22.02.06ல் கிழக்கிலங்கையில் குருக்கள் மடம் என்ற கிராமத்துப் பெண்கள் தங்கள் தலைகளில் ஆயிரம் பாற்குடங்கள் சுமந்து இலங்கையின் நிரந்தர அமைதிக்குப் பிரார்த்தித்தார்கள் என்பதை ஆயிரம் மைல்களுக்கப்பால இருந்து வானொலி மூலம் கேட்கும்போதும் இதயம் சிலிர்த்தது. அதே நேரம் வடக்கிலுள்ள மாணவர்கள் தங்கள் பாடங்களை நிறுத்திவிட்டு வெளியில் வந்து நின்று சமாதானத்திற்குப் பிரார்த்தித்தார்கள் என்று இணையத்தளத்திற்குள்ளால் ஒலிபரப்பும் இலங்கைத் தமிழ் வானொலியின் செய்திகளைக கேட்டுக்கொண்டிருந்த போது ஜன்னலுக்கப்பால் இளம் குழந்தைகள் ஒரு வித பயமுமினறி பாடசாலைகளுக்குப் போகும் காட்சி நெஞ்சில் நெருஞ்சி முள்ளை ஏற்றியது. எங்கள் நாட்டில் எப்போது எங்கள் குழந்தைகள் பயமினறிப் பாடசாலைக்குப் போவார்கள்? கோயிற் திருவிழாவில் எப்போது எங்கள் குழந்தைகள் ஆயுத தாரிகளாற் கடத்தப்படாத காலம் வரும்? இலங்கையிலுள்ள தமிழ்ப் பகுதிகளில் எப்போது நிரந்தர சமாதானம் வரும்? என்னைப் போல் ஆயிரமாயிரம் தாய்களின் வேதனையை நானறிவேன்.

Rajapakse22.02.06ல்- சரியாக நான்கு வருடங்களின் பின் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டன. இந்தப் பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக முன்னேறி ஒரு நிரந்தர சமாதானத்தில் முடியவேண்டும் என்று வேண்டுவோம்.

இலங்கையின் போர்ச்சூழ்நிலைகளால் மக்கள் பட்ட துயர் போதும். இனியும் வேண்டாம் போர். 60-80,000 தமிழ் மக்களை போர்க்கொடுமையால் இழந்து விட்டோம். ஓரு இலட்சத்திற்கு மேலான தமிழ்மக்கள் 56 நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் தேடியிருக்கிறார்கள். தமிழ்ப் பகுதிகளின் வள்ர்ச்சி கிட்டத்தட்ட பூஜ்ஜிய நிலையிலிருக்கிறது. சுனாமியாற் துயர்படும் மக்களின் நிலை பரிதாபமாகவிருக்கிறது.

ஓரு காலத்தில் சிங்கள இனவாதத்தின் கொடுமைகளுக்கெதிராக சாதி, மத, வர்க்க, தொழில் பேதமின்றி ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தமிழரின் விடுதலைக்கு ஆயதம் ஏந்தினார்கள். தமிழரின் உரிமை கேட்டு ஆயுதம் தாங்கிய எங்களுக்கு, இப்போது அகில உலகமுமே ஒரு சமாதானமான எதிர்காலத்தைப் பெற்றுத் தர முயற்சிக்கிறார்கள். இலங்கை அரசாங்கம் இரட்டைவேடம் போடாமல் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கவேண்டுமென்பதில் அமைதியை விரும்புவர்கள் கண்ணும் கருத்துமாகவிருக்கிறார்கள்.

சமாதானப் பேச்சுக்களை முன்னெடுப்பவர்களான விடுதலைப் புலிகளினதும் அரசாங்க தரப்பினருக்குமிடையில் நடக்கும் பேச்சில் உண்மையான கருத்துக்களும் சமாதானத்திறகான செயற்பாட்டு முயற்சிகளும் இருக்க வேண்டுமென்று உலகம் பரந்து வாழும் தமிழர்கள் வீதியிறங்கி அமைதிப் போராட்டங்களைச் செய்கிறோம்..

