ஜெயமோகன், நவீன தமிழ் இலக்கிய வட்டத்தில் தவிர்க்க முடியாத பெயர். இலக்கியம் சார்ந்த அக / புற வித்தைகள் பல நிகழ்த்துபவர். ஒப்புக்கொள்ள வேண்டிய இன்னொரு படைப்பாளி. மலையாளப் படைப்புலகிலும், இப்படியான கீர்த்திகளுக்கு அவர் சொந்தக்காரர். இலக்கியம் சார்ந்த அவரது தீவிரம் வியக்க வைக்கக் கூடியது. ஒரே நேரத்தில், தனது அதிகப்படியானப் படைப்புகளை வெளியீடுச் செய்த தமிழ்ப் படைப்பாளி இவர் ஒருவராகத்தான் இருக்கும். தொடர்ந்தும் தன் படைப்புகளின் வெளியீடுகளை அநாயாசமாக வெளியீடும் செய்பவர். இவரது படைப்புகள் பல, தீவிர வாசிப்புக்கும்/தீர பாராட்டுதலுக்கும் உரியது.
ஜெயமோகனின் இலக்கியம் சார்ந்த புறவித்தைகள் எனக்கு ஏற்புடையது அல்ல. இது குறித்து அவரை நான், ஒன்றுக்கும் மேற்பட்டத் தடவைகள் விமர்சனத்திற்கு உட்படுத்தியிருக்கிறேன். என்றாலும், யோசிக்கிறபோது இப்படியான வித்தைகள் சார்ந்த இலக்கிய அரசியலை நம் படைப்பாளிகளில் இன்னும் சிலரும் செய்யத்தான் செய்கின்றார்கள். இவர்களின் போக்கை சுட்டிக் காட்டி, சில தடவைகள் ஜெயமோகன்கூட விமர்சனம் வைத்திருக்கிறார்.
ஜெயமோகனின் இலக்கிய முரண்பாடுகளாக நான் கண்டு தெளிந்தவைகள் பல உண்டு. அவைகள் எனக்கு ஏற்புடையதல்ல. அது மாதிரியே அவரது ஆன்மீகமும். ஜெயமோகன் முன் வைக்கும் ஆன்மீகம் பொருட்டு, பெரியாரை அவர் பார்க்கும் பர்வையும், முன்முடிவுக் கொண்ட விமர்சனமும், அவரை புறம் தள்ளும் விதமும் எனக்கு உடன்பாடானதல்ல.
Thursday July 27, 2006 / திண்ணை இதழிழ், ஜெயமோகன் எழுதிய 'இரு கலைஞர்கள்' என்றொரு சிறுகதை பிரசுரமாக, அதை நான் என் பார்வையில் விமர்சித்திருந்தேன். சில வரிகளைக் கொண்ட அந்த விமர்சனம் அடுத்த திண்ணை இதழில் பிரசுரமாகியிருந்தது. பிரசுரமான தினத்திலேயே அதை பார்வை செய்த ஜெயமோகன், உடனே திண்ணைக்கு கடிதமும் செய்திருந்தார். அதையொட்டி நான் எழுதிய பதிலை, திண்ணையில் பிரசுரித்திருந்தார்கள். ஆனால், அந்த பிரசுரம் சுமார் பன்னிரெண்டு மணி நேரம் மட்டுமே பார்வைக்கு இருந்தது. பின்னர் அதை எடுத்துவிட்டார்கள். திண்ணையில் எந்தவொரு கட்டுரைக்கும் இப்படியொரு பாதிப்பு நடந்து நான் பார்த்ததில்லை.
பிரச்சனைக்குறிய 'இரு கலைஞர்கள்' என்ற சிறுகதையினை நீங்கள் திண்ணையின் பக்கங்களில் வாசிக்கலாம். மற்றப்படி, அந்த கதைக் குறித்து நான் எழுதிய விமர்சன வரிகள்/அதையொட்டி ஜெயமோகன் திண்ணைக்கு எழுதிய கடிதம்/ தொடர்ந்த யென், 'ஜெயமோகனுக்கு நன்றி' என்ற கட்டுரை (திண்ணையில் பன்னிரெண்டு மணி நேரம் மட்டுமே பிரசுரிக்கப்பட்ட கட்டுரை) யென எல்லாவற்றையும் கீழே உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன்.
