சர்வதேச வேட்டி தினம் ஜனவரி 6 என்ற அறிவிப்பைக் கண்டு தமிழர்கள் உற்சாகம் அடைந்தார்களோ இல்லையோ, இந்திய தேசிய முதலாளிகளாக வளரத்துடிக்கும் தமிழ்நாட்டு வேட்டி வியாபாரிகளும், வேட்டிக் காவலர்களும் உற்சாகம் அடைந்தார்கள். இப்படி ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐக்கிய நாடுகள் அவையின் இணையதளத்திலோ, யுனெஸ்கோவின் இணைய தளத்தில் காணமுடியவில்லை. அப்படி எந்தத் தகவலும் இல்லை. ஆனால் வேட்டி வியாபாரிகளும், காவலர்களும் இதை ஊதிப் பெரிதாக்குகிறார்கள். அகில இந்திய மார்க்கெட்டைக் குறிவைத்து இந்த அறிவிப்புகள் வந்திருக்கலாம்.
ஐரோப்பாவில் இருக்கும் ஒரு ஆலைமுதலாளிக்கு இருக்கும் அரசியல் பின்புலம், திருப்பூரில் இருக்கும் ராம்ராஜ், ஈரோட்டில் இயங்கும் ஆலயா, எம்.சி.ஆர் வேட்டி நிறுவன அதிபர்களுக்கு இருக்காது என்பதும் நமக்குத் தெரியும். ஆனால், வேட்டிக்கும் சேலைக்கும் இருக்கும் மதப்பாதுகாப்பு, மதபலம் இந்தியாவில் வேறு ஆடைகளுக்கு இல்லை. இந்த இந்துமத பலத்தைப் புரிந்துகொண்ட அனைவரும் வேட்டி. சேலை வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கின்றனர். தமிழர்களின் ஆடைதானே வேட்டியும் சேலையும்? இதிலென்ன அகில இந்திய மார்க்கெட்? இதற்கு எப்படி இந்து மதபலம்? என்ற கேள்விகள் உங்களுக்கு எழவேண்டும்.
அகமதாபாத்திலும், சூரத்திலும் ஆயிரக்கணக்கான சேலை, வேட்டி உற்பத்தி ஆலைகள் வெற்றிகரமாக இயங்குகின்றன. பா.ஜ.க மோடியின் வெற்றியில் அந்த ஆலை அதிபர்களான பாட்டீல்கள் மிகமுக்கியப் பங்கு வகிக்கிறார்கள். அந்த ஆயிரக்கணக்கான வேட்டி, சேலை உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் மட்டுமா விற்பனை ஆகிறது? ஒரே ஒரு தமிழ்நாட்டுச் சந்தைக்காக மட்டுமா குஜராத்திகள் ஆயிரக்கணக்கான ஆலைகளை நடத்துகிறார்கள்? உறுதியாக இல்லை.
வேட்டி, சேலையின் இந்து மதப் பின்னணி
வேட்டியும் சேலையும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அணியப்படும் ஆடைகளாகும். அப்படியானால் தமிழர்களின் ஆடைப் பண்பாட்டை ஒட்டு மொத்த இந்தியாவும் ஏற்றுக்கொண்டுள்ளதா? அதுவும் இல்லை. இதோ, இந்து மதத்தின் தலைவன் மறைந்த சங்கராச்சாரி சந்திரசேகரேந்திரர் தனது தெய்வத்தின் குர ல் இரண்டாம் பாகத்தில்,
“இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்றால் சில அடையாளங்கள் உண்டு. வேஷ்டி, சேலை, நெற்றிப்பொட்டு இவையெல்லாம் தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன” எனத் தெளிவாகக் கூறியுள்ளார்.
ஆம் வேட்டி சேலை என்பது இந்துக்களின் தர்மசாஸ்திரங்கள் வலியுறுத்தும் ஆடைகள். அதனால்தான் இந்த ஆடைகள் இந்தியாவாக இருந்த நாடுகள் மற்றும் இந்துமதம் உயிரோடு இருக்கும் நாடுகள் அனைத்திலும் இந்துக்களின் அடையாளமாகவும், இந்தியாவின் அடையாளமாகவும் இன்றும் இருக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தமிழ்நாட்டில் நடத்தும் முக்கியக் கல்லூரி மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள விவேகானந்தர் கலைக்கல்லூரி. இந்தக் கல்லூரியில் மாணவர்கள் வேட்டி மட்டுமே அணிய வேண்டும். எந்தச் சூழலிலும் பேண்ட் போன்ற வேறு எந்த உடையையும் அணியக்கூடாது. ஆர்.எஸ்.எஸ் நடத்தும் அனைத்துக் கல்லூரிகளிலும் ஜீன்ஸ், டிசர்ட் களுக்கு அனுமதி கிடையாது.
