கேள்வி: ஏன் பார்ப்பனியம் என்று அழுத்திச் சொல்கிறீர்கள்?
பதில்: சாதியப் படிநிலையை நம்புகிறவர்களைக் குறிப்பிடவும், அந்த மனோநிலையை உணர்த்தவும் அப்படி சொல்றோம்.
கேள்வி: அப்படி சொல்வது பார்ப்பனர்களை மட்டும் குறிக்கிறதே? மற்ற சாதியினரையும் குறிப்பிட்டுச் சொல்லலாமே?
பதில்: பார்ப்பன மேலாதிக்கத்தை விரும்புவர்களை, அதற்குத் துணை நிற்கின்ற, சாதியப் படிநிலையை பாதுகாக்க விரும்புகின்ற அனைவரையும் ஒட்டுமொத்தமாக குறிக்கும் ஒற்றைக் குறியீட்டுச் சொல் தான் பார்ப்பனியம். அந்த சொல், சாதியப் படிநிலையை விரும்பும் அல்லது அதைப் பாதுகாக்கத் துணைநிற்கும் இடைநிலைச் சாதிகளையும் குறிக்கும் என்பது உண்மை என்றாலும், அவர்கள் பழக்க வழக்கத்தால் மட்டுமே சாதியைக் கைவிடாது இருப்பவர்கள். அவர்களும் சாதியப் படிநிலையால் பாதிக்கப்பட்டவர்கள் தான். ஆனால் பார்ப்பனர்களைப் பொருத்தவரையில் சாதிப் படிநிலையின் ஒட்டுமொத்த நன்மையை அனுபவிப்பவர்கள். எனவே அவர்கள் அதை கட்டிக் காக்க விரும்புகிறார்கள். குலைந்து விடாமல் இருக்க பெருமுயற்சி எடுக்கிறார்கள்.
உதாரணமாக தேவதாசி முறையை ஒழித்தமைக்காக இன்றும் பெரியாரின் மீது வன்மத்தோடு சின்மயி-யின் தாயார் பத்மாசினி பேசி இருக்கிறார். தேவதாசி முறையால் பாதிக்கப்பட்டது இசை வேளாளர் என்ற மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகப் பெண்கள். அதில் நன்மை அடைந்தது பார்ப்பன சமுகம் மட்டுமே. இன்னொரு சமுகத்தை பலியிட்டாவது தனது மேலாண்மையை, நன்மையை, ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள விரும்பும் அந்த மனநிலைதான் பார்ப்பனியம்.
இன்றைய நிலையில் மனசாட்சி உள்ள எந்த ஒரு தனிநபரிடம் கேட்டாலும், தேவதாசி முறையை ஆதரிக்க முன்வர மாட்டார்கள். ஆனால் ஒரு பார்ப்பனரால் நிச்சயம் முடிகிறது. ஏனெனில் அது அவர்களுக்கு மட்டும் நன்மை அளிக்கிறது. எவன் கெட்டால் என்ன, எனக்குப் பலன் இருக்கிறதே என்ற முடிவை பார்ப்பனரால் மட்டுமே எடுக்க இயலுகிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களோடு சமமாகப் புழங்குகிறார்கள் என்ற ஒற்றைக் காரணத்தைத் தவிர, வேறெந்த காரணத்தையும் 'சாதியப் படிநிலையை ஆதரிக்கும்' இடைநிலைச் சாதியினர் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் தாழ்த்தப்பட்ட மக்களை தன்னோடு சமமாக புழங்கக் கூடாது என்று நினைக்கும் இடைநிலைச் சாதியினரால், தான் நினைத்தாலும் பார்ப்பனர்களோடு சமமாகப் புழங்க இயலவில்லை. அந்த ஏக்கம் எப்போதும் அவர்களுக்கு உண்டு. சாதியப் படிநிலை தனக்குப் பெரிய நலன்களைத் தரவில்லை, மாறாக பார்ப்பனர்களுக்கு மட்டுமே ஏகபோக உரிமையைத் தருகிறது என்ற புரிதல் அனைத்தது இடைநிலைச் சாதிகளுக்கும், பார்ப்பனரல்லாத மற்ற உயர்சாதியினருக்கும் உண்டு. அதனால் தான், "அதென்ன பார்ப்பான் (குடுமி) மட்டும் கோயில்ல மணியாட்டனுமா? நாங்க ஆட்டக் கூடாதா?" என்ற சொல்லாடலை அடிக்கடி பார்ப்பனரல்லாதவர்களிடம் கேட்க இயலுகிறது.
தேவதாசி முறை ஒழிக்கப்பட்டு கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. பெரியார் இறந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. சின்மயி-யின் தாயாருக்கு கிட்டத்தட்ட 60 வயது இருக்கலாம். பெரியாரை நேருக்கு நேர் சந்தித்திருக்க சின்மயி-யின் தாயாருக்கு வாய்ப்பில்லை. தேவதாசி முறையை நேரில் கண்டவரும் இல்லை. ஆனாலும் இன்றும் தன் வர்க்கத்தின் பிரதிநிதியாக நின்று கொண்டு தேவதாசி முறையை ஆதரிக்க இயலுகிறது அவரால். இந்த மனநிலையைத் தான் பார்ப்பனியம் எனச் சுட்டுகிறோம்.
மனசாட்சி உள்ள ஒருவரால் இன்று தேவதாசி முறையை ஆதரிக்க இயலாது. ஆனால் தனது வர்க்க நலனா, மனசாட்சியா என்று நெருக்கிக் கேட்டால் பார்ப்பனர்கள், தமது வர்க்க நலனைப் பாதுகாக்கவே தேவதாசி முறையை ஆதரிக்க முன்வருகிறார்கள். பத்மாசினியின் பெரியார் மீதான கோபத்தை இப்படித்தான் புரிந்து கொள்ள இயலும். தமிழா, ஆங்கிலமா என்று கேட்டால் தமிழ் என்றும், தமிழா சமஸ்கிருதமா என்று நெருக்கிக் கேட்டால் சமஸ்கிருதம் என்று சொன்ன பாரதியின் மனநிலைக்கும், பத்மாசினிக்கும் வேறுபாடில்லை. இருவரும் தங்கள் வர்க்க நலனைப் பிரதிபலிக்கிறார்கள்.
பக்தியும், மதமும் காலகாலமாக பார்ப்பனர்களுக்கு உதவுகிறது. அதன் மூலம் தங்கள் வர்க்க நலனைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்பதை உணர்ந்ததால் பெரியார் பக்தியைச் சாடினார். மத நம்பிக்கையை நிர்மூலமாக்க சமசரமற்றுப் போராடினார். அந்தக் கோபம் பார்ப்பனர்களுக்கு இருக்கத்தானே செய்யும்? அவ்வளவு எளிதில் மறைந்து விடுமா? அதன் வெளிப்பாடு தான் பத்மாசினியின் வெளிப்படையான தேவதாசி ஆதரவு நிலை. அது தான் பார்ப்பனியம்.
- சு.விஜயபாஸ்கர்