***
Thursday August 10, 2006
ஜெயமோகன் பார்வைகளுக்கு
- தாஜ்
ஜெயமோகனின் மெளனம் கலைந்திருப்பது வரவேற்கத்தக்கது. திண்ணையில் வாசிக்க நேர்ந்த அவரது 'இருகலைஞர்கள்' மிகவும் தட்டையாக இருந்தது. குமுதம் ஒரு பக்கக் கதைக்கு போட்டியோ என்றுகூட நினைக்கத் தோன்றிற்று. சுமார் இருபது வருட காலமாக நான் வாசித்த அவரது சிறுகதைகளில், இப்படியொரு சாதாரண கதை மையத்தை நான் கண்டதில்லை. 'கைபோகும் போக்கிற்கு தடையற எழுத வரும்' எழுத்து என்பது இதுதானோ என்னமோ!
ஒரு புகைப்படத்தை பார்த்து அழுவதற்குகாக வேண்டி, யுவராஜா சற்றும் யோசிக்காமல் ஜெ.கே.யும் அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை போனதே அதிகம்! அதையும் தாண்டி ஜெ.கே.யைப் பார்த்து "உங்களால் ஏன் அழமுடியவில்லை?" என்று கேட்பது நிச்சயம் அத்துமீறும் விசயம்தான். சரியாகத்தான் ஜெ.கே. சாடியிருக்கிறார். 'கள்ளமோ கரைந்தழும்' என்று. ஜெயமோகன் கூட தாளாமையால் கரைந்தழுகிறவர்தான். பார்த்துமிருக்கிறேன்/கேட்டுமிருக்கிறேன்.
***
Thursday August 10, 2006
கடிதம்
- ஜெயமோகன்
ஆசிரியருக்கு,
சென்ற இதழில் தாஜ் என்பவர் எழுதிய கடிதம் கண்டேன். இவர் என்னை தனிப்பட்ட முறையில் அறிந்தவர் போல் எழுதியிருந்ததை ஒட்டி இக்கடிதம். இவர் எனக்கு பத்து வருடங்கள் முன் சில வாசகர் கடிதங்கள் அனுப்பியுள்ளார். நல்ல வாசகர் என்ற எண்ணம் எனக்கு ஏற்படாவிட்டாலும் என் வழக்கப்படி நான் பதில்களும் அனுப்பியுள்ளேன். ஒரே ஒருமுறை ஒரு கூட்டத்தில் கண்டு ஒருநிமிடம் கைகுலுக்கிக் கொண்டோம். அதன் பின் திடீரென்று வசைக்கடிதங்கள் அனுப்பத் தொடங்கினார். விஷ்ணுபுரம் வந்த பின். அவற்றில் இருந்த மதக்காழ்ப்பை கண்டபின் அவருக்கு நான் எதிர்வினையாற்றுவதில்லை. மற்றபடி அவர் என்னை தெரிந்தவர் போல் எழுதுவது பிழை.
ஜெயமோகன்
***
ஜெயமோகனுக்கு நன்றி.
-------------------------------
- தாஜ்..
ஜெயமோகன் என்னைக் குறித்து திண்ணையில் கடிதம் எழுதியிருக்கிறார். பதில் எழுதுவதென்பது தவிர்க்க இயலாது. நாகரீகம் சம்பந்தப்பட்டது. நம் பெரியவர்கள் ரொம்பத்தான் நாகரீகத்தை போதித்து தொலைத்திருக்கிறார்கள்.