இந்துக்களின் புனித ஆடை
ஒரு ஆணோ, பெண்ணோ, கணினி மென்பொருள் துறையில் வெளிநாட்டில் பணியாற்றுபவராக இருக்கட்டும், அறிவியலில் ஆராய்ச்சியில் பட்டங்களைப் பெற்ற மிகப் பெரும் ஆராய்ச்சியாளராக இருக்கட்டும், அணுவைப் பிளந்து ஆராய்ச்சி, மரபணுக்களையே மாற்றும் படிப்பு, பணி என எவ்வளவு சிறந்த பணிநிலையில் இருப்பவர்களும் - அந்தப் பணியிடங்களில் இருக்கும் போது ஜீன்ஸ், ட்ராக் சூட், லோயர், லெகின்ஸ், ஸ்லீவ்லெஸ், என எல்லா நவீனமுறை ஆடைகளையும் அணிந்தவராக இருந்தாலும் அவர்களது திருமணம் என்று வரும்போது இந்து மதத்தை அப்படியே உள்வாங்கி - பட்டுச்சேலை, பட்டு வேட்டியில் தான் காட்சி தருகின்றனர்.
இக்காட்சி தமிழ்நாட்டுத் தமிழர்களின் திருமணங்களில் மட்டுமல்ல; வடக்கே காஷ்மீர் பண்டிட்டுகளின் திருமணத்திலும், கிழக்கே வங்காளப் பார்ப்பனர்கள் மற்றும் வங்காளிகள் திருமணத்திலும், மேற்கே குஜராத்திகளின் திருமணத்திலும், மராட்டிய சித்பவன் பார்ப்பனர்கள் மற்றும் மராட்டியர்களின் திருமணத்திலும், உத்திரப்பிரதேச, பீகார், இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாழும் மிஸ்ரா, சர்மா, தீட்சித், முகர்ஜி என அனைத்துப் பார்ப்பனர்கள் மற்றும் அனைத்து தேசியஇனங்களில் உள்ள இந்துக்களின் திருமணங்களிலும் வேட்டி, சேலைகளே புனிதமான ஆடைகளாகக் காட்சிதருகின்றன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள சராசரி இந்து மக்களின் பாரம்பரிய ஆடையாகவும் வேட்டி, சேலைகளே இருக்கின்றன.
ஒவ்வொரு மாநிலத்திலும் வேட்டிக்கு ஒவ்வொரு பெயர். தமிழ்நாட்டில் வேட்டி, ஆந்திரா, கர்நாடகாவில் பஞ்சே, கேரளாவில் முண்டு, இந்தி பேசும் வடஇந்திய மாநிலங்களில் தோட்டி, பஞ்சாபில் லாச்சா, வங்காளத்தில் தட்டி, மராட்டியத்தில் தோட்டர் இப்படி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அதை உடுத்தும் முறையும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு முறை பின்பற்றப்படுகிறது. சேலையும் இதே போல ஒவ்வொரு மொழிக்கேற்ப பெயர்கள் மாறுபடுகின்றன. உடுத்தும் முறை மாறுகிறது. ஆனால் இந்தியா முழுவதும் அடிப்படை ஆடை வேட்டியும், வேலையும் தான்.
இந்த ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒருங்கிணைப்பது இந்து மதம் தான் என்பதில் வரலாறு அறிந்தவர்களுக்கு மாற்றுக்கருத்து இருக்காது. அந்த இந்து மதத்தின் அடையாளமாகத்தான் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வாழும் அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த இந்துக்களும் இந்த ஆடைகளை அணிகின்றனர். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ வேட்டி, சேலைகளைப் புனித ஆடைகளாகக் கருதுவதில்லை. குறிப்பாக இஸ்லாமியர்கள் பட்டினால் செய்யப்பட்ட ஆடைகளைக் குற்றமாகக் கருதுகிறார்கள். இந்துக்களுக்கோ பட்டு வேட்டியும், பட்டுச்சேலையும் தான் புனித ஆடை.