எங்களிற் ஒரு சிலர் கடந்த முப்பது வருடங்களாக, இலங்கைத் தமிழரின் மனித உரிமைகளுக்காகப் போராடுகிறோம். எங்களின் தார்மீகப் பணியைக் கேவலப்படுத்தும் சில வசனங்களைப் பாவித்து எழுதுபவர்களைப் பார்க்கும்போது படித்த, பண்புள்ள, கலாச்சாரப் பாரம்பரியங்களில் அக்கறையுள்ள எங்கள் தமிழ் சமுகத்தில இப்படியான கேவலமான ஊடகவாதிகள் வாழ்வது ஆச்சரியமாகவிருக்கிறது. தமிழர்களின் விடுதலையை முன்வைத்து அமைதிப் போராட்டம் செய்யும்போது அதை அவமதிப்பவர்கள் எங்கள் எதிரிகளல்லர். அமைதிப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் தமிழ்ப் பெண்களைக் கேவலப்படுத்துபவர்கள் தனது தாயைத் தமிழில் அம்மா என்று அழைப்பவர்கள்தான், அதே தமிழ் மொழியின் அழுகிய வார்த்தைகளைப் பெண்கள் தலையிற் கொட்டிச் சந்தோசப்படுகிறார்கள். அவ்வையையும் ஆண்டாளையும் திருவள்ளுவரையும் பாரதியையும் படித்த ஒரு தமிழ்த் தாயின் வயிற்றில் இப்படிக் கெட்ட உயிர்களின் பரிமாணம் எப்படி நிகழ்ந்தது என்பது இயற்கையின் விந்தையே.!

இலங்கை அரசாங்கம் தமிழர்களில் வன்முறையைக் கொடூரமாக அவிழ்த்து விட்டபோது இலங்கையிலுள்ள எங்கள் சொந்தக்காரர்களுக்கு இலங்கை அரசாங்கம் என்ன துன்பங்களைச் செய்வார்களோ என்ற பயமிருந்தாலும் தமிழரின் மனித உரிமைக்காகத் தைரியத்துடன் உரிமைப் போராட்டங்களை லண்டனில் முனனெடுத்தவர்கள் நாங்கள்.- தமிழ்ப் பெண்கள்.

மேற்கு ஐரோப்பாவிலுள்ள சிறுபான்மை மக்களுக்கான முதலாவது மனித உரிமை அமைப்பையும் (தமிழ் மகளிர் அமைப்பு) அகதி ஸ்தாபனம (தமிழர் அகதி ஸ்தபானம்), தமிழர்வீடமைப்பு போன்ற ஸ்தாபனங்களை உண்டாக்கி லண்டனில வாழும் சிறுபான்மையினங்கள் அத்தனைக்கும் பெருமையுண்டாக்கிய முன்மாதிரியாக இருந்தவர்கள் நாங்கள். ஐரோப்பா முழுதுமும் தமிழர்கள் காலுன்றுவதற்கான மனித உரிமைப் பிரசாரங்களைச் செய்தவர்கள் நாங்கள்.

அன்று சிங்கள அரசாங்கத்திற்கெதிராக. தமிழரின் மனித உரிமைகளை வேண்டிப் போட்ட கோஷம் இன்று ஆயதங்கள் மூலம் சாதாரண தமிழ் மக்களின் வாழ்க்கையை இன்னலுக்குள்ளாக்கும் அத்தனை சக்திகளுக்கும் எதிராகக் குரல் கொடுக்கிறோம்.

