குல தெய்வங்கள்

இறந்தோர் நினைவாகக் கல்நடுவதும், நடுகல் எனப்படும் அவற்றை வழிபடுவதும் - பண்டைய வழக்கம்.

நடுகல்லாய் நிற்கும் முன்னோரைக் குலதெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் அன்றைய மக்கள் கருதினர்.

ஒரு குலத்துப் பிறந்தோரைப் பங்காளிகள் என அடையாளம் காணவும் தமக்குள் மணவுறவு  நேராமல் தடுத்துக் கொள்ளவும் குலதெய்வ வழிபாடு உதவியது.

குலத்தலைவர்கள்

ஊர் காத்த வீரர்கள்

தீயில் புகுந்து உயிர்விட்ட பத்தினிப் பெண்டிர் முதலிய முன்னோரை வழிபட்ட வழக்கமே - குலதெய்வ வணக்கமாக இன்றும் தொடர்கிறது.

ayyanarபக்தியின் தொடக்கம்

பழங்கால மக்கள் - தத்தம் குலக்குறியை மனிதனுக்கு மீறிய ஆற்றலாகக் கருதி, அதனிடம் பக்தி கொண்டனர்.

பழங்கால மக்கள் இயற்கையுடன் கொண்ட தொடர்பினால் விலங்கு, செடி, கொடி என இயற்கைப் பொருள்களைத் தம் பாதுகாவலராகக் கருதி வழிபட்டனர்.

கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்ட குலக்குறிகள் - இயற்கைக்கும் மனித சமூகத்திற்கும் இடையிலான தொடர்பை விளக்கும் வரலாற்றுச் சின்னங்கள்.

வேட்டையாடி உண்ணும் வாழ்விலிருந்து வேளாண்மை செய்து உண்ணும் வாழ்வு தோன்றிய காலத்தில் தோன்றியதே தாய்த் தெய்வ வழிபாடு.

இவ்வழிபாட்டின் தொடர்ச்சியாகவே, ஏராளமான அம்மன்கள் இன்றும் வழிபடப்படுவதைக் காணலாம். குழந்தைப்பேறு, மனித இனப்பெருக்கம் இவை சார்ந்த நம்பிக்கைகளின் வளர்ச்சியைத் தாய்த்தெய்வ வழிபாட்டின் மூலம் உணர முடியும்.

போந்தை (பனை), வேம்பு, ஆத்தி என்னும் மூவகை மரங்களோடு இணைத்தே - சேர, சோழ, பாண்டியர் மூவரும் இன்றும் பேசப்படுகின்றனர். மூவேந்தரின் குலக்குறிகளே அந்த மரங்கள்.

பேகன் மயிலுக்குப் போர்வையளித்தான் எனப் படிக்கிறோம். தம் குலக்குறியாகிய மயில் துன்புறுவதைப் பேகன் பொறுக்க மாட்டாமையால் இவ்வாறு செய்தான் என்பதே இன்றைய தெளிவு.

தொன்மைக்காலக் குலக்குழுச் சின்னங்கள் பலவும் கடவுள் உருவம் பெற்றது போல, குலக்குழுக்களின் பெயர்கள் பலவும் சாதிக் கூட்டங்களின் பெயர்களாக இன்று தொடர்கின்றன.

தமிழர் மத வரலாறு

தமிழனுக்கு கடவுள் உண்டு; மதம் இல்லை. என்ன சாதி என்றால் சொல்வார்கள். என்ன மதம் என்றால் விழிப்பார்கள். படித்தவர்கள் மட்டுமே தங்களுக்குள்ள மத அடையாளத்தை அறிவார்கள். தமிழ்நாடு முழுவதும் தொடரும் நிலை இது. அவர்களுக்குத் தெரிந்தது சாமி மட்டும்தான்.

கிறித்தவ, இசுலாமிய, சீக்கிய சாதி மதங்களைக் கூட சாதிகளாகப் பார்ப்பதுதான் தமிழக மக்கள் வழக்கம்.

கிறித்துவ சாதி, துலுக்க சாதி, சீக்கிய சாதி என்று கூறுவதை இன்றும் எல்லா ஊர்களிலும் பார்க்கலாம். என் மதம், உன் மதம் என்ற வெறியுணர்விற்கு விதையூன்றப்படும் கொடுமை - இப்போதுதான் அரும்பப் பார்க்கிறது.

மதவெறி - அரும்பிலேயே கருகிவிடும் என நம்பலாம். தமிழ் நாட்டின் அறிவு நெறிப் பண்பாடு அப்படிப்பட்டது.

வேளாங்கண்ணி சென்று மாதாவையும் வணங்குவார்கள். நாகூர் சென்று ஆண்டவரையும் வழிபடுவார்கள். மத வேறுபாடு கருதாத மனித நேயம் தமிழ்நாட்டின் தனித்தன்மை. இங்கு மதவெறி தலை தூக்கினால் - மண்மணம் மறைந்துவிட்டதென்று பொருள்.

தமிழர்களுக்கு மதம் இல்லை. இயற்கை வழிபாடே தமிழர் நெறி. தமிழ் நாட்டு மக்களிடையே செல்வாக்கைப் பெற - நான்கு வடநாட்டு மதங்கள் போட்டியிட்டன.