இந்தியாவின் பலமாநிலங்களுக்கும் பயணம் செய்பவர்கள், பல்வேறு மாநிலங்களிலும் வாழும் அடித்தட்டு, உழைக்கும் மக்களோடு பழகியவர்கள் இந்தியா முழுவதிலும் வேட்டி, சேலைகள் புனிதமாகக் கருதப்படுவதை நேரடியாகக் கண்டிருப்பார்கள். இந்தியா முழுவதும் சுற்றிவர வாய்பில்லாதவர்கள் இணையதளங்களிலேயே சான்றுகளை எளிதாகத் தேடி எடுத்துவிடலாம். உண்மை நிலை இப்படி இருக்க இந்த வேட்டி, சேலைகளைத் தமிழர்களின் அடையாளம் என்று எப்படிச் சொல்ல முடியும்?
வெளி நாடுகளில் இந்திய - இந்து அடையாளமாக வேட்டி, சேலை
உலகின் ஒரே இந்துநாடு என்ற நிலையில் இருந்த நாடு நேபாளம் ஆகும். அங்கு வாழும் இந்தியர்களான மாதேசிகள் ஆடை வேட்டி, சேலை தான். நேபாளத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்ட பிறகு அங்கு வாழும் இந்தியர்களான மாதேசிகள், தானுஸ், தாரஸ் இனத்தவர்கள் தங்களது உரிமைகளுக்காகப் பல போராட்டங்களை நடத்தினர். அவ்ற்றில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய போராட்டம் ஒன்று உள்ளது. அது ‘மாதேசிகளின் வேட்டிப் பேரணி’. கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் நாள் நேபாளத்தில் ஜானக்பூரில் இந்த வேட்டிப் பேரணி நடைபெற்றது. இந்தியர்களின் உரிமைக்காக இந்தியப் பாரம்பரிய ஆடை அணிந்து போராட்டம் என்பது தான் நாம் கவனிக்கத்தக்கது.
அதேபோல இந்தோனேசியாவில் உள்ள முக்கியத்தீவு பாலித்தீவு ஆகும். இந்த பாலித் தீவில் வாழ்பவர்களில் 93 சதவீதம் இந்துக்களாவார்கள். அங்கும், இன்னும் பிராமணன், சூத்திரன் என்ற வர்ணாசிரம தர்மங்களைப் பின்பற்றி வாழ்கிறார்கள். கோவில் அர்ச்சகர்களாக இன்றும் பார்ப்பனர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் உள்ள பாலி இந்துக் கோவில்களில் அரபு உடையையோ, இஸ்லாமிய உடையையோ அணிந்து உள்ளே நுழைய முடியாது. அங்கு இந்துக்களின் பாராம்பரிய உடையான வேட்டியும், சேலையும் அணிந்து சென்றால் மட்டுமே கோவிலில் நுழைய முடியும்.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளாக இருந்தாலும் அவர்கள் வேட்டி அணியாவிட்டால் அனுமதி கிடையாது. அதுபோன்ற பாலிக் கோவில்களின் விதிமுறைகள் தெரியாமல் அங்கு செல்லும் வெளிநாட்டுப் பயணிகளுக்காக கோவிலின் வாசலிலேயே வேட்டிகள் வழங்கப்படுகின்றன. கோவில் நிர்வாகமே வேட்டியை வழங்குகின்றது. கோவிலுக்குள் சென்று வழிபட்டுவிட்டு மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் வேட்டியைக் கொடுத்துவிட வேண்டும்.
மற்றொரு இஸ்லாமிய நாடான பங்களாதேசிலும் அங்கு வாழும் இந்துக்களின் திருமணங்களில் அணியப்படும் பாரம்பரிய ஆடை இந்த வேட்டி, சேலைதான். ஈழத்திலும், யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசாமி கோவிலில் இன்றுவரை ஆண்கள் வேட்டி அணிந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இப்படி வெளிநாடுகளிலும் இந்துக்களின் அடையாளமாகவும், இந்தியாவின் அடையாளமாகவும் இருப்பவைதான் வேட்டி, சேலைகள். தமிழர்களின் அடையாளமாக அல்ல!
