Auschwitz campபவானி சங்கர் நாயக்
தமிழில்: நிழல்வண்ணன்

இருபத்தியிரண்டு வயதான ஓர் இத்தாலிய யூதப் பெண்ணான பியாரா சொன்னினோ தன்னைச் சுற்றிச் சுற்றி வரும் நினைவலைகளிலிருந்து தனக்குப் பேரழிவூட்டிய ஓர் அனுபவத்தை விவரித்துள்ளார். 1944 இல், ஆஸ்ட்விட்ச் வதை முகாமில் தனது பெற்றோர்களையும் மூன்று சகோதரர்களையும் இழந்தார். அவருடைய குடும்பத்தில் பேரழிவிலிருந்து தப்பிப் பிழைத்தவர் அவர் ஒருவர்தான்.

ஆஸ்ட்விட்சில் ஒரு இத்தாலியக் குடும்பத்திற்கு இது நிகழ்ந்தது என்ற அவரது நினைவலைகளில் நாஜிசத்தின் சொல்லொணாக் கொடுமைகள் குறித்த ஒரு நெகிழச் செய்யும் நிகழ்வை விவரிக்கிறார். அந்த பயங்கரம் தொடங்கியது 1938 இல், அப்போது இத்தாலிய யூதர்களுக்கு எதிராகவும் இத்தாலியக் குடியேற்றப் பகுதிகளில் வசித்த பிற சிறுபான்மைத் தாயகத்தினருக்கு எதிராகவும் இத்தாலிய அரசாங்கம் இனவாதச் சட்டங்களை அறிவித்தது.

அந்தப் பாகுபாடான சட்டங்கள் பள்ளிகள், பல்கலைக் கழகங்கள், மற்றும் எந்தத் தொழில்முறைப் பதவிகளிலிருந்தும் யூதர்களைத் தடை செய்தன. ஆயுதப் படைகளிலும் குடிமைப் பணிகளிலும் பணியாற்றுவதிலிருந்தும் கூட இத்தாலிய யூதர்கள் தடை செய்யப்பட்டனர். அந்தச் சட்டம் இத்தாலியர்களுக்கும், யூதர்களுக்கும் ஆப்பிரிக்கர்களுக்கும் இடையில் திருமணங்களையும் பாலியல் உறவுகளையும் தடை செய்தது. யூதர்கள் சுற்றிவளைக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டனர்.

யூதர்கள் சமூகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இத்தாலியில் வசித்திருந்தனர், இத்தாலியக் கலாச்சாரத்திலும் வாழ்க்கையிலும் நன்கு ஒருங்கிணைந்திருந்தனர். ஆனால் இத்தாலியப் பொது மக்களை யூதர்களுக்கு எதிராக மூளைச்சலவை செய்ததற்கு நாஜிக்களும் பாசிஸ்டுகளும் தாம் பொறுப்பாக இருந்தனர். அண்டை வீட்டாளர்களின் அமைதியான பண்பு மாறத் தொடங்கியிருந்தது.

யூதர்களின் கடைகளும் வீடுகளும் தாக்கப்பட்டு, எரியூட்டப்பட்டன. கொலைகாரர்கள் முகந்தெரியாதவர்கள் அல்ல, மாறாக அண்டை வீட்டாரும் ஆயுதம் தாங்கிய காவல்துறையினரும் தாம். அமைதியாகவும் ஒத்திசைந்தும் பல நூற்றாண்டுகளாக ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்த மக்கள் நாஜி வல்லூறுகளாகவும் பாசிச கொலைக் குழுக்களாகவும் ஆகிவிட்டனர்.