29.05.85ல் ஆங்கிலப் பாராளுமன்றம் அகதிகளுக்கான விஷேட யாக்ககைளை அமைக்குமளவுக்கு அகதிகளின் பிரச்சினையைப் பிரிட்டிஸாரின் சட்டதிட்டங்களுக்குள் கொண்டு வந்தவர்கள் தமிழ் மகளிர் அமைப்பினர். அத்துடன் தமிழர் பிரச்சினையை உலகமயப் படுத்தியவர்கள் தமிழ் மகளிர் அமைப்பினர். இன்று மௌனமாகக் கண்ணீர் வடிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்காக அவர்கள் குரல் கொடுக்கிறார்கள்.

பல தமிழ் அமைப்புக்களால் லண்டனிற் தொடங்கப்படடிருக்கும், போருக்கு எதிரான அமைதிச் சபையின் அமைதிப் போராட்டம் தனது முதலாவது போராட்ட நிகழ்ச்சியை ஆரம்பித்து விட்டது. இலங்கைப் போருக்கு எதிரான இவாகளின் நோக்கம் இலங்கையில் நிரந்தர சமாதானம் வரவேண்டுமென்பதாகும். விடுதலைப் புலிகளும் இலங்கை அரசாங்கமும ஆரம்பிக்கும் பேச்சுவார்த்தை நிரந்தர சமாதானதில் முடியவேண்டும் என்பதே இச்சபையின் போராட்டமும் பிரச்சாரமுமாகும்

மாசி மாதம் பத்தொன்பதாம் திகதி இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு பகல் பன்னிரண்டு மணிக்கு லண்டன் ட்ராவல்கர் சதுக்கம் இலங்கையில் சமாதானத்தை வேண்டிப் பிரசாரம் செய்யும் நூற்றுக்கணக்கான தமிழர்களால் நிரம்பியது. இவர்களில் 75 வீதமானவர்கள் லண்டன்வாழ் இளம் தலைமுறையினர். 1883ம் ஆண்டு கலவரத்தின்பின் தங்கள் உயிரைக் காப்பாற்ற உலகமெங்கும் ஓடிய பலரின் தலைமுறைகளின் குழந்தைகளும் குடும்பங்களுமாவர்.

இவர்களிற் கணிசமான தொகையினர் சமுகத்தில் பெரிய பதவிகள் வகிக்கும் சட்ட வல்லுனர்களும் வைத்தியர்களுமாவார்கள். அத்துடன் பத்திரிகையாளர்கள், மனித உரிமைவாதிகள், எழுத்தாளர்கள் என்று எங்கள் தமிழ்ச் சமுதாயத்தின் பல புத்திஜீவிகள் வந்திருந்தார்கள். இலங்கையிலுள்ள எங்கள் தமிழ் மக்களுக்கு நிரந்தர சமாதானம் தேவை என்பதைத் தங்கள் அமைதியான போராட்டத்தின் மூலம் உலகுக்கு அறிவிக்கப் பல தமிழ்த் தாய்களும் குழந்தைகளும், தோலைத் துளைத்துக்கொண்டு ஈட்டியாய் உடலுக்குள் பாயும் குளிரையும், பொல்லாத குளிர்காற்றையும் வானத்தைப் பொத்துக் கொண்டு கொட்டிய அடைமழையையும் பொருட்படுத்தாமல் அமைதிப் போராட்டத்திற்கு வந்திருந்தார்கள்.

லண்டன் அமைதிப் போராட்டத்தில் இவர்கள் வைத்திருந்த போராட்ட கோஷப் பதாதைகள் இவர்களின் உள்ளக் கிடக்கையை அப்படியே பிரதிபலித்தன.

அவையாவன:

இனியும் போர்வேண்டாம, மக்களின் தேவை நிரந்தர சமாதானம்.

எந்தவிதமான போர் முயற்சிகளையும் களைந்து விட்டுச் சமாதானத்தை முன்னெடுங்கள்.

தமிழர்கள் வேண்டுவது நிரந்தர சமாதானமேயன்றி இடைக்கால நிவர்த்தி வேலைகளல்ல. ஜனநாயகமும் நீதியுமள்ள ஒரு தீர்வைத்தான் தமிழர்கள் வேண்டுகிறார்கள்.