சென்னை கிரிக்கெட் க்ளப்பில் கைலிக்குத்தான் தடை; வேட்டிக்கு அல்ல
கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை கிரிக்கெட் க்ளப்பில் நீதிபதி அரிபரந்தாமன் மற்றும் மூத்த வழக்கறிஞர் காந்தி ஆகியோர் வேட்டி கட்டிச் சென்றதற்காக க்ளப்பில் அனுமதிக்கப்படவில்லை. அதற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் அந்த கிரிக்கெட் க்ளப்பின் விதிகளில் வேட்டி தடை செய்யப்பட்ட ஆடை என்று குறிப்பிடப்படவில்லை. கைலி, பெர்முடாஸ் போன்ற ஆடைகளே க்ளப் விதிகளின்படி தடைசெய்யப் பட்டிருக்கின்றன. அதைத் தவறாகப் பயன்படுத்திய சில நிர்வாகிகளால் இச்சம்பவம் பெரிதானது.
இதற்காக அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும் களத்தில் இறங்கின. அறிக்கைகள் அனல் பறந்தன. 06.08.2014 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே தமிழக முதல்வரே ஒரு அறிவிப்பை வெளியிட்டார். “அந்த கிரிக்கெட் க்ளப்பின் பதிவுவிதிகளின்படி வேட்டி தடைசெய்யப்படவில்லை. கைலி தான் தடை செய்யப் பட்டுள்ளது” என்று அறிவித்தார். கைலி அடித்தட்டு மக்களின் உடை, கோடிக்கணக்கான தமிழ்நாட்டு ஆண்களின் உடை. பெர்முடாஸ் இலட்சக்கணக்கான இளைஞர்களின் உடை. ஆனால், கைலி இஸ்லாமியரின் பண்பாடாகப் பார்க்கப்படுகிறது. வேட்டி இந்துவின் அடையாளமாக இருக்கிறது. அதனால் அவற்றுக்காக எந்தத் தலைவனும், எந்தத் தலைமையும் அறிக்கைகூட விடவில்லை. வேட்டிக்காக தமிழ்நாடு சட்டமன்றமே அலறியது.
தமிழ்நாட்டுக் கோவில்களில் ஆடைக் கட்டுப்பாடு உயர்நீதிமன்ற உத்தரவு
வையம்பட்டி அருகே ஒரு கிராமத்தின் கோவில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மதுரை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டது. அதில் தீர்ப்புக்கூறிய நீதிபதி. முதலில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிவிட்டார். பிறகு தேவையே இல்லாமல் யாருமே எழுப்பாத ஒரு பிரச்சனைக்குத் தீர்வையே கொடுத்தார். அதுதான் 2016 ஜனவரி 1 முதல் இந்துக் கோவில்களில் ஆடைக்கட்டுப்பாடு.
ஆடல், பாடல் என்ற நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே ரசிக்கும் நிகழ்ச்சி. மைனர்களுக்கான நிகழ்ச்சி. அரைகுறையாகப் பெண்களின் உறுப்புகளைப் பார்க்க வேண்டும்; ஆபாச நெளிவுகளை இரசிக்க வேண்டும் என்று மனநோயாளிகளாகத் திரிபவர்களின் ஆசைகளை நிறைவேற்றும் நிகழ்ச்சி.
கோவில்களில் கண்ணியமான உடை அணிந்துவரவேண்டும் என்று கூறியுள்ளார் நீதிபதி. இவர் அனுமதி அளித்த ஆடல், பாடல் நிகழ்ச்சியை அதே நீதிபதி அவரது குடும்பத்தினருடன் அமர்ந்து பார்க்கத் தயாரா? ஒருமுறையாவது பார்த்திருந்தாலோ அல்லது அவற்றை நடத்தும் கிராமத்து மக்களோடு பழகியிருந்தாலோ அல்லது கோவில் விழாக்களில் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என நேர்மையாக எண்ணியிருந்தாலோ இந்த ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கான தடையை உறுதிப்படுத்தியிருப்பார். ஆனால் அவர் காப்பாற்றத் துடித்தது கோவிலின் கண்ணியத்தை அல்ல; இந்துக்களின் பாரம்பரிய அடையாளத்தை! இந்தியாவின் அடையாளத்தை!