என்னளவில் இலக்கியம் என்பது ஆத்மார்த்தமான / அமைதிக் கொள்கிற இடம். இலக்கியப் பங்களிப்பென்பது பெரும்பாலும் நல்ல புத்தகங்கள் வாங்கிப் படிப்பது மட்டும்தான். கவிதை, கட்டுரை, விமர்சனம் எழுதுவதென்பதெல்லாம் அந்த பங்களிப்பினூடே கைமீறுபவைகள். குறிப்பாய் விமர்சனம் எழுதுவது என்னளவில் விபத்துமாதிரி சம்பவித்த ஒன்று. 1986ம் ஆண்டு வாக்கில் திரு.கருணாநிதி தமிழக முதலமைச்சராக இருந்தபோது, நவீன இலக்கியம் குறித்த அவரது கூற்று சுபமங்களாவில் வெளிவந்தது. அதன் முரணை அடுத்த இதழில் மறுக்கப்போய், அவரது எழுத்துக்களையும் விமர்சனத்திற்கு இழுத்து விட்டேன். பயமறியாதுபோன இளமையை எண்ணியபடியே இருந்த நேரத்தில், அந்த விமர்சனத்தைக் கண்டு கைகுலுக்கிய முதல்கடிதம் ஜெயமோகனுடையதுதான்.
பொதுவாக என் விமர்சனங்களில் நான் மிகுந்த கவனம் கொள்கிறவன். அரசியல் / இலக்கிய அரசியல் / குழுமனப்பான்மை / ஆன்மீகம் / மதம் / இனம் / மொழி / என்பதான எந்த இழவோடும் என்னை நான் இணைத்துக் கொள்ளாதவன். பெரியார் மட்டும் உண்டு. அதுவும் சுயவிமர்சனத்திற்கு உட்பட்ட பெரியார் மட்டும்.
சமீப மாதங்களாக நான் ஜெயமோகனையும், அவரது எழுத்துகளையும் விமர்சனத்திற்கு உட்படுத்துவது நிஜம்தான். இலக்கியப் போக்குகளின் வழியேயான உணர்தல் பொருட்டு, இத்தகைய விமர்சனம் தேவை என்று கருதி பதிவு செய்துவருகிறேன்.
ஜெயமோகனின் எனக்கான திண்ணை கடிதத்தை கண்டபோது, நான் எழுதியிருந்த அந்த சின்ன அளவிலான விமர்சன வரிகள் அவரைப் பாதித்திருப்பதை உணர்ந்தேன். 'இருகலைஞர்கள்' என்ற அவரது அந்த சிறுகதையையும், என் விமர்சன வரிகளையும் திரும்ப வாசித்துப் பார்த்தேன். சரியாகத்தான் இருந்தது. மாடன் மோட்சம் / படுகை / போதி/ஆயிரம் கால் மண்டபம்/ கிளிக் காலம் / பார்த்தீனியன் / போன்ற அவரது சிறுகதைகளை சரியான கோணத்தில் வாசித்து உள்வாங்கிய எந்தவொரு வாசகனும், எனது விமர்சன வரிகளை மறுக்க மாட்டான்.
***
'சரியாகத்தான் ஜெ.கே. சாடியிருக்கிறார். கள்ளமோ கரைந்தழும் என்று. ஜெயமோகன்கூட தாளாமையால் கரைந்தழுகிறவர் தான். பார்த்துமிருக்கிறேன் / கேட்டுமிருக்கிறேன்.' - எனது இந்த கடைசி இரண்டு வரிகளே அவரை கடிதம் எழுதவும், தன்னிலை விளக்கம் தரவும் அதிகமாக நிர்பந்தித்திருக்கக் கூடும்.
1986 ம் ஆண்டு ஆகஸ்ட்டு வாக்கில் குற்றாலத்தில் கவிதைப் பட்டறை நடந்தது. சுபமங்களா ஆசிரியர் கோமல் சுவாமிநாதன் தான் தலைவர். முதல்நாளின் முதல்அமர்விலேயே சர்ச்சை கலைக்கட்டியது. ஜெயமோகன்தான் மையம். பதினெட்டாம் நூற்றாண்டின் ஐரோப்பிய படைப்பாளியான 'போர்ஹே' குறித்து ஜெயமோகன் ஏதோ தவறுதலாக குறைத்து மதிப்பீடு செய்து எழுதி விட்டதாகவும் நாகர்ஜூனன், பிரம்மராஜன், சாருநிவேதிதா, ரமேஷ் பிரேம், இன்னும் சில எழுத்தாளர்களும் ஒரேமுகமாய் ஜெயமோகனுக்கு எதிராக எழுப்பிய கூச்சலும் சப்தமும் காதை அடைக்கச் செய்தது. ஜெயமோகன் எவ்வளவோ விளக்கங்கள் தந்தும் பிரயோஜனப்படவில்லை. அவருக்கு எதிரான அதிர்வு, சபை நடந்தேறிய அந்த பழைய திவான் பங்களாவையே உலுக்கியது.
