கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

கலைஞரின் 94 ஆவது பிறந்ததினம் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. நாட்டில் உள்ள முன்னணித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டு கலைஞரை வானளாவப் புகழ்ந்து கருத்துரைத்தனர். கலைஞரின் சட்டமன்றப் பணிகள் பற்றியும் அவர் சட்டமன்றத்தில் அடித்த நகைச்சுவைத் துணுக்குகள் பற்றியும் ஏற்றியும், போற்றியும் பேசினர். அது எல்லாம் உண்மைதான் என்றோ, இல்லை பொய் என்றோ நாம் நிரூபிக்கும் வேலையில் ஈடுபட விரும்பவில்லை. பேசுபவர்கள் ஓவ்வொருவருக்கும் ஓர் உள்ளார்ந்த நோக்கம் இருக்கலாம், இல்லை இல்லாமலும் போகலாம். தேர்தலை மையப்படுத்திக் கூட இருக்கலாம். அது எல்லாம் வரும் சட்டமன்றத் தேர்தலிலோ, இல்லை நாடாளுமன்றத் தேர்தலிலோ, இல்லை பஞ்சாயத்துத் தேர்தலிலோ நம்மால் தெரிந்துகொள்ள முடியும். எனவே அதற்கான ஆராய்ச்சியில் நாம் ஈடுபடத்  தேவையில்லை. போலியான முகமூடிகள் ரொம்ப நாட்களுக்குத் தாக்குப்பிடிப்பதில்லை.

karunanidhi stalin kanimozhiஎனவே அடுத்தவர்கள்  கலைஞரைப் பற்றி என்ன சொன்னார்கள், என்ன நினைக்கின்றார்கள் என்பதைப்பற்றி கவலைப்படாமல், நேராக நான் விஷயத்திற்கு வருகின்றேன். பல நாட்கள் யோசித்தது உண்டு, நான் எப்படி ஒரு நாத்திகனாக அதுவும் தீவிரமான பொருள்முதல்வாதியாக மாறினேன் என்று. காரணம் எல்லாரையும் போல தீவிரமான ஆன்மீகத்தில் கோயில், கோயிலாக உட்கார்ந்து மனமுருகி வேண்டுதலை நிறைவேற்றக்கோரி கடவுளிடம் வேண்டுகோள் வைத்தவன் தான் இந்தக் கார்கி. அப்படி இருந்த நான் எந்தக் கணத்தில் ஒரு நாத்திகனாக மொழி மாற்றம் செய்யப்பட்டேன். நிச்சயமாக இன்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும், அது கலைஞரின் பராசக்தி திரைப்படத்தால்தான் என்று. ஆம் வேறு எந்த வாய்ப்புகளும் அற்ற, நான் வாழ்ந்த அந்த வறண்ட பட்டிக்காட்டில் வேறு எப்படித்தான் ஒருவன் பகுத்தறிவு சிந்தனைகளை கைக்கொள்ள முடிந்திருக்கும்? அதுவும் ஒருவேளை சோற்றுக்கே வக்கற்று கோயிலில் போய் “அண்ணா ரொம்ப பசிக்குது கொஞ்சம் சாப்பாடு  இருந்தா கிடைக்குமா?” என்று கைநீட்டி வயிறு துடிக்க துடிக்க பசியால் கைகால்கள் நடுங்க கிழிந்துபோன டாயருடனும் அழுக்குப் பிடித்த சட்டையுடனும் நா தழுதழுக்க கெஞ்சிப் பிச்சை எடுத்த அந்த இளம் பிராய கார்கியால் வேறு எப்படித்தான் நாத்திகத்தைக் கற்றுக்கொண்டிருக்க முடியும்?.

பெரியாரின் சிந்தனைகள் எல்லாம் படித்து அறிந்திராத காலகட்டம் அது. பெரியாரின் ஆளுமை எப்படிப்பட்டது என்று சொல்லித்தர ஆளும் இல்லை, அதற்கான வாய்ப்புகளும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் கலைஞரின் பராசக்தி எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதுவரை என்னுடைய துன்பத்தை எல்லாம் கடவுள் கண்டிப்பாகத் தீர்த்துவைப்பார் என்று  நம்பிக்கொண்டிருந்த எனக்குள் கடவுள் என்ற பிம்பம் உடைந்து கருக்கலைப்பு ஆனது அப்போதுதான். அந்தத் திரைப்படத்தைப் பார்த்த பின்னால் ஒவ்வொரு கடவுளும் ஒரு எதிரியாக, என் சாப்பாட்டை பிடுங்கிக்கொண்ட பாதகர்களாக என்முன்னால் விரிந்தார்கள். என்னுள் பல கேள்விகளை அந்தத் திரைப்படம் எழுப்பிச்சென்றது. திரைப்படத்தின் பல வசனங்கள் என்னை பல நாட்கள் தூங்கவிடாமல் துன்புறுத்தியது. அந்தத் துன்புறுத்தல்கள் தான் என் பகுத்தறிவுக் கண்ணைத் திறந்தது.