இந்தோனேசியாவிலும், நேபாளத்திலும், பங்களாதேசிலும் வாழும் இந்துக்களால் கடைபிடிக்கப்படும் இந்துப் பாரம்பரியம் தமிழ்நாட்டில் நடைமுறையில் இல்லாவிட்டால் உச்சிக்குடுமி மன்றம் வேடிக்கை பார்க்குமா? எனவேதான் எவரும் கேட்காத கேள்விக்குத் தானே விடையளித்து வேட்டி, சேலைக்காக உத்தரவிட்டுள்ளது.
இதேபோல ஆந்திராவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த 2013 லேயே தனது கோவிலுக்குள் வேட்டி, சேலைகளுக்கு மட்டுமே அனுமதி என்று முடிவெடுத்துவிட்டது. அதை நிறைவேற்ற தேவஸ்தானக் குழுவில் சில நடைமுறைச் சிக்கல்கள். எனவே இன்னும் முழுமையாக நிறைவேற்றவில்லை. விரைவில் அங்கும் வேட்டி, சேலைகளுக்கே அனுமதி என்ற நிலை வரப்போகிறது.
வேட்டி, சேலை என்பது இந்து - இந்தியாவின் பாரம்பரியம் என்பது பார்ப்பனர்களுக்குத் தெரியும். இந்தியா முழுவதும் தொடர்பு வைத்திருப்பவர்கள் அவர்கள்தான். நாம் தான் அதைத் தமிழர்களின் அடையாளம் என்று தவறாகப் புரிந்துகொண்டுள்ளோம்.
தமிழ்த்தேசியர்களின் வேட்டி, சேலை மயக்கம்
தமிழர்களின் பண்பாட்டில் முக்கிய இடம் வகிப்பவர் முருகன் எனவும் அவர் ஒரு தமிழ்நாட்டு மன்னன் எனவும் பல தமிழ்த்தேசியர்கள் பேசி வருகிறார்கள். முருக பக்தர்களின் முக்கிய விழாவான தைப்பூசம் தமிழர்களின் பண்பாட்டு விழா. அதற்குத் தமிழ்நாடு முழுவதும் அரசு விடுமுறை அளிக்க வேண்டுமென தோழர் சீமான் அறிவித்துள்ளார். அரசியல்....நடக்கட்டும். நாம் கேட்க விரும்புவது, சீமானிடம் மட்டுமல்ல; அனைத்து வேட்டி மயக்கத்துக்காரர்களிடமும் கேட்கிறோம்.
கோடிக்கணக்கான தமிழர்களின் கடவுளான முருகனே பழனியில் கோவணத்துடன் தான் காட்சியளிக்கிறார். பிறகு வேட்டி எப்படி தமிழர்களின் ஆடையாகும். நியாயமாகக் கோவணம்தானே தமிழர்களின் ஆடையாக இருக்க முடியும்? பழனி முருகன் ஆடையாவது ‘கோவணம்’ என்ற அளவிலாவது இருக்கிறது. ஆதித்தமிழர்கள் - சங்க காலத் தமிழர்கள் இலை, தழைகளையும், மலர்களையும் தான் ஆடைகளாக அணிந்து வாழ்ந்தார்கள் என சங்க இலக்கியங்களான குறிஞ்சிப்பாட்டும், நற்றிணையும் (பாடல் எண் 204, 390) தெளிவாக விளக்குகின்றன.
அப்படியானால் தமிழர்களின் பாரம்பரியத்தை மீட்கப் போராடுபவர்கள் நியாயமாக எந்த ஆடைக்காகப் போராவேண்டும்? கோவணத்தை மீட்கப் போராட வேண்டும். இலை, தழைகளை, மலர்களை ஆடையாக அணியத் தொடங்க வேண்டும்.
குறிஞ்சிப்பாட்டு, நற்றிணை காலத்துக்கு முந்தைய தமிழன் நிச்சயமாக நிர்வாணமாகத்தான் வாழ்ந்திருப்பான். தமிழன் மட்டுமல்ல; உலகில் உள்ள அனைத்து இனங்களும் அவ்வாறு நிர்வாணக் கோலத்திலிருந்து படிப்படியாக, இலை தழைகள் - கோவணம் - வேட்டி போன்ற உடைகள் - தையல் ஊசியும், நூலும் வந்தபிறகு தைக்கப்பட்ட ஆடைகள் - தையல் இயந்திரம் வந்தபிறகு இன்றைய நவீன ஆடைகள் - பின்னலாடைகள் என்று தான் முன்னேறியிருக்க முடியும்.
