தமிழின் தனித்தன்மை, அடையாளம், பெருமை என்றெல்லாம் காலங்காலமாக நாம் போற்றுவது சிறப்பு எழுத்தான ழகரம்.

அப்பேர்ப்பட்ட தமிழ்ச் சொத்தைப் போகிற போக்கில் பிள்ளையார் கோயில் கொழுக்கட்டை போல் தெலுங்குக்குத் தூக்கிக் கொடுத்திருக்கிறது ஒருங்குறிக் கூட்டமைப்பு (Unicode Consortium)!

உண்மையாகத்தான் சொல்கிறேன் நண்பர்களே! இதோ கீழே பாருங்கள்!

unicode consortium

அதாவது இதுவரை தமிழில் மட்டுமே இருந்த ழகரம் இனி தெலுங்கிலும் உண்டு என்பதுதான் இந்த அறிவிப்பின் சாரம்.

நடந்தது என்னவென்றால், வினோத்ராசன் என்கிற ஒருவன் தமிழின் சமய நூல்களைத் தெலுங்கில் ஒலிபெயர்த்து (transcription) எழுதும்பொழுது தமிழின் ழகரமும் றகரமும் மிகுந்த இடையூறு அளிப்பதாகக் கூறி, இந்த இரண்டு எழுத்துக்களையும் இனி தெலுங்கிலும் எழுதப் புதிதாக இரண்டு எழுத்துக்களைத் தெலுங்கில் சேர்க்க வேண்டும் என்று ஒருங்குறிக் கூட்டமைப்புக்கு முன்மொழிவு (proposal) அனுப்பியிருக்கிறான் (முன்மொழிவைப் படிக்கச் சொடுக்குங்கள் இங்கே).

உடனே “இந்தா பிடி” என்று மேற்கண்டவாறு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது ஒருங்குறிக் கூட்டமைப்பு.

நான் ஒன்றும் பெரிய மொழியியல் அறிஞனோ தொழில்நுட்ப வல்லுநனனோ இல்லை. ஒருங்குறிக் கூட்டமைப்பின் அதிகார வரம்பு, ஒருங்குறியின் தொழில்நுட்ப விவகாரங்கள் போன்றவையெல்லாம் எனக்குத் தெரியா. ஆனால் சராசரி மனிதனாக எனக்கு இதில் இரண்டு கேள்விகள் எழுகின்றன.

  1. நம் தாய்மொழியின் எழுத்துக்களை இப்படித் தெலுங்குக்கு வாரி வழங்க ஒருங்குறிக் கூட்டமைப்புக்கு எங்கிருந்து வந்தது அதிகாரம்?
  2. தெலுங்கு மக்களிடமோ ஆந்திர - தெலுங்கான அரசுகளிடமோ எந்த ஒப்புதலும் பெறாமல் தெலுங்கு மொழியில் இவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொண்டு வர ஒருங்குறிக் கூட்டமைப்புக்கு என்ன உரிமை இருக்கிறது?

இவற்றை நாம் கேட்க வேண்டுமா இல்லையா? தமிழும் தெலுங்கும் என்ன திறமூலக் கணினி மொழிகளா? (Is they are Open Source computer languages?) எவன் வேண்டுமானாலும் கைவைத்து மாற்றம் செய்து விட்டுப் போக?

இப்படித்தான் பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழியின் வரிவடிவம் (script) இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்ப இல்லை என்று சொல்லி நம் எழுத்து வடிவங்களையே மாற்றப் பார்த்தார்கள். அப்பொழுது தமிழறிஞர்களும் ஆர்வலர்களும் அதைக் கடுமையாகக் கண்டித்தார்கள். மக்களுக்குத் தெரியாமல் எழுத்தை மாற்றுவது முறையா? என்று நான் கூட அப்பொழுது ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். தொடர் எதிர்ப்பு காரணமாக அப்பொழுது அந்தத் தீய முயற்சி கைவிடப்பட்டது. இப்பொழுது அடுத்ததாக இது.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதே காரணத்தைச் சொல்லித்தான் தமிழில் ஷ, ஜ, ஸ, ஹ, ஸ்ரீ ஆகிய கிரந்த எழுத்துக்களைப் புகுத்தினார்கள். சமற்கிருதம் (Sanskrit) தேவமொழி என்றும் அதில் உள்ள மந்திரங்களை, சுலோகங்களைத் தமிழில் ஒலிப்பு (pronunciation) மாறாமல் எழுதத் தேவைப்படுகிறது என்றும் சொல்லி கிரந்த எழுத்துக்களைத் தமிழில் திணித்தார்கள். விளைவு? இன்று அந்த எழுத்துக்கள் இல்லாமல் நம் மொழி இயங்கவே முடியாது எனும் நிலை ஏற்பட்டு விட்டது.

