ஈ.வெ.ரா.வுக்குத் திருமணம் முடிந்து இரண்டாண்டுகள் ஆயின. ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் வாழ்வு நீடிக்கவில்லை. 5 மாதங்கள்தான் வாழ்ந்தது. பிறகு குழந்தையே பிறக்கவில்லை. இக்காலத்தில் ஒரு துறவுத் திருவிளையாடல் நடத்தினார் ஈ.வெ.ரா. அப்பொழுது அவருக்கு ஏறக்குறைய 25 வயதிருக்கலாம். நல்ல மேன்மையான வாழ்க்கை; பிரபலமான மைனர்; குடும்பத்துக்கு நல்ல வருவாய்; மிகுந்த செல்வாக்கு; காலிகள் கூட்டம் கைவசம். இந்த நிலையில் எப்படியோ வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றிவிட்டது. துறவு ஆசை பிடித்துக்கொண்டது. அத் திருவிளையாடல் கேட்பதற்கு மிகவும் வேடிக்கையானது. சில இடங்களில் துக்ககரமாகவுமிருக்கும். இக்கதையை அவரே சொல்லக் கேட்டால் மிகவும் சுவையோடிருக்கும்.

Periyar E.V. Ramasamyஈ.வெ.ரா.வின் தந்தையார் ஏதோ கண்டித்ததால் அவருக்கு கோபம் எற்பட்டது. உடனே இல்லறத்தில் வெறுப்புற்றார். துறவியாகிக் காசிக்குச் சென்று விடுவதென்று தீர்மானித்தார். இன்னும் இரண்டு நண்பர்களையும் சேர்த்துக் கொண்டார். இவ்விருவருள் இவர் தங்கையின் கணவரும் ஒருவர். மூவருமாகச் சென்னை சென்றனர். அங்கு ஒரு உணவுச்சாலையில் தங்கினர். அப்பொழுது தெருவின் வழியே ஈரோட்டுக்காரர் யாரோ செல்வதைப் பார்த்தனர்; நெஞ்சந் திடுக்குற்றனர். தங்களைத்தான் தேடுகிறார்களென்று நினைத்து மறைந்துகொண்டனர். பிறகு உடன்வந்த கூட்டாளிகள் மனமாற்றமடைந்து ஊருக்குச் செல்ல நினைத்தனர். ஆனால், ஈ.வெ.ரா. இஷ்டப்படவில்லை. துறவியாகித்தான் தீர்வது என்ற உறுதியுடன், கூட வந்த இருவருக்கும் தெரியாமல் சிறிது பொருளுடன் சென்னையைவிட்டுப் புறப்பட்டார்.

"அவர் ஒரு உண்மையான சிங்கம்; சிங்கத்தின் இருதயத்தைப் பெற்றிருக்கிறார். வாழ்க்கையில் பயமென்பது இன்னதென்று அவருக்குத் தெரியாது... அவசியம் நேர்ந்தால் எவ்விதத் தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறவர்'' என்று நமது மாகாணத்தின் ஆக்டிங் கவர்னராக இருந்த சர்.கே.வி. ரெட்டி அவர்கள் 1928ஆம் ஆண்டில் ஈ.வெ.ரா.வைப் பற்றிக் கூறினார். இத்தன்மை அவரிடம் இளம் பருவத்திலேயே அமைந்து கிடந்தது. அஞ்சா நெஞ்சம் படைத்த இராமசாமி சென்னையைவிட்டுப் பெசவாடாவை அடைந்தார். கையில் தங்கக் காப்பு, கொலுசு, காதில் கடுக்கன், கழுத்தில் சங்கிலி, விரல்களில் மோதிரங்கள், இடுப்பில் தங்க அரைஞாண். இவரைப்போலவே மன வெறுப்போடு வந்த இரண்டு தமிழ் அய்யர்கள் அங்குப் பெசவாடாச் சத்திரத்தில் இவருக்கு நண்பர்களானார்கள். ஒருவர் தஞ்சாவூர்க்காரர்; மற்றவர் கோயம்புத்தூர்க்காரர். பிந்தியவர் கணபதி அய்யர், ஒரு கிராம முன்சீஓப்! முந்தியவர் வெங்கட்ரமணய்யர், ஒரு சமஸ்கிருதப் பண்டிதர்! மூவருமாகப் பெசவாடாவை விட்டுப் புறப்பட்டு, அய்தராபாத்துக்குச் சென்றார்கள். அங்கு மூவருமாகப் பிச்சையெடுத்து, அதன் மூலம் கிடைக்கும் அரிசியைக் கொண்டு சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஒழிந்த நேரத்தில் தெருப்பக்கங்களில் அரட்டையடித்துக் கொண்டிருப்பார்கள்.

அய்யர்கள் இருவரும் புராணத்திலுள்ள அதிசயங்களைப் பற்றிப் புகழ்ந்து பேசுவார்கள். அவர்கள் சொல்லுவதை ஈ.வெ.ரா. தனது வழக்கமான பழக்கத்தைக்கொண்டு எதிர்ப்பார். புராணங்களிலுள்ள ஊழல்களைச் சொல்லிப் பரிகசிப்பார். தெருவில் போகிறவர்கள் இவர்களுடைய தர்க்கத்தைக் கவனித்துக் கொண்டிருப்பார்கள்! அது அவர்களுக்கு மிக அதிசயமாக இருக்கும். அய்தராபாத் சமஸ்தானத்தில் உத்தியோகத்திலிருந்த சில தமிழர்கள், வழியில் இவர்களைக் கவனித்தார்கள். அவர்களில் காஞ்சிபுரம் முருகேச முதலியார் என்று ஒருவர். அவர் சமஸ்தானத்து ரெஸிடன்ஸி ஆபீசில் தலைமைக் குமாஸ்தா. அவரும் அதுசமயம் இந்த மூவர்களுடைய வாதங்களையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