அப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் வகுப்பில் நான் தான் கடுமையான நாத்திகப் பிரச்சாரம் செய்பவன். ஒவ்வொரு கடவுளையும் அவர்களின் உடையில் இருந்து அவர்கள் வைத்திருக்கும் பொருட்கள் வரை பயங்கரமாக ஓட்டி மாணவர்களை சிரிக்க வைப்பேன். அதன் உச்ச கட்டமாக ஒரு நாள் பள்ளிக்கு அருகில் கேட்பாரற்றுக் கிடந்த பிள்ளையார் சிலையின் மீது சிறுநீர் கழித்து என்னை ஒரு வேளை சோற்றுக்குப் பிச்சை எடுக்க வைத்து, அதுவும் பல சமயங்களில் கிடைக்காமல் செய்த கடவுள் மீதான என் கொடிய வஞ்சத்தைப் பழி தீர்த்துக்கொண்டேன். மனதில் அப்படியும் ஒரு சிறு பயம் இருந்தது. கடவுள் என்ற ஒன்று உண்மையாக இருந்து என் கண்ணைக் குத்திவிடுவாரோ என்று.  ஆனால்  நல்லபடியாக அப்படி ஒரு அசம்பாவிதம் எதுவும்  நடக்கவில்லை. இது எனக்குக் கூடுதல் உத்வேகத்தைக் கொடுத்தது. அதற்குப் பின்னால் பிள்ளையார் சிலையின் மீது சிறுநீர் கழிக்கும் வைபோகத்தை பல நண்பர்களுக்கு நேரடியாக செய்துகாட்டி அவர்களைத் திடுக்கிட வைத்தேன். பள்ளி அருகில் இருந்த பிள்ளையார் சிலை மட்டும் அல்லாமல் எங்கள் ஊரில் பயபக்தியோடு வழிபட்டு வந்த, வேலி போட்டு அடைக்கப்பட்ட சிலைகூட என சிறுநீருக்குத் தப்பவில்லை. இதை ஒரு வாடிக்கையான தொழிலாகவே பல நாட்கள் செய்துவந்தேன். ஏறக்குறைய நான் பனிரெண்டாம் வகுப்பு முடியும் வரை  அறிவியல் மாணவனான என் ஆன்மீக ஆராய்ச்சி தொடர்ந்துகொண்டே இருந்தது. சுற்றுவட்டாரத்தில் என் சிறுநீரால் குளிப்பாட்டப்படாத கடவுளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்த கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்தேன். என் நண்பர்கள் மிகச் சிறந்தவர்கள், ஒரு நாளும் என்னைக் காட்டிக்கொடுத்ததில்லை. அப்படிக் காட்டிக்கொடுத்திருந்தால் இந்நேரம் எனக்குப் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டாகி இருக்கும்.

 இதை எல்லாம் ஏன் இப்போது பகிரங்கப் படுத்துகின்றேன் என்றால் இதற்கெல்லாம் அடித்தளம் போட்டவர் கலைஞர் என்பதால்தான். அதன் பின்னால் நேரடியாக பெரியாரை வாசித்தபோது கலைஞரைப் பற்றி இன்னும் கூடுதலாக குறிப்பாக ‘கண்ணீர்த் துளிகளை’ பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. அப்படியும் கூட கலைஞர் மீதான என அன்பு பெரிதாக மாறவில்லை. என்னுடைய தமிழ்ப் பேராசிரியரிடம் ஏறக்குறைய இரண்டு மூன்று மாதங்கள் கெஞ்சிக்கேட்டு அவர் மனமில்லாமல்  வேண்டா வெறுப்பாக என தொந்தரவு தாங்க முடியாமல் தொல்காப்பியப் பூங்கா நூலைக் கொடுத்தார். கொடுக்கும்போதே “தொலைத்துவிட்டால் நீதான் வாங்கித்தரனும், இன்னும் இரண்டு நாளில் படித்துவிட்டு தந்துவிட வேண்டும்” என்ற முன் நிபந்தனையுடன் படிக்கக் கொடுத்தார். அப்போதே அதன் விலை 500 ரூபாய். நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத விலை. இருப்பினும் ஓசியில் படிக்கக் கிடைத்த மகிழ்ச்சியில் காலேஜுக்கு ஒரு நாள் மட்டையைப் போட்டுவிட்டு  விடுதியில் அறையை உட்புறமாக சாத்திக்கொண்டு ஒரே மூச்சாகப் படித்து முடித்து சொன்ன நாளில் சரியாகக் கொடுத்துவிட்டேன். அதனால் என்மீது  நம்பிக்கை வைத்து அதற்குப் பின்னால் பல நூல்களை எனக்குப் படிக்கக் கொடுத்தார். அவரும் ஒரு திமுகவின் தீவிர அபிமானி என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின்னால் நூலகத்தில் இருந்து அவருடைய சங்கத்தமிழ், நெஞ்சுக்கு நீதி தொகுப்பு நூல்கள் போன்றவற்றை  ஆர்வமாகப் படித்திருக்கின்றேன். இன்றும் கூட திருக்குறளைப் படிக்க நினைத்தால் முதலில் எடுப்பது கலைஞரின் உரையைத்தான்.