உலகில் வேறு எந்த இனமும் இப்படி ஒரு பித்துக்குளித்தனத்தைச் செய்வதில்லை. எல்லா மக்களும் அவரவர் மொழியில் காலத்துக்கேற்ப மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்ளத்தாம் செய்கிறார்கள். ஆனால் பிறமொழிச் சொற்களைத் தங்கள் மொழியில் ஒலிப்பு மாறாமல் எழுத வேண்டுமே என்பதற்காகப் புதிது புதிதாக எழுத்துக்களைத் தங்கள் மொழியில் யாரும் ஏற்படுத்திக் கொள்வதில்லை.

ஆனால் இந்தியாவில் மட்டும் சமயத்தின் பெயராலும் புனிதம், தேவமொழி போன்ற கற்பிதங்களின் பெயராலும் இந்தப் பித்துக்குளித்தனம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகிறது. மொழிகள் சிதைக்கப்பட்டு வருகின்றன.

இப்படித் தமிழில் ஏற்படுத்தப்பட்ட சிதைப்புதான் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு எனப் பல்வேறு மொழிகளாகத் தமிழும் தமிழரும் பிரிந்து இன்று நமக்குள்ளேயே நாம் நீருக்காகவும் நிலத்துக்காகவும் அடித்துக் கொள்ள வைத்திருக்கிறது.

இப்பொழுது, இத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்படி ஒரு சிதைப்பு தெலுங்கில் நடப்பதற்குத் தமிழ் மொழியின் எழுத்துக்களைக் கருவியாகப் பயன்படுத்தப் பார்க்கிறான் ஒரு தனி மனிதன். இதைத் தமிழர்களான நாம் எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியும்?

இந்தித் திணிப்பு கூடாது என இரண்டு தலைமுறைகளாகப் போராடி வரும் நாம் இன்று நம் மொழியே இன்னொரு மொழியின் மீது - அதுவும் நம் ஒப்புதல் இன்றியே – திணிக்கப்படுவதை எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்?

சமற்கிருதம், இந்தி போல் தமிழும் ஓர் ஆதிக்க மொழி எனும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் இந்த முயற்சியை நாம் எப்படி நடக்க விட முடியும்?

தமிழுக்குத் தொடர்ந்து பல அரிய சேவைகளைப் புரிந்து வருபவரும் புகழ் பெற்ற தமிழறிஞருமான கண்ணபிரான் இரவிசங்கர் (கரச) அவர்கள்தாம் ஒருங்குறிக் கூட்டமைப்பின் இந்த முறைகேடான அறிவிப்பைக் கண்டித்து முதன் முதலில் இணையவெளியில் பதிவிட்டார். இதற்கு எதிரான இணையவழிப் போராட்டத்தையும் துவக்கி வைத்தார். அவர் இது பற்றிக் கூறும்பொழுது,

“ழகரம் தமிழ்ச் சொத்து. அதைத் தெலுங்கிலும் கொண்டு போய் வைப்பது தேவையில்லாத ஆணி. இதே போல் நாளை क ख ग घ ङ கொண்டு வந்து தமிழிலும் வைப்பார்கள். சமய நூல் எழுத வசதி எனக் காரணமும் சொல்வார்கள்” என எச்சரிக்கிறார்.

இவர் சொன்னதையொட்டித் தமிழர்கள் தெலுங்கர்கள் என இதுவரை முந்நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒருங்குறிக் கூட்டமைப்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனாலும் தான் செய்ததே சரி என்கிறான் இதற்கான முன்மொழிவை அனுப்பிய வினோத்ராசன்.

கணினித் தமிழுக்கு எத்தனையோ அரும்பெரும் சேவைகளைத் தொடர்ந்து ஆற்றி வருபவரான பெருமதிப்பிற்குரிய கணித்தமிழ்ப் பெருந்தகை நீச்சல்காரன் அவர்கள் வினோத்ராசனோடு விவாதம் நடத்தி அதைத் தன் இணையத்தளத்தில் தெலுங்கு யுனிக்கோடில் ழ & ற - விவாதம் எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளார்.