புத்த மதம், சமண மதம், வைதீக மதம், ஆசீவக மதம் - என்னும் நான்கு மதங்களே அவை.

தமிழர்களிடையே மிகப்பெரும் செல்வாக்கை முதலில் பெற்றது புத்தமதம், ஏனைய வடநாட்டு மதங்கள் - புத்த மதம் பெற்ற செல்வாக்கைத் தமிழ் நாட்டில் பெற முடியவில்லை.

புத்த மத்திற்கு அடுத்து தமிழர்களைக் கவர்ந்த மதம் சமணம்.

கொங்கு நாட்டில் சமணமதச் செல்வாக்கே மிகுந்திருந்தது.

ஆசீவகம் முற்றும் பின்னடைந்திருந்தது. வருணாசிரமக் கொள்கையையும் வடமொழியையும் சுமந்து வந்த வைதீக மதம் அரசர்களை முதலில் வசப்படுத்தியது. அவர்கள் மூலம் மக்களை ஈர்க்கத் தொடங்கியது. அதுவே பின்னர் இந்து மதம் எனப் பெயர் பெற்றது. இசுலாமியர் சூட்டிய பெயர் அது. 

சைவம், வைணவம், சாக்தம், சவுரம், கவுமாரம், காணாபத்தியம் என்னும் ஆறு (ஷண்) மதங்களையும் இந்து மதம் எனும் பொதுப்பெயரின் கீழ் நிறுத்தியவர் ஆதிசங்கரர்.

புத்தம், சமணம், ஆசீவகம் முதலியவை 'கடவுள் இல்லை' என்னும் கொள்கையுடைய மதங்கள்.

அவை பெற்றிருந்த இடத்தை, இறுதியில் வைதீக (இந்து) மதம் பெற்றுவிட்டது வரலாற்றுப்புதிர்.

பல கடவுள் வணக்கம், பொருளற்ற மூடச்சடங்கு போன்ற அறியாமை இருள் எழுகின்ற போதெல்லாம் - புதிய ஒளி ஏற்றி சமுதாயத்தைச் சீர்திருத்த முனைந்த அருளாளர் பலரை வரலாறு நெடுகிலும் பார்க்க முடியும்.

ஆபிரகாம் (ஒரு கடவுட் கோட்பாடு)

கி.மு. 1850

மோசசு (யூத மதம்)

கி.மு. 1250

கவுதம புத்தர் (புத்த மதம்)

கி.மு. 563 – 483

கன்பூசியசு  (கன்பூசியம் சீனம்)

கி.மு. 551 – 479

மகாவீரர் (சமணம்)

கி.மு. 540 - 468

ஏசு கிறித்து (கிறித்துவ மதம்)

கி.மு. 4 - கி.பி. 30

முகமது நபி (இசுலாம் மதம்)

கி.பி. 570 – 632

குருநானக் (சீக்கிய மதம்)

கி.பி. 1469 – 1539

இராமலிங்க அடிகளார் (சமரச சன்மார்க்கம்)

கி.பி. 1823 – 1874

தந்தை பெரியார் (சுயமரியாதை இயக்கம்)

கி.பி. 1879 - 1973

கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை கொங்கு நாட்டில் சமண மதமே செல்வாக்கோடு திகழ்ந்தது.

எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்பே சைவமதம் அறிமுகமாகி சமணம் வீழ்த்தப்பட்டது.

உடுமலை திருமூர்த்தி மலையிலுள்ள சமணர் கோவில், இன்று அமணலிங்கேசுவரர் என இந்து மதக் கோயிலாக  மாற்றப்பட்டுவிட்டது.

இப்படிப் பல வகைகளிலும் சமணமதச் செல்வாக்கையும், கோவில்களையும் சைவம் கவர்ந்து கொண்டது.

மதம் சாராக் குலதெய்வ வழிபாடுகளே இன்றும் தமிழ்நாட்டில் மிகுதி இவற்றை இந்து மதப்பட்டியலில் இணைத்துப் பார்ப்பது இயலாது.

பார்ப்பன‌ப் பூசாரிகள் இக்கோவில்களில் இல்லை. பார்ப்பன‌ர்களோ, பிற மாநில இந்துக்களோ - இந்தக் கோவில்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இன்று வரையிலும் இதே நிலைதான் தொடர்கிறது.

குலதெய்வக் கோவில்களின் வழிபாட்டு முறையும் படையல் வகையும், விழா நடப்பும் மண்மணத்தோடு பொருந்தியவை; மக்கள் வாழ்வோடு இணைந்தவை.

ஈசுவரன் கோவில், பெருமாள் கோவில், இராமர் கோவில், விநாயகர் கோவில் முதலிய இடங்களில் பூணூல் அணிந்த சாமிகளையே பார்க்க முடியும். சாமிக்கே அப்படி ஒரு நூலை அணிவித்திருப்பார்கள்.

குலதெய்வக் கோவில்கள், மக்கள் வாழ்வோடு மலர்ந்தவை. மக்களியல்புக்கு மாறான உடல்வேடங்களோ அந்நிய மொழிக் கூச்சலோ அங்கே நுழைய முடியாது. அப்படி நுழைந்திருந்தால் - மக்கள் வாழ்வுக்கு மாறான யாரோ அங்கே நுழைந்திருக்கிறார்கள் என்று பொருள்.

(வளரும்…)

புலவர் செந்தலை .கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை