிற மாதிரி பார்ப்பார்கள். நமக்கே கூட சத்தமாக அதைச் சொன்னால் ஏதோ கருத்துப்பிழை உள்ள சொல் தொடரைச் சொன்னது போலிருக்கும்!!

பால் பச்சையாக இருக்க முடியுமா? ரோசா செடியில் மல்லிகைப் பூக்குமா? காந்தி தீவிரவாதியாக இருக்க முடியுமா? என்று நம் மூளையே நம் கட்டுப்பாட்டை மீறி நம்மிடம் பேச ஆரம்பிக்கும்!

காந்தி, எங்கள் தேசப்பிதாவே.. உங்களின் எளிமை கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். உங்கள் அரசியல் ஞானம் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது! அதிலும் குறிப்பாக தன்னுடைய அடையாளப் பெயரான காந்தி என்ற குடும்ப பெயரையே ஃப்ரோஸ்கானுக்கு வழங்கிய உங்கள் அரசியல் அறிவு யாருக்கு வரும்? ஜவஹர்லால் நேரு குடும்பம் இதற்காக உங்களுக்கு நன்றி சொல்கிறார்களோ என்னவோ... இந்திய மக்கள் நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்!.

ஷாருக்கானுக்கு ஒரு குட்டி அட்வைஸ். ரொம்பவும் மெனக்கெட வேண்டாம். MY Name is khan, iam not a terrorist என்றெல்லாம் சொல்லிக்கொண்டு திரிய வேண்டாம். ஒரு அஃபிடவிட் வாங்கி உங்கள் khan பெயரை காந்தி என்று மாற்றிக் கொள்ளுங்கள். ஷாருக்காந்தி ..... சொல்வதற்கு இனிமையாகத்தான் இருக்கிறது.

-புதியமாதவி, மும்பை(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It