அதில் ஓரிடத்தில் அவன் சொல்கிறான், “மொழிகளும் வரிவடிவங்களும் யாருக்கும் சொந்தமானவை அல்ல” என்று. இதே கருத்தை அவன் என் எதிரில் சொல்லியிருந்தால் சொல்லி முடிக்கும் முன் அவன் செவிள் பெயர்ந்திருக்கும்!

நண்பர்களே, சிந்தித்துப் பாருங்கள்! அஃது எப்படி மொழி என்பது யாருக்கும் சொந்தமானதாக இல்லாமல் இருக்க முடியும்? மொழி என்பது என்ன காற்று, நிலம், வானம் போல் இயற்கையாக உருவானதா? இல்லை! அது மக்களால் படைக்கப்பட்டது.

மொழி மட்டுமில்லை இந்த உலகில் செயற்கையாக உருவாக்கப்பட்ட எதுவாக இருந்தாலும் அது யாரால் உருவாக்கப்பட்டதோ அவர்களுக்குத்தாம் சொந்தம். உருவாக்கியவர்கள் அதை விற்றாலோ அல்லது “இனி இஃது என்னுடையதில்லை; பொதுச் சொத்து” என அறிவித்தாலோதான் எந்த ஒன்றுமே மற்றவர்களுக்கு உரிமையுள்ளதாகவோ பொதுச் சொத்தாகவோ மாற முடியும். அப்படி அறிவிக்கப்படாத வரை மனித முயற்சியால் செயற்கையாக உருவாக்கப்பட்ட எதுவும் அந்தந்தப் படைப்பாளருக்குத்தாம் சொந்தம்! இதுதான் சட்டம்! இதுதான் மரபு!

மொழிகளும் அப்படித்தாம். தமிழோ தெலுங்கோ ஆங்கிலமோ – உலகில் உள்ள எல்லா மொழிகளுமே அந்தந்த இன மக்களால் உருவாக்கப்பட்டவை. என்றைக்கு இருந்தாலும் அவர்களுக்குத்தாம் அவை சொந்தம். அவ்வகையில் தமிழும் தமிழர்களான நமக்குத்தாம் சொந்தம்!

இதற்கு மாறாக, எவனோ ஒருவன் கேட்டான் என்பதற்காகத் தமிழின் இரண்டு எழுத்துக்களைத் தெலுங்கிலும் எழுத ஒருங்குறிக் கூட்டமைப்பு வசதியளித்திருப்பது சற்றும் ஏற்க முடியாதது.

நீச்சல்காரன் அவர்கள் சொல்கிறார், “ழகரமும் றகரமும் தெலுங்கு நெடுங்கணக்கில் (alphabets) சேர்க்கப்படவில்லை; தெலுங்குக்கான ஒருங்குறித் தொகுதியில்தான் (Unicode set) சேர்க்கப்பட்டிருக்கின்றன” என்று.

நீச்சல்காரன் அவர்கள் தலைசிறந்த தமிழ்த் தொண்டர். அவர் தமிழ்த் தாய்க்குச் செய்திருக்கும் சேவைகளுக்கு முன் நான் வெறும் தூசி. ஆனாலும் என் அறிவுக்கு எட்டிய வரையில் நான் ஒன்று கேட்கிறேன்.

ஒரு மொழியின் நெடுங்கணக்குக்கும் ஒருங்குறித் தொகுதிக்கும் என்ன பெரிய வேறுபாடு? இரண்டுமே அந்த மொழியின் எழுத்துத் தொகுதிகள்தாம். இதில் எழுத்தைக் கொண்டு போய் எதில் சேர்த்தால் என்ன? இது முறைசார் (official) மாற்றம் இல்லை என்கிறீர்கள்; புரிகிறது. ஆனால் இரண்டில் எதில் கொண்டு போய்ச் சேர்த்தாலும் அந்த எழுத்துக்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வரத்தானே செய்யும்? ஆக, விளைவு ஒன்றுதானே?

மேலும், “ழகரமும் றகரமும் ஏற்கெனவே பழந்தெலுங்கில் இருந்தவைதாமே; இப்பொழுது மீண்டும் சேர்ப்பதில் என்ன தவறு?” என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

ஏற்கெனவே இருந்தன, உண்மைதான். ஆனால் காலப்போக்கில் அவை அம்மொழியிலிருந்து மறைந்து விட்டன. இதற்கான காரணம் என்னவெனப் பார்த்தால், தெலுங்கில் உள்ள ழகரம் டகரமாகவும் ரகரமாகவும் திரிந்ததுதான் என்கிறது விக்கிப்பீடியா [ஏழு – ఏడు (Edu), கோழி – కోడి (kODi)].