இந்த ஆடைப் பரிணாம வளர்ச்சியில் பல்வேறு நிலைகளைக் கடந்து வந்திருப்போம். இவற்றில் ஏதோ ஒரு நிலையைப் பிடித்துக்கொண்டு அதுதான் எமது பாராம்பரியம், எமது அடையாளம் என்று கூறுவது உலக அறிவு அற்றவர்களின் செயல் அல்லது ஏதோ ஒரு சுயநலப் பின்னணி உள்ளது என்று பொருள்.
தேசிய இன அடையாள வியாபாரம்
வணிகர்களின் வியாபார வெறியே, வேட்டைச் சிந்தனையே ‘தேசிய இனம்’ என்ற ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கியது என்பதைச் சில தேசிய இனங்களின் போராட்டங்களை வைத்துப் புரிந்துகொள்ள முடியும். இன்னும் சில நாடுகளில் ‘தேசியஇனம்’ என்ற கருத்தாக்கத்தைப் பெரு வணிகர்கள் தமது வணிகத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதையும் பார்க்கலாம். இந்த வேட்டிப்பாரம்பரிய மீட்பு, சர்வதேச வேட்டி தினம் ஆகியவற்றிலிருந்து அவற்றைத் தெளிவாகக் காணலாம்.
திருப்பூர் ராம்ராஜ் வேட்டிகளின் மிகப்பெரிய அளவிலான விற்பனை மய்யங்கள் பெங்களூரிலும், ஹைதராபாத்திலும், கேரளாவில் சில மாவட்டங்களிலும் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன. தமிழ்நாட்டில் வசிக்கும் கன்னட நடிகர் அர்ஜூன் ராம்ராஜ் நிறுவனத்தின் கர்நாடக விளம்பரத் தூதுவராக உள்ளார். கேரளாவில் நடிகர் ஜெயராம் விளம்பரத் தூதுவர். இந்த நிறுவனத்தினர், கர்நாடகாவில் ‘தமிழர்களின் பாரம்பரியம் வேட்டி’ என்று சொல்லியா விளம்பரம் செய்வார்கள்? நிச்சயம் முடியாது. ‘கன்னடர்களின் பாரம்பரியம்’ என்று சொல்லித்தான் விளம்பரம் நடக்கிறது. அதுபோல ஆந்திரா, கேரளாவிலும் அந்தந்த தேசிய இனத்தின் பாரம்பரியம் என்றுதான் விளம்பரப்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் உலக வேட்டி தினத்தைப் பெரும்பொருட்செலவில் விளம்பரம் செய்து வருகிறார்கள். ‘வெற்றித்தமிழர் பேரவை’ என்ற பெயரில் ஒரு அமைப்பையும் இயக்கி வருகிறார்கள். அதேசமயம் மிகப்பெரும் சந்தையான வட மாநில மார்க்கெட்டைக் குறிவைத்து - அகில இந்திய அளவில் பிரபலமாக உள்ள தமிழ்நாட்டுப் பார்ப்பனரான கிரிக்கெட் வீரர் அஸ்வின் இரவிச்சந்திரனைத் தனது ப்ராண்ட் அம்பாசிடராக அறிவித்துள்ளார்கள்.
துணிகளை வாங்க வைப்பதற்கு தேசியஇனம், பாரம்பரியம், வேட்டிதினம் என கவர்ச்சி விளம்பரங்கள் வெளியிடும் அதேநேரத்தில் இந்திய தேசிய முதலாளியாக மாற வேண்டுமானால் இந்து மத ஆதிக்கவாதிகளுடன் அனுசரித்துப் போக வேண்டுமல்லவா? இந்த நிறுவனத்தின் தலைவர் தான் பொள்ளாச்சி அறிவுத்திருக்கோவிலின் அறங்காவலர். வேதாத்ரி மகரிஷியின் உலக சமுதாய சேவா சங்கத்தின் அகில உலகத் துணைத்தலைவர். இந்தியாவில் 22 பல்கலைக்கழகங்களில் யோகாவை ஒரு பாடமாக மாற்றிய அமைப்பு இது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு வணிகமோ, அரசியல் இயக்கமோ வளரவேண்டுமென்றால் அந்த வணிகம் இந்துமத அடிப்படைவாதிகளோடு நெருங்க வேண்டும். அந்த அரசியல் கட்சி பார்ப்பன அதிகார மய்யங்களோடு அனுசரித்துப் போகவேண்டும். இது அடிப்படை அடிமை விதி. அதைப் புரிந்துகொண்டது இந்நிறுவனம்.