அரசியற் கொலைகளைத் தயவு செய்து நிறுத்துங்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் குழந்தைகளைப் போருக்குள் கடத்திக்கொண்டு போகாதீர்கள.

இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் பொது மக்களைக் கண்டபடி கொலை செய்வதை உடனடியாக நிறுத்துங்கள். உங்கள் சிறைகளில் சட்டத்தை மீறி அடைத்து வைத்திருக்கும் அப்பாவி மக்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள்.

நாங்கள் இலங்கையில் உள்ள அத்தனை மக்களினதும் மனித உரிமைகள் பாதுகாக்கப் படவேண்டுமென்று இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளிடமும் சொல்கிறோம்.

LTTEஇலங்கையில் வாழும் அத்தனை சிறுபான்மை மக்களினதும் மனித உரிமைகள் பாதுகாக்கபபடவேண்டியது அவசியம் என்று ஆணித்தரமாகக் கூறுகிறோம்.

இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் சகல உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

மாற்றுக் கட்சியிலுள்ளோரைக் கொலை செய்வதை உடனடியாகத் தடை செய்ய வேண்டுமென்றும் சகல மக்களினதும் மனித உரிமைகளை மதிக்க வேண்டுமென்றும் விடுதலைப் புலிகளைக் கேட்கிறோம்.

விடுதலைப் புலிகள் மட்டும்தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற கோஷத்ததை வைப்பது சட்டமற்றது என்று சொல்கிறோம். தனித்துவத்தலைமை என்பது 'பாஸிஸ'த்தின் கோட்பாடாகும். சிங்கள இனவாதிகளும் தமிழ் இனவாதிகளும் தயவு செய்து நாட்டைக் கூறுபோடாதீர்கள்.

முஸ்லிம் சமுதாயத்திற்கு அரசியல் விவகாரங்களில் ஈடுபட முழு உரிமையும் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகிறோம். தொடரும் பேச்சு வார்த்தைகளில் சகல சமுகப் பிரதிநிதித்துவமும் இருக்கவேண்டுமென்ற கோஷத்தை முன்வைக்கிறோம்.

நோர்வேயில் பேச்சுக்குப் போயிருப்பவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை உடனுக்குடன் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமென இந்த அமைதிச்சபை கேட்டுக் கொள்கிறது.

இலங்கை மக்கள் அரசியலின் பகடைகளல்லர். சாதாரண மக்களின் கொலைகள் உடனடியாக நிறுத்தப் படவேண்டும்.

ஏழைத் தமிழக் குழந்தைகள் கொலைக்களத்திற்குக் கொண்டு போகப்படப் பிறந்தவர்களல்ல. குழந்தைகளைக் கடத்துவது உடனடியாகத் தடை செய்யப் படவேண்டும்.

போர் நிறுத்தம் உடனடியாக அமுல் செய்யப்பட்டு சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப் படவேண்டும்.

குண்டுகளும், ஷெல்களும் இனி எங்களுக்கு வேண்டாம்.

போர்ப் பயம் காட்டி மக்களை இடம்பெயரத் துரத்துவதை உடனடியாக நிறுத்தவும்.

மக்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் நிம்மதியாக வாழும் உரிமையைத் தடுக்காதீர்கள். தமிழ் மக்கள் அகதிகளாக உலகெங்கும் ஓடும் துயர் இனியும் வேண்டாம்.

சுனாமியாற் துயர் படும் மக்களின் வாழ்வு உடனடியாகச் சீர் செய்யப் படவேண்டும்.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் என்று சொல்லிக்கொண்டு போருக்கான ஆயத்தங்கள் செய்வதை நிறுத்தவும்.

மனித உயிர்கள் அற்புதமானவை, அவற்றை அழிப்பதை உடனடியாக நிறுத்தவும். கொலைகளையும் ஆள்க்கடத்தல்களையும் உடனடியாக நிறுத்துங்கள்.

