விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்ட செல்வராசா பத்மநாபாவை (கே.பி.) சர்வதேச சட்ட விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல், சிறீலங்கா அரசு கடத்திச்சென்றுள்ளதற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடும் கண்டனம் தெரிவித்தார். சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இதைக் கண்டித்து மனித உரிமைகளைக் காப்பாற்ற முன்வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்:

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களால் அந்த அமைப்பின் சர்வதேச பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் செல்வராசா பத்மநாபா. இப்போது புலிகள் இயக்கத்தின் செயற் குழு தலைவராக விடுதலைப்புலிகளால் அறிவிக்கப் பட்டுள்ளார். மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் ஒரு விடுதி;ல் நண்பர் ஒருவரை சந்திக்கச் சென்ற நிலையில் செல்பேசி அழைப்புக்கு பேசுவதற்காக அறையை விட்டு வெளியே வந்தபோது சிறீலங்கா உளவுத் துறையால் அவர் கடத்தப்பட்டார். மலேசிய நீதிமன்றத்தில் அவரை நேர் நிறுத்தாமல், தான்தோன்றித்தனமாக கடத்தி தாய்லாந்து வழியாக கொழும்புக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை வெளி யுறவு அமைச்சர் ரோகிதபொலகாம, பாதுகாப்புத் துறைக்கான பத்திரிகை தொடர்பாளர் கேஹனீய ரம்புச் செலவு ஆகியோர் இதை உறுதிப்படுத்தினர்.

சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிரான இந்தக் கடத்தலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கடந்த ஆக. 9 ஆம் தேதி நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கண்டனம் தெரிவித்தார். மனித உரிமை அமைப்புகள், இந்த கடத்தலைக் கண்டித்து, மனித உரிமைக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, அரசியல் போராட்டத்தை முன்னெடுப்ப தாக, அறிவித்த ஒரு தலைவரை இப்படி சிறிலங்கா உளவுத் துறை வன்முறையாக கடத்திச் சென்றிருப் பதிலிருந்து சிறீலங்கா - ஈழத் தமிழர்களுக்கு எந்த உரிமையும் வழங்கத் தயாராக இல்லை என்பதையே மீண்டும் உறுதி செய்திருக்கிறது என்று அவர் கூறினார்.

பிரபாகரன் கைது செய்யப்பட்டால் - அலெக்சாண்டர் மன்னன் புருஷோத்தமனை கவுரமாக நடத்தியதுபோல் நடத்த வேண்டும் என்று கூறிய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, இப்போது செல்வராசா பத்மநாபனையும் அவ்வாறே நடத்த வேண்டும் என்று, இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்றும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார்.

அகதி முகாம்களில் போராளிகள் என்று கூறி பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோரை, சிங்கள அரசு கைது செய்துள்ளது பற்றி கழகத் தலைவர் குறிப்பிடுகையில், அவர்களை சர்வதேச நெறி முறைகளின்படி யுத்தக் கைதிகளாக (Prisoners of War) கருதி கைது செய்யப்பட்டவர்களின் முழுமையான விவரங்களைப் பதிவு செய்வதோடு, அவர்களை சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு கவுரவமாக நடத்தப்பட வேண்டும். இதற்கு மனித உரிமை அமைப்புகள் இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சர்வதேச பார்வையாளர்கள், தொண்டு நிறு வனங்கள், மனித உரிமை அமைப்புகளை முழுமை யாக வெளியேற்றிவிட்டு, சாட்சிகள் இல்லாத யுத்தத்தை நடத்திய இலங்கை அரசு, இனப்படு கொலையை நடத்தி முடித்த பிறகும், இப்போதும் சர்வதேசப் பார்வையாளர்களை முகாம்களை பார்வையிட அனுமதி மறுத்து, இருட்டில் நிறுத்தி யுள்ள மனித உரிமை மீறல்களை வன்மையாகக் கண்டித்து, மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பெரியார் தமது நூல்களுக்கு எந்த ஒரு நிறுவனத்துக்கும் பதிப்புரிமை எழுதித் தரவில்லை என்பதால், அந்த நூல்களை வெளியிடுவதற்கு, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் மட்டும் உரிமை கோர முடியாது. தமிழக அரசு பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்க எந்தத் தடையும் இல்லை என்றாலும், தி.மு.க. ஆட்சி அதைச் செய்ய மறுப்பதால், பெரியார் நூல்கள் பரவலாக மக்களை சென்றடையவில்லை. எனவே தி.மு.க. ஆட்சி பெரியார் கொள்கைகள் பரவிட வேண்டும் என்று உண்மையாகவே கருதுமானால், பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

கிராமங்களில் இரட்டை தம்ளர், தனி சுடுகாடு உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் நிலவும் தீண்டாமைக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் விரைவில் களமிறங்கி போராடுவதற்கும், கிராமங் களில் சாதி தீண்டாமைக்கு எதிரான இயக்கங்களை நடத்துவதற்கும் திட்டமிட்டு வருகிறது என்றும் கழகத் தலைவர் கூறினார்.

Pin It