the gospel of mary of magdalaநான்கு சுவிசேஷங்கள்:

 சு + விசேஷம் = சுவிசேஷம்.

சுவிசேஷம் என்ற வார்த்தைக்கு அர்த்தம், அதிக விசேஷம் கொண்டது என்று அர்த்தம்.

புதிய ஏற்பாட்டில் உள்ள நான்கு சுவிசேஷங்களும், நான்கு அப்போஸ்தலர்களால் எழுதப்பட்டவை. அவை, மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியன. இந்த நான்கு சுவிசேஷங்களும், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை உடனிருந்து பார்த்த, அப்போஸ்தலர்கள், தங்களது நினைவுக் குறிப்பிலிருந்து எழுதியவை ஆகும். இயேசு கிறிஸ்துவானவர், தனது உபதேசங்களை புத்தகங்களாக எழுதி வைக்கவில்லை. அவரது உபதேசங்கள் யாவுமே, வாய் வழியாகச் சொல்லப்பட்டு, செவி வழியாகக் கேட்கப்பட்டு, நினைவாற்றலின் துணையால், முதலாம் நூற்றாண்டில் எழுத்தாக பதிவு செய்யப்பட்டன. நான்கு சுவிசேஷங்கள் தவிர, பிறரும், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை எழுத்தில் பதிவு செய்துள்ளனர். உதாரணத்துக்கு யூதாஸ் கரியேத்தின் சுவிசேஷம், மரியாளின் சுவிசேஷம், பரிசுத்த தோமாவின் சுவிசேஷம், ஆகியன.

இவை தவிர, பிற சுவிசேஷங்கள் கிட்டியுள்ளது. ஆனால், அவை காலத்தால் பிற்பட்டவை என்பதால், அவைகளை நியமன வேதாகமப் புத்தகத்தில் (Canonical Biblical Scripture) சேர்க்கப்படவில்லை. அவைகள் தனியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலிகன் திருச்சபையின் (ப்ராட்டஸ்டண்ட்) வேதாகம புத்தகத்தில் 66 புத்தகங்கள் உள்ளன. இவைகளில், இந்த தள்ளுபடியாகமங்கள் இல்லை. ஆனால், பாரம்பரிய கத்தோலிக்க திருச்சபையின் வேதாகமத்தில், இந்த தள்ளுபடியாகமங்களை அவைகளின் மொழிபெயர்ப்புடன் காணலாம்.

தள்ளுபடியாகமங்கள்

பொ. சகா. 7 -ம் நூற்றாண்டில், தள்ளுபடியாகமங்கள் என்று 60 புத்தகங்கள் பட்டியலிடப்பட்டன. அவைகளில், ஆதாமின் புத்தகம், ஏனோக்கின் புத்தகம், லாமேக்கின் புத்தகம், மோசே பரத்துக்கு ஏறுதல், யோசேப்பின் ஜெபம், பர்னபாவின் நிருபம், பர்னபாவின் சுவிசேஷம் ஆகியவை இவைகளில் அடக்கம். இந்த தள்ளுபடியான சுவிசேஷங்களில், மகதலேனா மரியாளின் சுவிசேஷமும் ஒன்று.

மகதலேனா மரியாள் என்பவர், பொ. சகா. 1-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர், கலிலேயாவின் மேற்குக்கடற்கரை கிராமமான மகதலா என்ற ஊரைச் சேர்ந்தவர். மகதலா என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு "மகதலேனா" என்ற அடைமொழி தரப்பட்டது. அந்நாளில், மேரி என்பது யூதப்பெண்களுக்கு பரவலாகத் தரப்படுகின்ற பெயராக இருந்தது. எனவே, வேதாகம ஆசிரியர்கள், அவரையும், பிறரையும் வேறுபடுத்திக் காட்ட “மகதலேனா” மரியாள் என்று அவரை அடைமொழியுடன் அழைத்தனர்.

அன்பிற்குரிய சிஷ்யை:

மகதலேனா மரியாளின் வாழ்க்கையைக் குறித்து, அதிகம் தகவல்கள் கிடைக்கவில்லை. பவுல் அப்போஸ்தலனைப்போல, அவர் நிறைய எழுதி வைத்து விட்டு செல்லவில்லை. மகதலேனா மரியாள், இயேசு கிறிஸ்துவின் அன்பிற்குரிய சிஷ்யையாக இருந்தார். பன்னிரு சீஷர்களில், தலைமையானவர் பேதுரு ஆவார். ஆனால், அந்தப் பேதுருவே, இயேசு கிறிஸ்து, மகதலேனா மரியாளிடத்தில், மிகுந்த பிரியமாய் இருப்பதைக் குறித்து பொறாமைப்படுகிறார்.

