நமது நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் கலவரமும் வன்முறையும் நடந்து வருகின்றன. மதச்சார்பால் தோன்றிய கலவரத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் துயரங்களும் துன்பங்களும் கேட்பாரற்று கதிகலங்கி நிற்கின்றன. அவர்களுடைய பரிதாபமான நிலையை அறிந்தும் அரசாங்கமும், பொதுநல மேம்பாட்டு துறையும் எந்தவித அக்கறையும் காட்டவில்லை.

இருபது அல்லது பத்து வருடங்களுக்கு முன்பு வன்முறையால் உறவினர்கள், வீடுவாசல், பொருள்கள், சந்தோஷம் அனைத்தையும் இழந்து தவிக்கும் அப்பாவி மக்களின் கஷ்டங்களை துடைக்க அரசாங்கத்திற்கு நேரமில்லை. அக்கறையில்லை. வன்முறை நடந்த பிறகு அறிவித்த நஷ்டஈடு தொகை பாதிக்கப்பட்ட மக்களின் கைகளுக்கு இன்னும் வந்து சேரவில்லை. ஒரு அரசாங்கம் தெரிவித்த நஷ்டஈடு தொகையை அடுத்து வரும் அரசாங்கம் புறக்கணித்து விடுகிறது. தங்குவதற்கு கூறை கூட இல்லாமல், ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாமல் திண்டாடும் இந்த அப்பாவி மக்கள் எந்தத் தவறும் செய்யாமல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

1984 ஆம் ஆண்டில் தலைநகரில் நடந்த கலவரத்தால் பல சீக்கியக் குடும்பங்கள் உறவினர்களை இழந்து பொருட்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்டார்கள். இந்தச் சம்பவம் நடந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா இருபதாயிரம் நஷ்டஈடு தொகையாக அரசாங்கம் அறிவித்தது. இந்த நஷ்டஈடு தொகை மிகவும் குறைவென்றும் இதனை சற்று அதிகரிக்குமாறு பஜன் கௌர் என்ற பெண்மணி எதிர்த்துப் போராடினார். அவருடைய போராட்டம் அரசாங்கத்தின் செவிகளில் விழவில்லை. அறிவித்த நஷ்டஈடு தொகையை மாற்றுவதற்கு அரசாங்கமும் உயர் அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

சட்ட புத்தகத்தில் இருபத்தொன்பதாம் பகுதியின்படி நாட்டின் பிரஜைகள் வன்முறையால் பாதிக்கப்பட்டால் தகுந்த நஷ்டஈடு தொகை உடனடியாக வழங்க வேண்டும். அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பும் அளித்து, அவர்களின் வளர்ச்சிக்கு அரசாங்கம் உறுதுணையாக அமைய வேண்டும் என்று கருதப்படுகிறது. அனைத்து பிரஜைகளையும் சமமாக கருத வேண்டும். அனைவருக்கும் சம உரிமையும் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

1984 ஆம் ஆண்டில் நடந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட சீக்கியக் குடும்பங்களுக்கு நஷ்டஈடு தொகை கொடுப்பதற்கு அரசாங்கம் 1990ஆம் ஆண்டில் அறிவித்தது. இந்தத் தொகை மிகவும் குறைவானது என்று போராட்டம் செய்தார். 2006ஆம் ஆண்டில் அரசாங்கம் தொகையை அதிகரித்தது. உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட சீக்கியக் குடும்பங்களுக்கு அரசாங்கம் 105 கோடி ரூபாய் நஷ்டஈடு தொகையாக ஒதுக்கப்பட்டது. அது போல குஜராத் மாநிலத்தில் மதத்தால் தோன்றிய வன்முறை பல குடும்பங்களை அழித்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு தொகையாக 19 கோடி ரூபாய் குஜராத் உயர்நீதி மன்றம் அறிவித்தது. பாதிக்கப்பட்ட மக்களுள் எழுபது சதவிகிதம் மக்களுக்கு இன்று வரை நஷ்ட ஈடு தொகை கிடைக்கவில்லை. வீடுகளையும் பொருள்களையும் இழந்து தவிக்கும் மக்களின் கண்ணீர் தான் மிச்சம். இவர்களின் கோரிக்கையை சட்டை செய்யாமல் அரசாங்கமும் உயர்நீதி மன்றமும் நஷ்ட ஈடு தொகையை கொடுத்துவிட்டதாக தெரிவித்தது.

1000 கிராமங்கள் கொண்ட பதினேழு தொகுதிகளும் வன்முறையால் பாதிக்கப்பட்டன. அனைத்தையும் இழந்து விட்டு தவிக்கும் அப்பாவி மக்களின் குரல்கள் காதுகளில் விழவில்லை. அவர்கள் யாரிடமும் முறையிடுவோர்கள் 1146 குடும்பங்கள் கொண்ட அனந்த் தொகுதியில் 112 குடும்பங்கள் தான் நஷ்ட ஈடு தொகையை பெற்றுக் கொண்டது. மீதியிருந்த நஷ்டஈடு தொகை எங்கு செலவழிக்கப்பட்டது? யாரிடம் கொடுக்கப்பட்டது? என்ற கேள்விகளுக்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை. மக்களின் துயரங்களை துடைப்பதற்கு வழங்கப்பட்ட நஷ்டஈடு தொகை பாதிக்கப்பட்ட மக்களின் கைகளுக்கு இன்றுவரையில் வந்து சேராததற்கு குஜராத் அரசு, காவல்துறை, உயர்நீதிமன்றம் என்ன பதில் கொடுக்க வருகிறது? என்று தெரியவில்லை. ஆனால் அப்பாவி மக்கள் இன்னும் தவித்து கொண்டிருக்கிறார்கள். ஏதேனும் ஒரு நாள் விடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

- சந்தியா கிரிதர்

Pin It