தனது குடும்பத்துடன் இருந்த கடைசி இரவு பற்றிக் கூறும்போது, துணிச்சல்மிக்க பியாரா சொன்னினோ தனது சொந்த அனுபவங்களை இரண்டே வாக்கியங்களில் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார். “அந்த நேரத்தைப் பற்றி நான் என்னதான் சொல்ல முடிந்தாலும், அதைச் சொற்களில் விவரிக்க முடியாது, அது உண்மையில் நடந்ததன் மெல்லிய நிழலளவுகூட இருக்காது. அது என்னிடமிருந்து, என்னுடையதாக இருந்ததிலிருந்து, என்னுடையதாக இருந்ததை மட்டுமே வலிந்து பறித்துக் கொண்டதாக இருக்கும்.” இந்தத் தனிப்பட்ட நினைவு ஐரோப்பாவெங்கும் இருந்த யூதச் சமூகங்களின் கூட்டு வேதனையைப் பிரதிபலிக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு பயங்கரமான மாற்றம் ஒன்றும் திகைப்பூட்டவில்லை. அது ஒரே இரவிலோ, தற்செயலாகவோ, இயற்கையாகவோ நடக்கவில்லை. பெரும்பான்மையின் மௌனமும் சிறுபான்மை சமூகங்களின் அவநம்பிக்கையும் ஓரிரண்டு அண்டுகளுக்குள் இத்தாலிய சமுதாயத்தையும் ஐரோப்பாவின் பிற பகுதிகளையும் பாசிசம் மற்றும் நாஜிசம் ஆகிய இரட்டைத் தீமைகள் விழுங்குவதற்கு அனுமதித்துவிட்டன.

அது நாஜிகள் மற்றும் பாசிஸ்டுகளின் வெற்றியைப் பிரதிபலிக்கவில்லை. அது பெரும்பான்மையின் மௌனத்தையே பிரதிபலித்தது. யூதர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் மதவெறிப் பிரச்சாரத்தை பெரும்பான்மை மக்கள் மௌனமாக ஏற்றுக்கொள்வது என்பது சிறந்த தெரிவு அல்ல.

தீய ஆட்சியின் அதிகாரபூர்வ நம்பிக்கையூட்டல்கள் மேலோங்கியிருந்த பொருளாதாரப் பேரழிவை மறைப்பதற்கு அனைத்தையும் செய்தன, அது யூத சமூகங்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட கதைகளில் மக்களின் கவனத்தைத் திருப்பி விட்டது. யூதச் சமூகங்களின் இடப்பெயர்வு, சிதறடித்தல் மற்றும் மரணங்கள் அந்தத் தீய ஆட்சியின் ஒட்டுமொத்த விளைவுகளாக இருந்தன.

யூத சமூகங்கள் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தும் அவர்களுடைய உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. யூதர்களாக இருப்பதே மரண தண்டனை விதிக்கப்படுவதற்கான ஒரு குற்றம் என்ற நாஜிசம் மற்றும் பாசிசத்தின் பயங்கரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு பியாரா சொன்னினோ போன்ற ஒரு சிலரே தப்பிப் பிழைத்திருக்க முடிந்தது.

மனிதாபிமானம், பகுத்தறிவு, நியாயம், அறநெறிகள் ஆகியவற்றுக்கும் யூத மக்களின் உரிமைகளுக்குப் போராடிய மனிதர்களுக்கும் சிறையே வீடானது. அரசியல் கட்சியினர் சிறைக்கும் சொந்தநாட்டு யூதர்களோடு துப்பாக்கிக் குண்டுகளுக்கும் இரையாகினர். கம்யூனிஸ்டுகளும் சோசலிஸ்டுகளும் யூத மக்களுக்கு ஆதரவாகவும், நாஜிசத்துக்கும் பாசிசத்துக்கும் எதிரான போர்க்களத்திலும் முன்னணியில் இருந்தனர்.

பியாரா சொன்னினோவின் தன்வரலாறு ஒரு யூதக் குடும்பத்தின் திகிலூட்டும் வரலாறாக மட்டுமின்றி, நமது காலத்தின் பாசிசத்தின் எழுச்சி குறித்து கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என்று நிகழ்காலத் தலைமுறைக்கு ஓர் எச்சரிக்கை அறிவிப்பாகும். பெருந்திரள் இனப்படுகொலை, முழுமையான பேரழிவு, காணாமற்போகச் செய்யப்படுவது, பெருந்திரளாகச் சிறையில் அடைக்கப்படுவது ஆகியவை பாசிசத்தின் முன்பு மௌனம் காப்பதற்கு கொடுக்கப்படும் மனித விலைகளாகும். கவிஞரும் பேராசிரியருமான மைக்கேல் ரோசன் அவரது கவிதையின் பின்வரும் வரிகள் மூலம் நம்மை எச்சரிக்கிறார்:

