jallikattu protest

சமூகச் சிக்கலை முன்னெடுக்கும் இளைய தமிழர்களின் எழுச்சி மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழர் என்னும் உணர்வோடு உரத்து முழங்குகின்றனர், பல்லாயிரம் தமிழர்கள்! இவர்களின் எழுச்சி சரியான திசையில் சென்றால் தமிழினம் பெரும்பயன் பெறும். தமிழினம் தொடந்து புறக்கணிக்கப் படுவதும், அழிவுநோக்கித் தள்ளப்படுவதும் தேசிய இன ஒடுக்குமுறை!

பெருந்தேசியச் சிறைக்குள் ஒடுக்கவே இந்தி, சமற்கிருதத் திணிப்பும் வடநாட்டு விழாக்களின் திணிப்பும், வடவர் வல்லாண்மைத் திணிப்பும் தொடர்கின்றன. சல்லிக்கட்டு, பொங்கல் விடுமுறை முதலிய தமிழின அடையாளங்கள் இதனால்தான் கேள்விக்குள்ளாக்கப் படுகின்றன. " உன் பண்பாட்டைப் பரப்பு! ஆட்சி அதிகாரம் உன் மடியில் வந்து விழும்." - அரசியலின் தொடக்கப்பாடம் இது! வடநாட்டவர் அவர்கள் பண்பாட்டைப் பரப்புவதில் வெற்றியடைந்து வருகிறார்கள்:

* தமிழர் வீட்டுக் குழந்தைகள் பெயர்களில் வாழ்வது வடமொழி!

* தமிழர் வீட்டுச் சடங்குகளில் புரோகிதரோடு கூடவே வருவது வடமொழி!

* தமிழர் குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் பயிற்றுமொழி தமிழ் இல்லை. தமிழைப் பாடமொழியாகக்கூட பலர் எடுப்பதில்லை.

* தமிழின் அழிவை விரைவுபடுத்த வருகிறது, நடுவண்அரசின் புதிய கல்விக்கொள்கை!

* தமிழர் நாவில் தமிழை அப்புறப்படுத்த, பல இயக்கங்கள் களம் இறக்கப்பட்டுள்ளன. 'அவர்கள்' என்பதை 'ஜீ' என்பார்கள்; 'பாரதம், பாரத்மாதா, ஜெய்ஹிந்த், ராஷ்ட்ரிய, சேனா' எனச் சாமியாடியபடி இருப்பார்கள்.

* மீத்தேன், நியூட்ரினோ, காவிரித்தடை, முல்லைப் பெரியாறு முடக்கம், பாலாறு தடை எனத் தமிழன் கழுத்தைக் குறிபார்க்கும் கத்திகள்- எல்லாத் திசையிலும் அவர்களால் தொங்கவிடப்பட்டுள்ளன.

>>தமிழர் அடையாளங்களில் ஒன்றான சல்லிக்கட்டோடு இத்தனைக்கான பாதுகாப்புக் குரலையும் இணைப்போம்!

>>'இந்தியத் துணைக்கண்டம்' ('இந்திய நாடு' அன்று) எனச் சொல்வோம்!

>>இந்தியாவின் தேசியமொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்று( 'பிராந்திய மொழி' அல்ல) என உணர்வோம்!

>>>தமிழ்நாட்டின் திசையெங்கும் இளைய உள்ளங்கள் எழுப்பும் தமிழ்க்குரலை வரவேற்போம்!

>>>வீதிக்கு வந்து போராடும் அவர்கள் 'நான் தமிழன், நான் தமிழச்சி' என விம்மிப் பேசும் பெருமிதம் வீண்போகாது.

- செந்தலை ந.கவுதமன், சூலூர் பாவேந்தர் பேரவை

Pin It