ஈ.வெ.ரா. பேசும் முறையும், விவாதிக்கும் வன்மையும் அவருக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது. முதலியார் இவர்கள் மூவரையும் தன் வீட்டிற்கழைத்தார். அவருடைய வீட்டிலிருந்த பெண்கள் ஊருக்குச் சென்றிருந்தமையால், வீட்டிலேயே இருந்து சமைத்துத் தனக்கும் போட்டுவிட்டு சாப்பிட்டுக்கொண்டிருக்குமாறு சொல்லிவிட்டார். முதலியார் ஆபீசுக்குப் போகிற வரையில் இவர்களோடு அதுவும் முக்கியமாய் ஈ.வெ.ரா.வுடன் அளவளாவிக் கொண்டிருப்பார். அவர் ஆபீசுக்குப் புறப்பட்டதும் இம் மூவரும் தங்கள் உத்யோகமாகிய ஊருக்குள் பிச்சைச்குப் போய்விடுவார்கள். வீட்டுக்கு வீடு அரிசியும், சில்லறைக் காசுகளும் கிடைக்கும். முதலியார் ஆபீசிலிருந்து வருவதற்குள் இவர்களும் வீட்டிற்குத் திரும்பிவிடுவார்கள். ஒருநாள் திடீரென்று முதலியார் இவர்களுடைய சமையல் அறைக்குள் எட்டிப் பார்த்தார். ஒரு மூலையில் பலரகமான அரிசிகளும், அய்தராபாத் செப்புக் காசுகளும் கொட்டிக் கிடந்தன. "இது என்ன?'' என்று ஈ.வெ.ரா.வைக் கேட்டார் முதலியார். தங்கள் உத்யோகத்தைப்பற்றிச் சொன்னார் ஈ.வெ.ரா. "இனி இந்த வேலை செய்ய வேண்டாம்'' என்று சொன்னார் முதலியார். தமிழர்களான உத்யோகஸ்தர்கள் ஆளுக்கு 2, 3 ரூபாய் வசூல் செய்தும் கொடுத்தார்கள். எஞ்சினியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுக்கு அழைத்துப் போவார்கள்.

இதற்குள் இம் மூவருக்கும் கிராக்கி அதிகமாகி விட்டது. ரங்கநாதம் நாயுடு என்பவர் வீட்டில் தினசரி காலட்சேபம் நடத்த ஆரம்பித்து விட்டார்கள். சமஸ்கிருத பண்டிதர் வால்மீகி ராமாயணம், புராணக்கதை, சமஸ்கிருதப் ஸ்லோகங்களைச் சொல்லி, தமிழில் வியாக்கியானஞ் செய்வார். அங்குத் தெலுங்கர்களே அதிகமாகையால், அந்தத் தமிழ் வியாக்கியானத்தைத் தெலுங்கில் மொழிபெயர்த்துச் சொல்லவேண்டிய வேலைதான் ஈ.வெ.ரா.வுக்கு. பெரிய உத்தியோகஸ்தர்களும், பலவிதமான பொதுமக்களும் கூடியிருப்பார்கள். அய்யர் சொல்லும் விஷயங்களில் அதிகமான கைச் சரக்கையும் சேர்த்து அள்ளிவீசுவார் ஈ.வெ.ரா. வேடிக்கைப் பேச்சுகள், அருமையான கிண்டல்கள், குட்டிக் கதைகள், உவமானங்கள் இவற்றைக் கலந்து சரமாரியாகப் பொழிவார். நகைச்சுவையோ கேட்போர்களை அப்படியே குலுங்க வைத்துவிடும். 

மொழிபெயர்ப்பு என்ற பெயர்தானே ஒழிய, ஒரு தனிப் பிரசங்கம் என்றே சொல்லலாம். இவ்விதமாகக் காலட்சேபம் செய்துகொண்டு மூன்று ‘துறவி'களும் சிறிதுகாலம் அங்கு வசித்தார்கள். பிறகு மூவரும் காசிக்குப் போகவேண்டுமென்று முடிவு செய்தனர். மூவரும் புறப்படப்போகும் செய்தியை அறிந்த நண்பர்கள் அவர்களைத் தடுத்தார்கள். முதலியார், ஈ.வெ.ரா.வைத் தனியே அழைத்து, அந்த பிராமணர்கள் கூடப் போகவேண்டாமென்று சொன்னார். அவர் கேட்கவில்லை. ஈ.வெ.ரா. உயிருக்கு மோசம் வந்துவிடுமோ எனப் பயந்து, நகைகளை மட்டுமாவது கழற்றித் தன்னிடம் கொடுத்துவிட்டுப் போகும்படியும், சலிப்புத் தோன்றும்போது அங்கேயே வரும்படியும் கூறினார். முதலில் ஈ.வெ.ரா. சந்தேகப்பட்டார். பிறகு ஒருவாறு துணிந்து நகைகளைக் கழற்றி, அட்டை சோப்புப் பெட்டியில் வைத்து, நகைகளின் விவரங்களடங்கிய துண்டுக் கடிதமும் அதில் வைத்தார்.

(தாகம் ஜனவரி 2006 இதழில் வெளியான கட்டுரை)

- சாமி சிதம்பரனார்

Pin It