பாசிசம்: சில நேரங்களில் நான் அஞ்சுகிறேன்…
நாஜிக்களின் முடிவற்ற மறுஒலிபரப்பில் தேய்ந்துபோன
விகாரமான மனிதர்களும் அரக்கர்களும்
மாறுவேட உடையணியப் பாசிசம் வருகிறது
என்று மக்கள் நினைப்பதாக
சிலநேரங்களில் நான் அஞ்சுகிறேன்
பாசிசம் உங்கள் நண்பனாக வருகிறது
அது உங்கள் பெருமிதத்தை மீட்கும்
உங்களைப் பெருமிதம் கொள்ளச் செய்யும்
உங்கள் வீட்டைப் பாதுகாக்கும்
உங்களுக்கு வேலை கொடுக்கும்
அண்டை வீட்டைக் காலி செய்யும்
முன்பு நீங்கள் எவ்வளவு உயர்வாக இருந்தீர்கள் என்பதை
உங்களுக்கு நினைவூட்டும்
இலஞ்சத்தையும் ஊழலையும் துடைத்தெறியும்
உங்களைப் போன்றதல்ல என்று நீங்கள் நினைக்கும்
எதையும் அகற்றிவிடும்
அது இதைச் சொல்லிக்கொண்டு வருவதில்லை:

“எமது திட்டம் என்பது குடிமை இராணுவம், பெருந்திரள் சிறைவைப்பு, ஆள்கடத்தல், போர் மற்றும் துன்புறுத்தல்.”

பியாரா சொன்னினோவின் பேரதிர்ச்சியூட்டும் தன்வரலாறும் மைக்கேல் ரோசனின் கவிதையும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; பாசிசத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் திருப்பியடிக்க வேண்டும் என்று நம் அனைவருக்கும் அன்றாடம் நினைவூட்டுவதாகும். மௌனம் ஒரு தெரிவு அல்ல. எதேச்சாதிகார ஆட்சிகள், மதவாத வலதுசாரி சக்திகள் மற்றும் தடையில்லாச் சந்தை அடிப்படைவாதிகள் ஆகியோரின் ஆதரவுடன் தொடர்ந்து வளர்ந்து வருவதால், இந்த சக்திகள் அவர்களுடைய அதிகாரத்தையும் பதவிகளையும் பலப்படுத்திக் கொள்வதற்கு முன்பு, இந்தச் சக்திகளுக்கு எதிராக நமது குரலை உயர்த்துவதற்கான நேரம் இதுவாகும்.

பெரும்பான்மையின் மௌனம் அச்சமல்ல மாறாக அவர்களின் சொந்த இருத்தலுக்கான துரோகம் ஆகும். ஒருமைப்பாட்டின் வடிவம் மட்டுமே செயலூக்கமிக்க எதிர்ப்பாக இருக்கும். இதைத்தான் ஒவ்வொரு தேசபக்த இந்தியனிடமும் காலம் கோருகிறது. துன்புறுத்தப்படும் மதச் சிறுபான்மையினர் அனைவருக்கும் ஊசலாட்டமில்லாத ஆதரவை அளிப்பதும், உலகெங்கும் நடந்துவரும் தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்துப் போராட்டங்களிலும் ஒன்றுபட்டு நிற்பதும் நமது கடமையாகும்.

அமைதி, வளமை, மதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்தல், பன்மைக் கலாச்சார மற்றும் ஜனநாயக உலகம் ஆகியவற்றை நோக்கிய பயணத்தில் இது ஒன்றே சரியான வழியாகும். பாசிசத்திற்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டம் மட்டுமே மனித இனம் பிழைத்திருப்பதற்கான ஒரே மாற்றாகும்.

டாக்டர் பவானி சங்கர் நாயக், கவன்ட்ரி தொழில்வணிகப் பள்ளி, கவன்ட்ரி பல்கலைக்கழகம், ஐக்கிய அரசியம் (UK)
நன்றி: பிராண்டியர் இதழ்

- நிழல்வண்ணன்

Pin It