மனுஷப்புத்திரன் சற்றுத் தள்ளி மௌனமாக அமர்ந்திருந்தார். இன்னொருப் பக்கம் விக்ரமாதித்தியன் படுத்துப் புரண்டு தனி ராஜியம் நடத்திக் கொண்டிருந்தார். கோமல், தலைவரென்ற கோதாவில் எல்லோரையும் சமாதானப்படுத்த யாரும் கேட்பதாகவேயில்லை. ஜெயமோகனின் மனைவி, வெளிவராண்டாவில் நின்று ஜன்னலின் வழியே விவாதத்தின் போக்கைப் பார்த்தப்படி விக்கித்துப் போனார். கையில் குழந்தை! கண்களில் கண்ணீர்! எனக்கு அந்த கவிதைப் பட்டறை முகம் சுழிக்க வைத்தது. நான் பெரிதாக நினைத்த இலக்கியவாதிகளின் அடாவடிகளினால் இன்னும் சுண்டிப்போனேன்.
ஜெயமோகன் சபையைவிட்டு வெளிவந்து மனைவியைச் சமாதானப்படுத்தினார். அந்த தங்கை மேலும் அழுதப்படியே இருந்தார். ஜெயமோகனுக்கும் அழுகை கசிந்தது. நான் அவரது தோளைப்பற்றி ஆறுதல் சொன்னேன். இவர்களுக்கு இலக்கியமும் தெரியாது உடைவுடுத்தவும் தெரியாது என்றார். அதிகத்திற்கு அதிகமாக சப்தமிட்ட சாரு, பிரேம், ரமேஷ் போன்றோர் அன்றைக்கு 'பெர்மூடா' அணிந்திருந்தார்கள். அப்போதிருந்த மனநிலையில் ஜெயமோகன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி, அவரை சமாதானப்படுதுவதிலேயே குறியாக இருந்தேன்.
1998 ம் ஆண்டு டிசம்பரில் சு.ரா.வின் 'குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' வெளியீட்டு விழா, சென்னை அண்ணா சாலையில் உள்ள 'புக்லாண்ட்' கட்டிடத்தின், பின்புறக் கட்டிட முதல் தளத்தில் நடந்தது. அந்த வெளியீட்டு விழாவில் முக்கியப் பேச்சாளர் ஜெயகாந்தன். 'குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' நாவலை குந்தகமின்றிப் பேசினார். தொடர்ந்து ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்' பற்றியும் குறிப்பிட்டார். அதன் உள்ளே புகமுடியாத அளவில், நாவல் இடைமறிப்பு செய்கிறதென்றார். விழா அழைப்பிதழில் ஜெயமோகனின் பெயர் இருந்தது. மண்டபத்தில் அவரைக் காணோம்.
சு.ரா. பேசி முடித்ததும் நான் ஊர்திரும்ப ஆயத்தமாகி, அண்ணாசாலைக்கு வந்தேன். எதிரே ஜெயமோகனும் கோவை விஜயா பதிப்பக உரிமையாளரும் வந்தார்கள். கூட்டத்திற்கு தாமதமாகி விட்டதாக குறிப்பிட்டார்கள். விழாவில் பேசப்பட்ட பேச்சுகளைப் பற்றி கேட்டார்கள். சொன்னேன். தொடர்ந்த பேச்சு, இலக்கியச் சச்சரவின் பக்கம் போனது. அந்த டிசம்பரில் வெளிவந்த கவிதாசரண் சிற்றிதழில், ஜெயமோகனை சாருநிவேதிதா தரக்குறைவாக எழுதியிருந்ததைப் பற்றியப் பேச்சு அது. பேசிக்கொண்டிருக்கிறபோதே ஜெயமோகனின் முகம் சிவக்க, கண்களில் சரம் சரமாக கண்ணீர். நானும், விஜயா பதிப்பக உரிமையாளரும் ஆறுதல் கூறி ஜெயமோகனை சமநிலைக்கு கொண்டு வரவேண்டியிருந்தது.