இப்படி ஏற்கெனவே உள்ள எழுத்துக்களும் சொற்களும் திரிந்து புதிய எழுத்துக்களும் சொற்களும் உருவாவதுதான் மொழிகளின் இயல்பு. காலப்போக்கில் ஒரு மொழியில் ஏற்படும் இத்தகைய இயல்பான மாறுதல்களைக் கணக்கில் கொண்டுதான் அந்த மொழியின் நெடுங்கணக்கு, இலக்கணம் போன்ற வரையறைகள் கட்டமைக்கப்படுகின்றன. அப்படி அடிப்படைக் கட்டமைப்புகள் எல்லாம் முடிந்த பிற்பாடு மீண்டும் பழைய எழுத்துக்களைக் கொண்டு வந்து திணிப்பது அந்த மொழியின் மக்களுக்கு எதிரானது.

இப்படித் தெருவில் போகிற எவன் வேண்டுமானாலும் ஒரே ஒரு கடிதம் அனுப்பி உலகின் எந்த மொழியிலிருந்தும் எத்தனை எழுத்துக்களை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்; தன் விருப்பப்படி அவற்றை எந்த மொழியில் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம் என்பது மொழிகள் மீதான மக்கள் உரிமைக்கு மாபெரும் அச்சுறுத்தல்!

தனி ஒரு மனிதனின் ஒற்றைக் கோரிக்கையை ஏற்று ஒருங்குறிக் கூட்டமைப்பு பத்துக் கோடித் தமிழ் மக்களுக்குச் சொந்தமான எழுத்துக்களைத் தெலுங்குக்குத் தாரை வார்த்திருக்கிறது! எட்டுக் கோடித் தெலுங்கு மக்களின் தாய்மொழியுடைய அடிமடியில் கைவைத்திருக்கிறது!

இஃது இந்த இரண்டு மொழிகளுக்குமே இழைக்கப்பட்டுள்ள மாபெரும் கொடுமை!

தொழில்நுட்ப உலகில் தனக்கு இருக்கும் வானளாவிய அதிகாரத்தைப் பயன்படுத்தி உலக மொழிகளைத் தன் விருப்பத்துக்கேற்றபடி வளைத்துப் பார்க்கும் வல்லாதிக்கப் போக்கு!

இதைத் தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள், படைப்பாளர்கள், கலைஞர்கள், இணையக் குடிமக்கள் (Netizens), தமிழ்ப் பொதுமக்கள் என அத்தனை பேரும் சேர்ந்து எதிர்க்க வேண்டியது இன்றியமையாத வரலாற்றுக் கடமை!

கட்டாயம் இதைப் படிக்கும் நீங்கள் அதைச் செய்வீர்கள் என நம்புகிறேன்.

தமிழ் மொழி மீது உண்மையிலேயே பற்று என ஒன்று இருப்பவர்கள், மேலே உள்ளவற்றில் ஒன்றாவது சரி எனக் கருதுபவர்கள் உங்கள் எதிர்ப்பை ஆங்கிலத்தில் எழுதி https://corp.unicode.org/reporting.html எனும் இணையப் பக்கத்தில் உள்ள தொடர்புப் படிவத்தின் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டுகிறேன். அல்லது இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். எனும் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். கடிதம் வழியே எதிர்ப்பு தெரிவிக்க விரும்புபவர்கள்,

The Unicode Consortium

P.O. Box 391476

Mountain View, CA 94039-1476

U.S.A.

எனும் முகவரிக்கு அனுப்பலாம்.

பேசி வழியே எதிர்ப்பைப் பதிவு செய்ய: +1-408-401-8915 எனும் எண்ணை அழைக்கலாம்.

உலகத் தமிழர்களே! ஒன்று திரளுங்கள்!
தமிழ்த்தாயின் மகுடமாம் ழகரத்தை மீட்போம்!

இது தொடர்பான உங்கள் கருத்துக்களை துவிட்டர் (twitter), பேசுபுக்கு போன்ற சமுகத்தளங்களில் #ழகரம்மீட்போம் எனும் சிட்டையில் (hashtag) பதிவிடுங்கள்!

- இ.பு.ஞானப்பிரகாசன்

Pin It