மகதலேனா மரியாள் மிகுந்த அழகுள்ள ஒரு பெண். அவர், ஒரு பாலியல் தொழிலாளி என்று தவறான ஒரு கருத்தைச் சொன்னது, கத்தோலிக்க போப்பாண்டவரான முதலாம் கிரிகரி ஆவார். அவர், பொ. சகா. 591 -ல், தான் நடத்திய ஈஸ்டர் உயிர்த்தெழுதல் பிரசங்கத்தில், இத்தகைய குற்றச்சாட்டை வைத்தார். ஆனால், அது மெய்யான குற்றச்சாட்டு அல்ல. மகதலேனா மரியாள், வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர். இயேசு கிறிஸ்துவின் ஊழியத்திற்கான செலவுகளை அவர் தாங்கிக் கொண்டார் என்று வேத ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள்.

புனிதர் மகதலேனா மரியாள்

லூக்காவின் சுவிசேஷத்தில் சொல்லப்பட்ட வண்ணமாக, மகதலேனா மரியாள், பெத்தானியா என்ற ஊரைச் சேர்ந்த மரியாள், மற்றும் "பாவியாகிய ஒரு ஸ்திரீ", ஆகிய இம்மூவரும் ஒரு நபர் தான் என்ற கருத்து, மத்திய காலத்தில் மேலைக்கிறித்தவத்தில் நிலை பெற்றிருந்தது. ("பாவியாகிய ஒரு ஸ்திரீ", என்பது பாலியல் தொழிலாளியைக்குறிக்கிறது).

“37 - அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமள தைலம் கொண்டு வந்து,

38 - அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுது கொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமள தைலத்தைப் பூசினாள்.”

 -- புதிய ஏற்பாடு, லூக்கா, 7: 37, 38

எனினும், மகதலேனா மரியாளின் மீது இவ்வாறு சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஒரு நமபத்தகுந்த ஆதாரமும் இதுவரை காட்டப்படவில்லை. பொ. சகா. 1969 -ல், மகதலேனா மரியாளை, பெத்தானியாவைச் சேர்ந்த மரியாளோடு ஒன்றிணைத்து அடையாளம் காணப்பட்டு வந்தது நீக்கப்பட்டது. மேலும், ஆச்சாரமான கத்தோலிக்க சமயம், கீழைத்திசையின் ஆச்சாரமான கத்தோலிக்க சமயம், ஆங்கிலிகன், லுத்தரன் திருச்சபைகளின்படியும், மகதலேனா மரியாள், ஒரு புனிதராகக் கருதப்படுகிறார்.

மகதலேனா மரியாளுக்குள், ஏழு பிசாசுகள் இருந்ததாகவும், அவைகளை இயேசு கிறிஸ்து துரத்தியதாகவும், மாற்கு எழுதின சுவிசேஷம் தெரிவிக்கிறது.

“9. வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்த பின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல் முதல் தரிசனமானார்.

10. அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடே கூட இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில், அவர்களிடத்தில் போய், அந்தச் செய்தியை அறிவித்தாள்.”

 -- புதிய ஏற்பாடு, மாற்கு 16: 9, 10

ஆனால், இந்தத்தகவல், ஆதி காலத்து கையெழுத்துப்பிரதிகளில் காணப்படவில்லை. உண்மையில், இது, பொ.சகா. 2 -ம் நூற்றாண்டில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு வேளை, இந்த செய்தி, லூக்கா எழுதின சுவிசேஷத்திலிருந்து எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கலாம். பொ.சகா. 1 -ம் நூற்றாண்டில், உடல் மற்றும் மன ரீதியான சுகவீனத்தால் மனிதர்களுக்கு பேய், பிசாசு பிடிப்பதாக நம்பப்பட்டது. மகதலேனா மரியாளிடத்து, ஏழு பிசாசுகள் இருந்ததென்று சொல்லப்பட்டதற்குக் காரணம், யூத சமய கோட்பாட்டின் படி, ஏழு என்ற எண் முழுமையைக் குறிக்கிறது என்பதனால் இருக்கலாம், என்று ஆதி கால கிறித்தவ சமய வரலாற்று ஆய்வாளரான பாட் டி. எர்மான் (Bart D. Ehrman) என்பவர் கூறுகிறார். ஏழு என்ற எண் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என்கிறார் அவர்.