தவிர, தாளாமையால் அவர் கண்கலங்கியதை அவரது கட்டுரைகள் சிலவற்றில் படித்ததாகவும் ஞாபகம். என் இலக்கிய நண்பர்கள் நேர் பேச்சில் குறிப்பிட்டும் இருக்கிறார்கள். தாளாமையால் மனிதர்கள் கண்கலங்குவதென்பது சாதாரணம். இயற்கையானதும் கூட. அதைத்தான் குறிப்பிட்டிருந்தேன்.
***
எனது வாசகத்தன்மையின் போதாமைக் குறித்து பதிவு செய்திருக்கிறார்! வேடிக்கையாக இருக்கிறது! அதில் நான், எத்தனைக்கு கெட்டி அல்லது இல்லை என்பது எனக்குத் தெரியும். வாசிப்பின் உச்சத்திற்குப்போய், வாசித்து, தீர கணித்து, தமிழில் நாவலே இல்லை என்று சொன்னவர், என் வாசகத்திறனை மதிப்பிட்டிருப்பதென்பது பெரிய விசயமல்ல.
அவரது மண் நாவல் புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்து விமர்சனங்கள் செய்யுங்கள் எனறபோதும் / சொல் புதிது இதழுக்கு ஆன்மீகம் சம்மந்தமாக, எதிர்வினையாற்றி எழுதிய என் கட்டுரையை குறிப்பிட்டு, அதையொட்டிய வாசகர்கள் விவாதம் ஒன்றை சொல் புதிதில் செய்ய நினைக்கிறேன் சம்மதம் தாருங்கள் என்றபோதும் / திரு. நாஞ்சில் நாடான் அவர்களின் நாவல் ஒன்றைக் குறிப்பிட்டு, வாசகர் கலந்துரையாடல் ஒன்றை ஊட்டியில் ஏற்பாடு செய்திருக்கிறேன், அது குறித்து கட்டுரை வாசிக்கனும் என்று எனக்கு கடிதம் எழுதியபோதும், என் வாசகத் தன்மை ஜெயமோகனுக்கு பிடிப்படாமல் போனது, அவரது கீர்த்திக்குத்தான் சேதம்.
என் வாசிப்புத் தன்மைக்கு ஜெயமோகன் இப்பொழுது அபவாதம் செய்திருப்பது மாதிரி ஒருதரம் எஸ்.ராமகிருஷ்ணனின் இலக்கியப் படைப்பொன்றை சேதப்படுத்தி ஒரு சிற்றிதழில் எழுதினார். எஸ்.ராமகிருஷ்ணன் ஆவேசம் பூண்டு காலச்சுவட்டில் எதிர்வினையாற்றியிருந்தார். அந்த வினை ஜெயமோகனை மேற்கு திசைப்பார்க்க வீசியெறிந்தது.
எஸ்.ராமகிருஷ்ணனைப் பற்றி ஜெயமோகன் எழுதியபோது, ஏன் இப்படியெல்லாம் எழுதுகிறார் என்று நினைத்த நான், எஸ்.ராமகிருஷ்ணனின் எதிர்வினையால் ஜெயமோகன் குறித்து சஞ்சலம் கொண்டேன். அடுத்த சில நாட்களில் ஜெயமோகனுக்கு நான் கடிதம் எழுதியபோது, 'எஸ்.ராமகிருஷ்னனின் கூற்றை சரியென்று நினைக்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தேன். இதுதான் அவர் குறிப்பிடும் வசைக்கடிதம். அதன்பின் அவர் எனக்கு கடிதம் எழுதுவதில்லை. நானும் அப்படியே.
தனிப்பட்ட முறையில் அறிந்தவர் இல்லையெனவும், என்னோடான நட்பின்மையையும் சுட்டியிருக்கிறார். அது நிஜம்தான். தனிப்பட்ட முறையில் நான் அவரை அறிந்தவனில்லை. அறிய முற்பட்டவனுமில்லை. அது எனக்கு வேலையுமில்லை. தவிர, அவர் சுந்தர ராமசாமியுமில்லை! நான் ஜெயமோகனுமில்லை!!
