கீற்றில் தேட...

                “ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன” - என்று மேல்நாட்டு அறிஞர் விக்டர் ஹியுகோ கூறுவார். நூலகங்கள் அறிவுத் தேடலை நிறைவு செய்கின்றன.  வாசிப்பும், வாசிப்பின் வழியே உருவாகிற சிந்தனையும் நம்மைப் பொதுவான நிலையிலிருந்து விடுவித்து சிறப்பானதொரு மேம்பாட்டிற்குத் தூக்கிச் செல்கின்றன.

                books rackகி.மு. நான்காம் நூற்றாண்டிலேயே நூலகங்கள் அமையப் பெற்றதாக வரலாற்றுக் குறிப்புகள் உண்டு.

காகிதமும், அச்சுப் பொறியும் கண்டுபிடித்த பிறகு இலக்கியம், வரலாறு, அறிவியல், கணிதம், சுற்றுச்சூழல் எனப் பலவகை நூல்கள் உலக மொழிகளில் வெளிவரத் தொடங்கின.

எகிப்திய மண்ணில் என்றோ வாழ்ந்து, கால வெள்ளத்தில் கரைந்து போன அறிவார்ந்த மன்னன் ‘பாரோ’ தான் நெஞ்சார நேசித்து வாசித்த புத்தகங்களின் இருப்பிடத்தை ‘மன மருத்துவ நிலையம்’ என்று பெயரிட்டு மகிழ்ந்தான் என்பது வரலாறு!.

                இந்தியாவில் நாளந்தா பல்கலைக்கழகத்திலும், தஞ்சை சரஸ்வதி மகாலிலும் நூலகங்கள் அமைக்கப்பெற்று மாணவர்களின் பயன்பாட்டிற்கென நடத்தப்பட்டன.

                வீரம் விளைவது போர்க்களத்தில்! ஆனால், ஈர இதயங்கள் பூப்பது புத்தகத்தில்; திப்பு, திருமணப் பரிசாக தனக்கு ஒரு நூலகம் வேண்டும் என்றே தந்தையிடம் கேட்டார்.  அதில், உலகின் பிறமொழி நூல்கள் அனைத்தையும் மொழிபெயர்த்துக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.  அரசியல் - விவசாயம் - மதம் - தத்துவம் - ராக்கெட் தொழில்நுட்பம் - என்று அறிவு வெளிச்சம் பரவச் செய்தார்.  சுருக்கமாகச் சொல்வதனால், சூரியனுக்கு கீழே உள்ள அத்துனை பொருள்கள் பற்றிய நூல்களும் திப்புவின் ஆசைக்கேற்ப அவரது நூலகத்தில் இடம்பெற்றன!

                மைசூர் முழுவதும் பல கிளை நூலகங்களை அமைத்தார். அந்த நூலகங்களில் இடம்பெற உலகெங்குமுள்ள புத்தகக் கடைகளிலிருந்தும் அரிய நூல்களை வரவழைத்தார் திப்பு.

                இந்தியாவில் முதன் முதலாக 1948 ஆம் ஆண்டு நூலகச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அச்சட்டம் 1950 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.  வீட்டு வரியில் மூன்று விழுக்காடு நூலக வரி வசூல் செய்யப்பட்டது.  தற்போது பத்து விழுக்காடு நூலக வரி வசூலிக்கப்படுகிறது.

                இந்தியாவிலேயே முதன் முதலில் தமிழகத்தில்  1936 ஆம் ஆண்டில் தங்களுக்கு விருப்பமான நூல்களைத் தேடி எடுத்துப் படிக்கவும், வீட்டிற்கு எடுத்துச் சென்று படித்து முடித்தவுடன் திரும்ப ஒப்படைக்கவுமான முறை,  அமல்படுத்தப்பட்டது.  ‘தமிழ்நாடு புத்தகாலய பிரச்சார சங்கம்’ என்ற அமைப்பை நிறுவி கிராமங்கள் தோறும் சென்று நூலக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

“நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

                                  பண்புடை யாளர் தொடர்பு”

என்னும் குறளின் மூலம், நூல்களைப் படிக்க வேண்டியதின் அவசியத்தையும் அதன் மூலம் பண்புடையார் ஆவதன் பயனையும் நூலகம், நுட்பமாய் உணர்த்தும்!

                நம்மை ஏமாற்றாத, ஒரு சிறந்த நண்பன் புத்தகம் மட்டுமே!.  நல்ல புத்தகங்களைப் படிப்பதால் அறிவு வளரும்! உயர்ந்த சிந்தனைகள் பிறக்கும்! எண்ணங்கள் நேர் பெறும்! நமது ஆற்றல் பெருகும்! திறமைகள் மிளிரும்! உற்சாகம் ஊற்றெடுக்கும்! சோர்வு அகலும்! மனம் நிறைவு பெறும்! முடிவுகள் எடுக்க புத்தகம் துணைபுரியும்! வாழ்க்கை மேம்படும்! முன்னேற வழி துலங்கும்!