இதை வைத்துப்பார்க்கும் போது, மகதலேனா மரியாள், கடும் உணர்வு மற்றும் உளவியல் பாதிப்புகளால் கஷ்டப்பட்டிருக்கிறார் என தெரிய வருகிறது. பொதுவாக, சுவிசேஷம் எழுதியவர்கள், இயேசு கிறிஸ்து பொது மக்கள் முன்னிலையில் பிசாசுகளை விரட்டி அற்புதம் செய்தார் என்பதை விவரிக்கும் போது, பிசாசு பிடித்தவர்கள் கூச்சலிட்டனர், அடித்துக் கொண்டனர், தங்கள் வஸ்திரங்களை கிழித்துக் கொண்டனர் என்று அவைகளை நாடகத் தன்மையோடு விவரிப்பதில் திருப்தி கொண்டனர். மகதலேனா மரியாளிடமிருந்து பிசாசு விரட்டப்பட்டது, தனிப்பட்ட முறையில் செய்யப்பட்ட அற்புதம் என்பதாலோ, அல்லது, அது ஒரு நாடக பாணியான நிகழ்வாக இல்லாமல் இருந்தபடியாலோ, அந்த அற்புதத்திற்கு, கவனம் எதுவும் தரப்படவில்லை.

பொழிப்பான சுவிசேஷங்களில், ஒரு குழுவான ஸ்திரிகளைக் குறிப்பிடும் போதெல்லாம், மகதலேனா மரியாள், முதன்மையாகத் தோன்றுகிறார். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷ ஊழியங்கள் நடைபெற்ற இடங்களிலெல்லாம், அவர் பிற ஸ்திரிகளோடு இருந்துள்ளார் என்பதால், அவர், பிற ஸ்திரீகளை விட மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பது கோடிட்டுக் காட்டப்படுகிறது.

ஆடவரான அப்போஸ்தலர்களில், சீமோன் பேதுரு முக்கிய இடம் பிடித்ததைப்போல, இயேசுவின் சிஷ்யைகளுக்குள்ளே மகதலேனா மரியாள் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தார்.

நான்கு சுவிஷேங்களிலும் தோன்றும் மகதலேனா மரியாள்:

இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடு மட்டுமல்ல, அவரது திருச்சரீரம் நல்லடக்கம் செய்யப்படுவது, மற்றும் மூன்றாம் நாள் அவர் மீண்டும் உயிர்த்தெழுதல் ஆகியவைகளில், மகதலேனா மரியாள், ஒரு சாட்சியாக, அந்த நிகழ்வுகளின் போது இருந்துள்ளார் என்பதை வேதாகம ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக் கொள்ளுகின்றனர். இயேசுவானவர் சிலுவையில் அறையப்படுவதை தொலைவில் நின்று, மகதலேனா மரியாள் பார்த்திருக்கிறார். நான்கு நியமன சுவிசேஷங்களிலும் மற்ற ஸ்த்ரீகளுடன் சேர்ந்து கொண்டு, அவர் அதைப் பார்த்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“. 40 - சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்த போது அவருக்குப் பின்சென்று, ஊழியஞ்செய்து வந்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்,

 41 - அவருடனேகூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள்.”

 -- புதிய ஏற்பாடு, மாற்கு 15: 40, 41

இயேசுவின் திருச்சரீரம், சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு, அது அரிமத்தேயு என்ற ஊரைச்சேர்ந்த யோசேப்பு என்பவனால் அடக்கம் செய்யப்பட்டது என்று நான்கு நியமன சுவிசேஷங்களும், பேதுரு எழுதிய தள்ளுபடி செய்யப்பட்ட சுவிசேஷமும் (St Peter’s apocryphal Gospel) கூட விவரிக்கின்றன.

இயேசு கிறிஸ்துவானவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்கு மூன்றாம் நாள் மகதலேனா மரியாள் சென்று பார்த்த போது, நடந்த சம்பவங்களை நான்கு நியமன சுவிசேஷங்களும் விவரிக்கின்றன.

ஆனால், அவைகளின் தகவல்கள் வேறுபடுகின்றன. உதாரணத்துக்கு, மாற்கு எழுதின சுவிசேஷத்தில், மகதலேனா மரியாள், யாக்கோபின் தாயான மரியாள், சலோமே ஆகிய ஸ்த்ரிகள், இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைக்கு சென்று பார்த்த போது, அதன் வாசலில் அடைக்கப்பட்டிருந்த கல் அகற்றப்பட்டிருந்ததைக் கண்டார்கள்.