***
"விஷ்ணுபுரம் வந்த பின். அவற்றில் இருந்த மதக்காழ்ப்பை கண்டபின் அவருக்கு நான் எதிர்வினயாற்று வதில்லை." - மேலே இருப்பது ஜெயமோகனின் வார்த்தைகள். வெட்டியொட்டியிருக்கிறேன். அவரது இந்த வரி சரிவர விளங்காவிட்டாலும், என்ன சொல்லவருகிறார் என்பதை யூகிக்க முடிகிறது. விஷ்ணுபுரம் வெளிவந்த பிறகு அதை வாசித்த நான், அது குறித்து அவருக்கு அபிப்ராயம் தெரிவிக்கையில் 'மதக்காழ்ப்பை' வெளிப்படுத்தியதாக சொல்கிறார்.
விஷ்ணுபுரம் மதம் சார்ந்த நாவலாகவே கருதமுடியாது. நான் கருதவுமில்லை. வேண்டுமானால், இந்து மதத்தின் சனாதன பீடங்களை சாய்த்து உருட்டிவிட்டு, அது பௌத்ததின் கீர்த்திகளை உயர்த்திப் பிடிப்பதாகச் சொல்லலாம். விஷ்ணுபுரம் ஒரு 'உடோபியன்' சங்கதியாக இருந்தாலும், அதன் காலத்து யதார்த்தத்துடன் மலர்ந்திருப்பதாகவே கணித்தேன். இன்றைக்கும் அப்படித்தான் கருதுகிறேன். ஆனால், ஜெயமோகன் இன்றைக்கு இப்படி குறிப்பிட்டிருப்பதைக் காணும்போது அது மதம் சார்ந்த நாவலோ என்ற புதிய சந்தேகம் துளிர்க்கிறது.
விஷ்ணுபுரத்தைப் படித்த நாழிக்கு அவருக்கு அதுகுறித்து ஒருகடிதம் எழுதினேன். அது நிறையப் பாராட்டுதல்களைக் கொண்ட கடிதம். தவிர, சில நியாயமான சில கேள்விகளையும் அதில் எழுப்பியிருந்தேன்.
1. விஷ்ணுபுரம் ஓர் கற்பனை நகரம் என்கின்றீர்கள் சரி! மேற்குத் தொடர்ச்சி மலையில் அதை ஸ்தாபிதம் செய்திருக்கின்றீர்கள் சரி! தமிழ்சார்ந்த மனிதர்கள் அதில் பேசப்படுகிறார்கள் மெத்தசரி! அந்த மலையையொட்டிய மேற்கு சரிவிலும், அதன் சமவெளிகளிலும் வாழ்ந்த மக்கள் எங்கே? அந்த 'மலையாள மொழிப் பேசும் மக்கள்' இதில் ஏன் வெளிப்படவில்லை?
2. விஷ்ணுபுரத்தில் காண்பிக்கப்படும் பாண்டிய மன்னர்களை, கறுப்பாகவும்/ கூனர்களாகவும்/ மேகநோய் கொண்டவர்களாகவும் காமித்திருக்கின்றீர்களே, உங்களிடம் அதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? விஷ்னுபுரம் கற்பனைப் படைப்பு என்கிறபோது, அவர்களை சராசரியாகவே காமித்திருக்கலாமே! அவர்கள் தமிழர்களின் ஆதர்சப் புருஷர்கள் அல்லவா! யோசித்திருக்க வேண்டாமா?
3. விஷ்ணுபுரத்தை 'காவியம்' என்று குறிப்பிட்டிருக்கின்றீர்கள்! வாசர்களையும் அப்படிச் சொல்ல வைக்க தொடர் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்! அதற்காகவே அந்த நாவலில் நிறைய கவிதைகளையும் சேர்த்திருக்கின்றீர்கள்! நாவலின் வாசிப்பிற்கு அவைகள் பெரிய இடையூறாக இருப்பதை நீங்கள் அறிவீர்களா? (அந்த நாவலைக் குறித்த இன்றுவரையிலான கவனிப்பில், அதில் காணும் கவிதைகளைக் குறித்து எந்தவொரு வாசகனோ/ விமர்சகனோ குறிப்பிட்டதேயில்லை!!)
