ரோஜாப்பூவை சட்டையில்
வைத்துக்கொண்டு  அதன் முள்ளை
வெள்ளைக்காரனைக் கொண்டு 
எல்லையோரத்து மக்களின்
நெஞ்சிலும் இதயத்திலும்
குத்தி சிந்துவெங்கும்
பாட்டன் தலைமுறை படியவிட்ட
ரத்தக்கறை...

நீலவண்ணத்தில்
நீண்ட துவக்குகளின் வேட்டையில்
தங்கக் கோயிலின் தரையெல்லாம்
அவன் மகளின் தலைமுறை படியவிட்ட
ரத்தக்கறை...

டெல்லித் தெருக்களில்
சாய்ந்த ஆலமரத்தின் கீழ்
நசுக்கிப் பிழிந்து
அவள் மகன் சிந்தவைத்த
சீக்கிய ரத்தக்கறை...

யாழ்ப்பாணத் தெருக்களில்
அவனே பிழிந்தெடுத்த
எம் தமிழர் எண்ணாயிரவரின்
ரத்தக்கறை...

முள்ளி வாய்க்காலை குருதியால் மூழ்கடித்து
அவன் தனியள் எம் தொப்புள்கொடி
உறவுகளின் வேரறுத்த
ரத்தக்கறை...

‘உலகத்து பெருங்கடல்கள் அனைத்தின்
நீரெடுத்துக் கழுவினாலும் போகாது அந்தக்கறை...’

- முள்ளிக்கரை முகிலன்