நூலகம் என்பது பல துறை அறிஞர்கள் ‘வாழும் இடம்’!  நூல் நிலையம் ஓர் ‘அறிவுக் களஞ்சியம்’!

                நூலகங்களுக்குச் சென்று, புத்தகங்களை எடுத்து வந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  குழந்தைகளையும் நூலகங்களுக்கு அழைத்துச் சென்று, புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை அவர்களுக்கும் ஊட்ட வேண்டும். 

                நூலகம் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஒழுக்கத்தை ஊட்டும்!, பகுத்தறிவுத் திறனை, வளர்க்கும்! நற்பண்புகளையும், நனிநாகரிகத்தையும் கற்றுத்தரும்! வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் அமுதசுரபியாய் அள்ளிக்கொடுக்கும்!

“நல்ல புத்தகங்கள் நல்ல கனவுகளை வளர்க்கும். நல்ல கனவுகள் நல்ல எண்ணங்களை உண்டாக்கும்.  நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களை உருவாக்கும்” என்று இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

ஒடுக்கப்பட்டவர்களின் கைவாளாகக் கருதப்படும் மூலதனத்தை மார்க்ஸ் எழுதி முடிக்க 17 ஆண்டுகள் ஆயின.  லண்டன் மியூசியத்தின் நூலகத்தில் ஒவ்வொரு நாளும் 16 மணி நேரம் பல்வேறு தத்துவங்களையும், பொருளாதாரச் சித்தாந்தங்களையும் ஆய்வு செய்து, அவர் வடித்துத் தந்ததுதான் ‘மூலதனம்’!

“ரஷ்ய நாட்டின் புரட்சித் தலைவர் லெனினிடம் வாசிப்பு வெறி இல்லாது போயிருந்தால், நாம் இன்று அறிந்துள்ள லெனின் இவ்வாறு வெளித்தோன்றியிருக்க முடியாது” -  என்று லெனினின் மனைவி க்ரூப்ஸ்க்காயா கூறியுள்ளார்.  லெனின் தமது பெரும்பாலான நேரத்தை நூல் நிலையங்களில் செலவிட்டார். சமாராவில், பீட்டர்ஸ்பெர்க்கில், ஜெனிவாவில், மாஸ்கோவில், லண்டனில், சைபீரியச் சிறையில் – என்று எங்கு அவர் வாழ நேர்ந்தபொழுதும் புத்தகங்களைப் பெற்றுப் படிப்பதை மட்டும் கைவிடவில்லை. 

மாஸ்கோவிலுள்ள லெனின் நூலகம் உலகின் மிகப் பெரிய நூலகம் என்ற சிறப்புடையது. அந்நூலகத்தில் ஒரு கோடியே நாற்பது லட்சம் நூல்கள், நூற்று ஐம்பது மொழிகளில் உள்ளன.

சட்டமேதை அம்பேத்கார் நூலகத்திற்குச் சென்றால் நேரம் போவது தெரியாமல் படித்துக் கொண்டே இருப்பாராம்.  மற்றவர்கள் எல்லாரும் சென்றபின் கடைசியாக நூலகப் பணியாளர் நூலகத்தை மூட வேண்டும் என்று கூறிய பின்னர்தான் நூலகத்தை விட்டு வெளியே வருவாராம்.

 “காஞ்சிபுரத்திலிருந்து, முதுகலைப் பட்டதாரியான ஓர் இளைஞன், சென்னை நோக்கிச் சென்றான்; முடிவில் தமிழகத்தின் முதல்வராகத் திரும்பினான்” - என்று பேரறிஞர் அண்ணாவைப் புகழ்வார்கள்!   அவர், சென்னை கன்னிமாரா நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களையும் படித்தவர்.  நூலகம் திறக்கும் பொழுது உள்ளே நுழைந்து, இரவு அடைக்கும் பொழுது வெளியே வருவார். அமெரிக்க மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டபோது, அவர் அரிதான நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார்.  அந்த நூல் முழுவதையும் படித்து முடிக்க வேண்டும் என்பதற்காகவே அறுவை சிகிச்சையை ஒரு நாள் ஒத்திவைக்கும்படி மருத்துவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.  இது, வாசிப்பின் மேல் வைத்த அவரின் நேசிப்பை உணர்த்துகிறது!