4. கல்கி, சாண்டில்யனின் சரித்திர நாவல்களில் ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் மர்மமான ஒரு கிழவன் வந்து வாசிப்பவனுக்கு திகிலூட்டி, 'சஷ்பென்ஸ்' அதிர்வுகளை எழுப்பி, அடுத்தடுத்த அத்தியாயங்களைப் படிக்க வைப்பவனாக இருப்பான். உங்களது இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாய முடிவிலும்கூட அப்படி ஒரு பாத்திரமாக, ஒர் கருப்பு நாய் வந்து திகிலூட்டியப்படியே இருக்கிறது. இரண்டும் ஒரே யுக்திதானா?
5. கல்கியின் கற்பனை வளமான கதையாக்கங்களை மறுத்துதான் அன்றைக்கு மணிக்கொடி இயக்கம் தோன்றி, நவீன இலக்கிய முயற்சிகளை ஆரம்பித்து வைத்தனர் நமது இலக்கிய முன்னோடிகள். இன்றைக்கு மீண்டும் அதே கல்கியை புதிய மோஸ்தரில் உருவாக்கிப் பார்ப்பதென்பது முரண்பாடாகத் தெரியவில்லையா?
- இப்படியான ஒரு சில கேள்விகளும், அபிப்ராயங்களும் மட்டும்தான் என்னுடைய அந்த கடிதத்தில் கண்டிருந்தேன். மற்றப்படி பாராட்டுக்களால் ஆனதுதான் அந்த கடிதம். புத்தத்தை நாவலில் இவர் தூக்கிப் பிடித்ததில் எனக்கு இரட்டை மகிழ்ச்சியல்லவா! இதில் எங்கே மதக்காழ்ப்பு இருக்கிறது?
ஜெயமோகனை நேராகவே கேட்கிறேன், மதக்காழ்ப்புக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? கருத்து தட்டுப்பட்டப் பருவத்திலேயே தாஜுதீன் என்கிற நான் தாஜ் ஆனவன். அப்படியொரு கழிவை என்மீது வீசி, வாயடைக்க முயலும் உங்களுக்கு என்னைத் தெரியத்தான் நியாயமேது?
விஸ்ணுபுரத்தைப் பற்றிக் கூற இன்னொறுக் கூற்றும் உண்டு. அது, கல்கியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாயிலாடுதுறையில் திரு.மூப்பனாருடன் ஜெயமோகன் மேடையேறிய நிகழ்வையொட்டிய நிகழ்ச்சி. நிகழ்ச்சி ரசமானவை!! விழாவின் இடைப்பட்ட நேரத்தில் ஜெயமோகனிடம் விஸ்ணுபுரத்தைப் பற்றி நேரிடையாக நிறையப் பேசினேன். அப்படி அவருடன் நிகழ்த்திய நேரடி உரையாடல்களையும்/ அந்த விழாவின் ரசனைகளையும் பதிவு செய்திருக்கிறேன். அது அச்சைக் காணக் காத்திருக்கிறது. அந்த மயிலாடுதுறை நிகழ்ச்சிக்குக்கூட நண்பர்கள் மூலம் ஜெயமோகன் அழைத்துத்தான் போயிருந்தேன்.
***
எத்தனையோ விழுமியங்களை புறங்கையால் தள்ளி விட்டு விமர்சனம் செய்கிற ஜெயமோகன்! 'அவர் இல்லாமல் நவீன தமிழகத்தின் வரலாற்றையே எழுத முடியாது' என சொல்லப்படுகிற பெரியாரை போகிறப் போக்கில் தலையில் கொட்டிவிட்டுப் போகிற ஜெயமோகன்!! இன்றைக்கு என் நான்கு வரி அபிப்ராயத்தைப் பார்த்து துவள்வது அதிகம்.
ஜெயமோகன் திண்ணை மெயில் வழியே, 'நான் யாரோ' வெனச் செய்திருக்கும் தகவல், இலக்கியப் பரப்பில் எனக்கு தேவையான பதிவாகவே கருதுகிறேன். இது குறித்து, ஜெயமோகனுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்! நன்றி!!
***
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
ஜெயமோகன் Vs தாஜ்
- விவரங்கள்
- தாஜ்
- பிரிவு: கட்டுரைகள்