இப்படி என்னைச் சுற்றி இருந்த எல்லாமே ஒரு காலத்தில் பெரியார், அண்ணா, கலைஞர், வீரமணி என்று இப்படியேதான் இருந்தது. அதனாலேயே என்னவோ இன்றுவரையிலும் பெரியாரை  யாராவது தப்பாகப் பேசிவிட்டால் அப்படி பேசியவர்கள் மீது கடுமையான கோபம் மேலோங்கிவிடுகின்றது. பல முறை முயற்சி செய்தும் இந்தக் குணத்தை என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை இன்றுவரையிலும்.

அதற்குப் பின்னால் மார்க்சிய லெனினிய அமைப்புகளுடன் எனக்கு ஏற்பட்ட தொடர்பும் அதன் மூலம் நான் கற்ற கம்யூனிசக் கல்வியும் கலைஞரை வேறு ஒரு கோணத்தில் பார்க்க  எனக்குக் கற்றுக்கொடுத்தது. அது கலைஞரை ஒரு நாத்திகவாதி என்ற கோணத்தில் இருந்து ஒரு பிழைப்புவாதி என்ற கோணத்தில் கொண்டு போய் நிறுத்தியது. அவர்கள் முன்வைத்த கலைஞரைப் பற்றிய எந்த ஒரு கருத்தையும் என்னால் இன்றுவரையிலும் மறுக்க முடியவில்லை. கலைஞரை நாம் ஒரே கலைஞராகப் பார்த்தோம் என்றால், அவரை அவ்வளவு சரியாக நம்மால் புரிந்துகொள்ள முடியாது. அவரை பெரியாருடன் இருந்த கலைஞர், அதற்குப் பின்னால் திமுகவில் இருந்த கலைஞர், அதற்குப் பின்னால் திமுகவாகவே இருந்த கலைஞர் என்று பிரித்து மதிப்பிட்டால் தான் அவரின்  உண்மையான முகத்தை தரிசிக்க முடியும். முதல் இரண்டு கலைஞரை விட கடைசியாக இருந்த கலைஞர் பின்பற்றுதலுக்குக் கொஞ்சம் கூட தகுதியற்றவர். நேர்மை என்பதையும், வாய்மை என்பதையும் மறந்த, குடும்ப நலன் ஒன்றே தன் நலன் என்று கருதிய சுயநலவாதி. இப்படிச் சொல்வதால் திமுக நண்பர்கள் கோபித்துக்கொள்ளலாம். ஆனால் நாம் சொல்லவில்லை என்றாலும் வரலாறு அப்படித்தான் சொல்லும்.

திருக்குவளையில் இருந்து  பெரியாரின் குறிக்கோளை வென்றெடுக்கப் புறப்பட்ட அந்தத் தட்சிணாமூர்த்திக்கும் இன்று பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாய் இருக்கும் கருணாநிதிக்கும் ஒரு பாரிய இடைவெளி உள்ளது. அது ஈழ மக்கள் இந்திய ராணுவத்தின் வழிகாட்டுதல்படி துடிக்கத் துடிக்க படுகொலை செய்யப்பட்டபோது தன் பதவியையும், தன் குடும்பத்தினரின் நலனையும் கருத்தில் கொண்டு அவர் செய்த வரலாற்று துரோகத்தில் அடங்கியிருக்கின்றது. அதற்குக் காரணமான காங்கிரசுடன் இன்றுவரையிலும் அவர் வைத்திருக்கும் கூட்டணியில் அடங்கியிருக்கின்றது. தமிழகத்தில் பல சாதிக்கட்சிகளை வளர்த்துவிட்ட அவரின் தேர்தல் பிழைப்புவாதத்தில் இருக்கின்றது, அவரது ஓட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் செல்வ செழிப்பில் கொழிப்பதில் இருக்கின்றது. இவ்வளவும் எப்படி வந்தது என்று  நாம் கலைஞரிடம் கேட்கத் தேவையில்லை. ஏன் என்றால் அது தேர்தல் அரசியலின் தவிர்க்கமுடியாத உப விளைவுகள். அதற்குக் கலைஞரை மட்டும்  நாம் குற்றம் சொல்வது  உள்நோக்கம் கொண்டதாகவே அவரின் தீவிரமான ஆதரவாளர்களால் பார்க்கப்படும்.

 சரி, இருக்கட்டும் கலைஞர் அவர்களின் பகுத்தறிவு சார்ந்த திரைப்படங்களுக்கும், அவரின் மேன்மையான இலக்கியப் பணிகளுக்கும், அவர் அவ்வப்போது உதிர்த்த சில நாத்திகக் கருத்துகளுக்கும் நாம் நன்றி சொல்லலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. நாம் தெரிந்துகொள்ள வேண்டியது எல்லாம் எப்பேர்ப்பட்ட தட்சணாமூர்த்திகளையும் தேர்தல் அரசியல் கருணாநிதியாக மாற்றிவிடுகின்றது என்பதுதான். கலைஞருக்கு  என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரின் பராசக்தி ரசிகன் என்ற முறையிலும், என்னை நாத்திகனாய் மாற்றியவர் என்ற முறையிலும்.

 - செ.கார்கி