ஒரு சமுதாயத்தில எந்தவிதமான பயமற்று வாழ்வது மனித உரிமை. ஆயதம் வைத்திருப்பதால் அந்த உரிமையைத் தடுப்பது மனித உரிமைச் சட்டங்களுக்கு நியாயமற்றவை.

எங்கள் இனம் வாழ்க்கை முழுதும் ஒரு நாடோடிக் கூட்டமாய் நகர்ந்து வாழ்வதை இனியும் தொடர செய்யாதீர்கள்.

எங்கள் மக்களின் வாழ்க்கை சாதாரண இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்.

யாழ்ப்பாணத்திலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம் மக்கள் திருப்பியழைத்துக் குடியமர்த்தப் பட வேண்டும்.

ஜெனிவாப் பேச்சுக்கள் ஓட்டைக் குடத்தில் ஊற்றப்படும் நீராக விரயமாகப் போக்கூடாது.

சமாதானத்தை விரும்பும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் ஆண்கள், பெண்கள், மாணவாகள் என்ற பேதமற்று. இந்து, முஸ்லிம், கத்தோலிக்கர் என்ற பேதமற்றுச் சமாதானத்திற்குக் குரல் கொடுங்கள்.

லண்டனில் ஒலிக்கத் தொடங்கிய சமாதானத்திற்கான சத்திய வார்த்தைகளுடன் உலகம் பரந்து வாழும் தமிழர்கள் ஒன்றுபட்டால் எங்களின் மக்களின் வாழ்க்கையில் நிரந்தர சமாதானத்தை நாங்கள் கொண்டு வரலாம்.

அடிக்கமேல் அடித்தால் அம்மியும் நகரும்.

மக்கள் சக்தி மாகாசக்தி!.

மாணவர்கள் எதிர்காலத் தலைவர்கள் உங்கள் தலைமைத்துவத்தைக் காட்டுங்கள்.

1968ம் ஆண்டில் பாரிஸில் மாணவர்கள் நடத்திய போராட்டம் உலக அரசியலில் எத்தனையோ மாற்றங்களைக் கொண்டுவந்தது. 2006ம் ஆண்டில் தமிழ் மாணவர்களின் குரல் மனித உரிமைகளுக்காக ஓங்கி ஒலிக்கட்டும். பல்கலைக்கழகங்களைத் திறந்து உங்கள் பாடங்களைத் தொடருங்கள்.

படித்தவனின் சேவை சமூகத்தின் தேவை. அதைப் பாழடிப்பதை விடடுக் கொடுக்காதீர்கள். இளம் தலைமுறையே, உங்கள் தைரியத்தில் தார்மீகமான- சமாதனத்திற்கான போராட்டத்தில் இன்றைய அரசியல் மாற்றத்தின் அதிமுக்கிய சக்தி உயிர்பெறப்போகிறது.

தமிழர்கள் போர் வெறி படித்த கொலைக் கூட்டமல்ல. பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கத் தெரிந்த புத்திஜீவிகள் என்பதை நிருபியுங்கள்.

இலங்கையிலுள்ள இளம் தமிழரின் உணர்வில் உண்டாகும் புதிய கருத்துக்களுக்கு உலகம் பரந்த தமிழர்கள் இணையக் காத்திருக்கிறார்கள். புதிய வெளிச்சங்களில் உங்கள் சமுதாயத்தை வழி நடத்துங்கள். இலங்கைத் தமிழருக்கு விடிவு தரும் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது என்பதை உணர்ந்து செயற்படுங்கள். இமயத்தில் ஏறவும் பள்ளத்தில் விழவும் எங்கள் கால்களதான் காரணம். உங்களை நம்பும் தமிழருக்கு இமயத்தைக் காட்டுவது உங்கள் பொறுப்பு.

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்