நான் தவ வாழ்க்கை வாழ்கிறேன். மக்களால் நான். மக்களுக்கு நான். உங்களால் நான். உங்களுக்காக நான். என்னுடைய ஆட்சி உங்களுக்கு வசந்தத்தை தந்திருக்கிறது என்றெல்லாம் பொது கூட்டங்களில் குறிப்பிடும் ஜெயலலிதாவின் அடிமைகள் வெட்கி தலை குனியும் நிலைமைக்கு சென்றிருக்கிறார்கள்.
அதிமுகவில் சசிகலா அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு எம்எல்ஏக்கள் மாறுவதை தடுக்க, கோடிக் கணக்கில் பேரம் பேசப்பட்டதாக தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் வீடியோ வெளியாகியிருக்கிறது.
"தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் என வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஆசியோடு எனது பேச்சை தொடங்குகிறேன். சென்னையில் தங்க இடம் இல்லாமல் எம்.எல்.ஏ விடுதி வளாகத்தில் காவலர்களுக்கு தெரியாமல் நாய்களோடு படுத்து உறங்கினேன். அப்படிப்பட்ட நான் இன்று எம்.எல்.ஏ வாக அதே விடுதியின் ஒன்பதாவது மாடியில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்க்கு முதல்வர் ஜெயலலிதாதான் காரணம்" என்று அதிகம் விலைபோன கருணாஸ் தன்னுடைய கன்னிப் பேச்சை பதிவு செய்திருக்கிறார்.
சொத்து குவிப்பு வழக்கில் தான் போட்ட கையெழுத்தையே தன்னுடையது இல்லை என்று சொன்ன ஜெயலலிதாவின் அடிமைகள், மாப்பிள்ளை இவர்தான் ஆனா இவர் போட்டிருக்கிற சட்டை இவருடையது இல்லை என்பதை போல வீடியோவில் இருப்பது நான்தான் ஆனால் வார்த்தைகள் டப்பிங் செய்யப்பட்டுள்ளது என்கிறார்.
அரசியலில் பட்டம் பதவியை பெறுவதற்கு ஒருவன் எந்த கீழான செயல்களையும் செய்வான், எவன் காலையும் நக்க தயாராக இருப்பான், யாரை வேண்டுமானாலும் கூட்டிக் கொடுக்க தயாராக இருப்பான். தேர்தல் அரசியலில் யோக்கியன் ஒருவன் எப்படி இருக்க முடியும்?
அரசியலில் ஒருவன் நுழைகிறான் என்றால் அவன் எப்படிப்பட்ட யோக்கியனாக இருந்தாலும் உடனே அவனது ஞாணயம், ஒழுக்கம் கெட்டுப்போய்விடுகின்றன. அவன் புரட்டும் பித்தலாட்டமும் செய்ய வேண்டிய அவசியத்துக்கு ஆளாக்கப்படுகின்றான். அது நானாக இருந்தாலும் அம்பேத்கராக இருந்தாலும் அப்படிதான் ஆகிவிடுவோம். அப்படித்தான் ஆக்கிவிடும் என்றார் பெரியார்.
தன்னுடன் சேர்த்து தன்னுடைய மனைவிமார்களையும், அடிமைகளையும் பிரமிடுக்குள் புதைக்க சொன்ன எகித்திய மன்னர்களை போல ஜெயலலிதாவும் எதையும் சொல்லாமல் சென்றுவிட்டார்.
இராமர் தன் தந்தையின் வாக்கைப் பரிபாலனம் செய்வதற்காக இராஜ்ஜியத்தை தியாகம் செய்தார். பரதர் தம் தமையனிடம் கொண்ட பக்தியினால் இராஜ்ஜியம் வேண்டாம் என்றார். அரிச்சந்திர மகாராஜா தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக இராஜ்ஜியத்தை துறந்தார். சிபி சக்கரவர்த்தி புறாவுக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்தினால் தம் உடலை அறுத்து கொடுத்தார். மனித குலத்தின் துன்பத்தை போக்க வழி கண்டுபிடிக்கும் பொருட்டு தாமாக எல்லாவற்றையும் தியாகம் செய்து விட்டு புறப்பட்டார் புத்தர். முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி. மயிலுக்கு போர்வை போத்தினான் பேகன்.
ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று தியானம் செய்யும் இவர்கள் இவற்றையெல்லாம் மறந்து போனதுதான் வரலாற்றின் பெரும் துயரம்.
ஆற்று மணலில் கடுகை தேடுவதைப் போல அரசியல் வாதிகளிடத்தில் நல்லவர்களை தேடிக்கொண்டிருக்கிறோம். காசுக்காக தன் உடம்பை விற்கும் ஒரு விபச்சாரியிடம் இருக்கும் நேர்மை கூட இவர்களிடத்தில் இல்லாமல் போனது துரதிஷ்டமானது. திருடன் கையில் பெட்டி சாவியை கொடுத்த கதையாகி விட்டது. இந்த லும்பன்களின் ஆட்சி இருப்பதைவிட அழிந்துபோவதே நல்லது.
- தங்க.சத்தியமூர்த்தி