வீட்டிற்கு ஓர் புத்தகச்சாலை சிறிய அளவிலாவது அமைக்க வேண்டும்.  அறிவே ஆயுதமாகிவிட்ட இன்னாளில் வீட்டிற்கு ஓர் புத்தகச்சாலை அமைக்கப்பட வேண்டியது அவசியம்” என்று உலக மக்களுக்கு உணர்த்திச் சென்றவர் பேரறிஞர்  அண்ணா!

‘நல்ல நல்ல கருத்துகளை-ஆக்கப்பூர்வமான கருத்துகளை-பகுத்தறிவுக் கருத்துகளை-அடுத்த தலைமுறைக்குச் சிந்தனையைக் கூட்டக்கூடிய, கருத்துகளை உடைய சமுதாயத்தில் சமத்துவச் சிந்தனையை ஊட்டக் கூடிய விதத்தில் அமைந்த புத்தகங்களுடன் கூடிய, ஒரு நூலகம் உருவாக்கப்பட வேண்டும்’ - என்றும் பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டார்.

                 பாடல் வரிகள் மூலம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூலகங்களின் தேவையை இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். 

                “புனிதமுற்று மக்கள் புது வாழ்வு வேண்டில்

                 புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும்”

இந்தியாவின் தலைமை அமைச்சர் ஜவஹர்லால் நேரு, “நான் மறைந்தபின் என் உடல் மீது மலர் மாலைகளை வைக்கவேண்டாம்; என் மடி மீது புத்தகங்களைப் பரப்புங்கள்” – என்று கேட்டுக் கொண்டார்!. இதன் மூலம் புத்தகங்களை அவர் எந்த அளவிற்கு நேசித்தார் என்பதைப் புரிந்துக் கொள்ள முடியும். 

இந்தியாவில் தேசிய நூலக வார விழா 1967 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய நூலக வார விழாவின் மூலம், ‘நூலகர்-வாசகர்’ உறவு மேம்படுகிறது. நூலகத்தின் பணியைப் பொது மக்கள் உணர வாய்ப்பு எற்படுகிறது. புதிய வாசகர்கள் நூலகத்திற்குச் சேர்க்கப்படுகிறார்கள். புதிய உறுப்பினர் சேர்ப்பு நடைபெறுகிறது. நூலகத்தின் பயன்கள் பொது மக்களிடம் கொண்டுச்செல்லப்படுகின்றன. பொது மக்களிடமிருந்து நூலக வளர்ச்சிக்குப் பொருளுதவியும் பெற முடிகிறது. நூலகங்கள் தொடர் கல்விக்கு வாய்ப்பாக உள்ளன. படிக்கும் பழக்கத்தைப் பெரிதும் வளர்க்க உதவுகின்றன.

“அறியாமையைவிட மிகப் பெரிய நோய் இந்த உலகத்தில் வேறு கிடையாது”.- என்றார் இங்கர்சால். ஒரு நாட்டின் வளமை, அதன் இயற்கைச் செழிப்பால், அதன்  மூலதனத்தால், அதன் நிலப்பரப்பால் சாத்தியமாகும் என்று முன்னர் கருதப்பட்டது.  ஆனால், அண்மைக் கால நிலைமை வேறு; “அறிவு ஒன்று இருந்தால் போதுமானது; வெற்றி வந்து சேரும்-என்பது இந்த 21 – ஆம் நூற்றாண்டுக் கோட்பாடாக  ஆகிவிட்டது!.

“புத்தகங்கள் மருந்துகளைப் போன்றவை; மூடத்தனம் என்கிற நோயை முற்றாக விரட்டும் மூலிகை மருந்துகள் அவை”- என்பது சீனப்பழமொழி!

தோரேவின்’சட்ட மறுப்பு’ நூல்தான் காந்தி அடிகளுக்குப் புதிய போராட்ட வியூகத்துக்குப் படியமைத்துத் தந்தது.  மற்றவர்கள் பொழுது போக்கிற்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் படித்தபோது, காந்தி அடிகள், பின்பற்றுவதற்காகப் படித்தார்! அதனால்தான் அவர் மகாத்மாவானார்!

வாழ்க்கை முழுவதும் கல்வி கற்பதன் நோக்கம், ஜான் ரஸ்கினின் கருத்துப்படி, மனித ஆன்மாவை மிகச் சிறந்த நிலைக்கு அழைத்துச் செல்வதாகும்.  மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே மகிழ்ச்சியாக இருக்கவும், மற்றவர்களுக்குச் சேவை செய்கின்ற மனப்பான்மையினை ஏற்படுத்தவும், வாழ்நாள் முழுவதும் நூல்களைப் படிப்பது அவசியமாகிறது.

                நாளெல்லாம் நூலகத்தைப் பயன்படுத்துவோம்!

                பொழுதெல்லாம் நூலகத்தைப் போற்றுவோம்!!