கடலம்மா.. கடல் அரக்கியே.. கடல் தாயே என்று வால்போஸ்டர் மட்டும் அடித்து தம் ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்திவிட்டு முடித்துக்கொண்டவர்கள் உண்டு. வீட்டிலுள்ல பழைய துணிகளை நன்கொடையாக வழங்கி மனநிறைவு அடைந்தவர்கள் உண்டு. ஒருநாள் ஊதியத்தை வழங்கிப் பெருமைப்பட்டவர்கள் உண்டு. ரெண்டுநாள் தெருத்தெருவாக அலைந்து நன்கொடை வசூலித்து முதலமைச்சருக்கோ பத்திரிகைகளுக்கோ அனுப்பிய உள்ளங்கள் உண்டு. நேரடியாக களத்துக்குச் சென்று மக்களைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு கனத்த இதயத்தோடு அன்று மாலையே ஊர் திரும்பியவர்கள் உண்டு. இவை எல்லாமே மதிக்கத்தக்க நடவடிக்கைகள்தான்.
ஆனால் சிதறிக் கிடந்த கடற்கிராமங்களை அள்ளி முடித்து இயல்பு நிலைக்குக் கொண்டுவர அங்கே நேரடியான மனித உழைப்புத் தேவைப்பட்டது. நடக்க முடியாதவர்களைக் கைலாகு கொடுத்துத் தூக்கிச் செல்ல ஆள்பலம் தேவைப்பட்டது. சடலங்களைத் தேடி எடுத்து அடக்கம் செய்ய வலுமிக்க மனிதர்கள் தேவைப்பட்டார்கள். அரசு இயந்திரம் குப்புறப் படுத்துக்கிடக்கும் ஒரு நாட்டில் இத்தகைய சமயங்களில் மனித உழைப்பை சக மனிதர்கள் மட்டுமே வழங்க முடியும். இக்கடினமான நேரத்தில் மனமுவந்து இது நமது கடமையல்லவா என்கிற பதைப்புடன் களமிறங்கியது வாலிப சேனை. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வளர்ப்புகளான இவ்வீரர்கள் ஊண் உறக்கம் மறந்து பல மாதங்களாகப் பணியாற்றி வருகிறார்கள். தங்கள் வறுமையை நினையாமல் தங்கள் உடல் வருத்தம் பாராமல் கண் துஞ்சாமல் உடல் உழைப்பையும் மூளை உழைப்பையும் உற்சாகத்துடன் தந்து கொண்டிருந்தார்கள்.
சுயநலத்திலும் லஞ்சலாவண்யத்திலும் அதிகாரப்பசியிலும் லாபவெறியிலும் தேசத் துரோகத்திலும் எனச் சிதைந்து பஞ்சமும் பட்டினிச் சாவுகளுமென விடுதலை தவறிக்கெட்டுப் பாழ்பட்ட தேசமாக பாரத தேசம் மாறிவிடுமோ என்று தேசபக்தியும் மனசாட்சியும் உள்ள மனிதர்கள் மனம் பதைக்கும் ஒரு காலத்தில்- இல்லை- அது மட்டுமில்லை இந்தியா என்று உலகுக்கு அறிவித்தபடி இதோ ஆயிரமாயிரம் வாலிபர்கள் களத்தில் நிற்கிறார்கள். மனம் சிதைய வேண்டாம். நாங்கள் இருக்கிறோம். விரக்தியடைந்திட வேண்டாம். வீரர்கள் இன்னும் இருக்கிறோம். எல்லாமே காசுக்காக - பொது வாழ்க்கையும் காசுக்காகத்தான் என்று ஆகிவிட்டதே - காசு பணம் இல்லாமல் என்ன செய்ய முடியும் என்று புலம்பித் தவிக்க வேண்டாம். எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் மக்களுக்காக உழைத்திட பல்லாயிரம் பல்லாயிரமாய் இதோ கண்முன்னே நாங்கள் வருகிறோம்.
பகத்சிங் முழக்கிய பறைகளை இன்னும் உரத்து முழக்கியபடி வருகிறோம். குர்னாம்சிங் உப்பலும் கடலூர் குமாரும் விருதுநகர் சந்துருவும் கோவில்பட்டி அமல்ராஜும் தம் உயிர்கலந்து முழக்கிய பறைஒலியை இன்னும் வேகத்தோடு முழக்கியபடி நாங்கள் வருகிறோம் என்று வருகின்ற இந்த இளைஞர்கள் வாலிபர்சங்கத்தின் வெண்கொடியேந்திக் கடற்கரையில் கரங்கள் கோர்த்து நின்றால் இனிச் சுனாமி அலைகளும் பின் வாங்கிச் செல்லும்.
- ச.தமிழ்ச்செல்வன்