“1. ஓய்வு நாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்த வர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக் கொண்டு,

2. வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிற போது கல்லறையினிடத்தில் வந்து,

3. கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டார்கள்.

4. அந்தக் கல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் ஏறிட்டுப் பார்க்கிற போது, அது தள்ளப்பட்டிருக்கக் கண்டார்கள்.”

 -- புதிய ஏற்பாடு, மாற்கு 16: 1 – 4

ஆனால், மத்தேயு எழுதின சுவிசேஷத்தில், இதே நிகழ்வு வேறு மாதிரியாக சொல்லப்பட்டுள்ளது. அதில் வான தூதன் கீழே இறங்கி வருகிறான்.

“1. ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.

2. அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.

3. அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.

4. காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள்.

5. தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.”

 -- புதிய ஏற்பாடு, மத்தேயு 28: 1 - 5

ஆனால், யோவான் எழுதின சுவிசேஷத்தை வாசித்துப் பாருங்கள். அதில், சம்பவம் வேறு விதமாக உள்ளது. கல்லறைக்கு வந்த மகதலேனா மரியாள், அங்கு வாசலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டு, நேரடியாக பேதுருவிடம் சென்று தான் கண்டதைத் தெரிவிக்கிறார்.

“1 - வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக் கண்டாள்.

2 - உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.

3 - அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள்.”

 -- புதிய ஏற்பாடு, யோவான் 20: 1 - 3

ஆனால், மாற்கு எழுதின சுவிசேஷத்தை வாசியுங்கள். அதில், இந்த இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், மிகச் சுருக்கமாகச் சொல்லப்பட்டு, அந்த சுவிசேஷமே 16- வது அத்தியாயத்தில் முடிந்து விடுகிறது.

இவ்வாறு, நான்கு சுவிசேஷங்களிலும், இயேசு கிறிஸ்துவானவர், சிலுவையில் அறையப்படுதல், அவரது திருச்சரீரத்தின் நல்லடக்கம், மீண்டும் இயேசுவின் உயிர்த்தெழுதல் ஆகிய நிகழ்வுகளில், குறிப்பிடப்படும் முக்கிய நபராக மகதலேனா மரியாள் இருக்கிறார். அவர், தான் இயேசுவுடன் வாழ்ந்த போது, கண்டவைகளை சுவிசேஷமாக எழுதி வைத்துள்ளார். இவைகளை, ஆங்கிலிகன், லுத்தரன் சபைகளின் வேதாகமத்தில் காண முடியாது என்றாலும், "www.gnosis.org” என்ற இணைய தளத்தில் இது பதிவிடப்பட்டுள்ளன.

தள்ளுபடியாகமம் (Apocrypha) என்று புறந்தள்ளப்பட்ட மகதலேனா மரியாளின் சுவிசேஷத்தை வாசித்துப் பார்த்து, அதை தமிழில் திருப்புவதற்கு எண்ணம் கொண்டோம். அவ்வண்ணமே, இன்றைக்கும் ஆங்கிலிகன் திருச்சபைகளில் பின்பற்றப்படும் பரிசுத்த வேதாகமத்தின் திருப்புதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஹென்றி பவர் ஐயரின் (பொ.சகா. 1812–1885) திருப்புதல் நடையிலேயே இதையும் திருப்ப விழைந்தோம். ஹென்றி பவர் ஐயரின் திருப்புதல் பொ.சகா. 1858-ல் துவங்கப்பட்டது. மகதலேனா மரியாளின் சுவிசேஷத்தின் பல பகுதிகள் தொலைந்து விட்டன என்றாலும், எஞ்சியுள்ள பகுதிகளை வைத்து அதை கூடுமானவரை தமிழில் திருப்பினோம். இன்னும், தள்ளுபடியாகமங்களில் உள்ள அநேக நூல்களை தமிழில் திருப்புவதற்கு, தமிழார்வலர்கள் முன்வர வேண்டும். இந்தப் பணி ஒருவரே செய்யக்கூடியதல்ல எனக் கருதுகிறோம்.

--------------------

பொ. சகா. -- பொது சகாப்தம்

திருப்புதல் -- மொழிபெயர்ப்பு

மகதலேனா மரியாள் அருளிச் செய்த சுவிசேஷ த்தின் தமிழாக்கத்தை வாசிக்க இணைய இணைப்பு: https://archive.org/details/gospel-mary-magdalene-tamil

ஆதாரமான தரவுகள்:             

https://en.wikipedia.org/wiki/Mary_Magdalene

 

http://gnosis.org/library/marygosp.htm

https://archive.org/details/gospel-mary-magdalene-tamil

- ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It