மேலும், கோவில்களில் ஆடைக்கட்டுப்பாடு என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அடுத்த சில நாட்களில் ‘வேட்டி அணிந்து கோவிலுக்குச் செல்லும் கலாச்சாரத்தைச் செயலாக்கிய இந்து அறநிலையத் துறைக்குப் பாராட்டு’ என்று பல இலட்சம் செலவழித்து விளம்பரம் வெளிவருகிறது.
2014 ல் கிரிக்கெட் க்ளப்பில் வேட்டிக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய உடைக்குத் தடையா? என தமிழகக் கட்சிகள் கொந்தளிக்கின்றன. தமிழக அரசு வேட்டிக்கு அனுமதி வழங்குகிறது. அடுத்த சில நாட்களில், எம்.சி.ஆர் என்ற வேட்டி தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரும் பொருட்செலவில் தொலைக்காட்சி விளம்பரங்களை வெளியிடுகிறது. இந்த எம்.சி.ஆர் நிறுவனம் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மலையாளிகளால் நடத்தப்படும் நிறுவனம் ஆகும்.
இது ஏதோ ஒரிரு நிறுவனங்களைப் பற்றிய தகவல்கள் அல்ல. அகில இந்திய அளவில் வெற்றிபெற எண்ணும் எந்தத் தொழிலதிபராக இருந்தாலும் இந்த அணுகுமுறைகளைக் கடைபிடித்துத்தான் ஆகவேண்டும். அது பொள்ளாச்சி மகாலிங்கமாக இருந்தாலும் சரி, முருகப்பா குழுமமாக இருந்தாலும் சரி. இதுதான் நடைமுறை.
ஜீன்ஸ், லெகின்ஸ், டிசர்ட் வணிகத்திலும் தேசிய இனம் போன்ற ஏதோ ஒரு கருத்தாக்கத்தை முன்வைத்து வியாபாரம் நடக்கவே செய்யும். நம்மைப் பொறுத்தவரை அந்த வணிகங்களுக்குப் பின்னால் நம்மை இழிவு படுத்துகிற - நம்மை அடிமையாக வைத்துள்ள இந்து மதத்தின் பின்னணி இருக்கக் கூடாது.
தோழர் பெரியார் விரும்பிய ஆடைமுறை
அரசியலில் பல்வேறு தளங்களில் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாட்டை உருவாக்கியவர் பெரியார். பண்பாட்டுத் தளத்தில் இந்து மதத்திற்கும் தமிழர்களுக்கும் பெரும் வேறுபாட்டையும், வளர்ச்சி நோக்கிலான பண்பாட்டையும் முன்வைத்தவர் பெரியார். ஆடைகளிலும் இந்து மதத்திற்கு எதிரான ஒரு முறையை அறிவிக்கிறார்.
“4 முளத்தில் ஓரம் இரண்டையும் சேர்த்து மூட்டி தைத்ததாக எந்த வர்ணம் உள்ள துணியாயிருந்தாலும் அதை இடுப்புக்கும், ஒரு முக்கால் கை சட்டையே மேலுக்கும் உடுக்கும் படியான மாதிரியை பொது உடையாக ஆக்கலாம்.” - தோழர் பெரியர் 09.11.1930 குடிஅரசு
சுருக்கமாகச் சொல்வதென்றால், கைலி தான் பெரியர் விரும்பிய ஆடையாக உள்ளது. ஆனால் இன்றும் பல பெரியார் தொண்டர்கள் வேட்டி, சேலைகளைக் காப்பாற்றத் துடிப்பதுதான் விந்தையாக இருக்கிறது. வேட்டியையோ, சேலையையோ தொடர்ந்து அணிந்து, பழக்கப்பட்டவர்களுக்கு அதுவே வசதியான உடையாக இருக்கும். பல பகுத்தறிவாளர்கள் அவற்றைத் தொடர்ந்து அணிந்ததால், ‘அணிவதற்குவசதி’என்ற அடிப்படையில் அணிகிறோம் என விளக்கம் அளிக்கிறார்கள்.
நமது இளமைப்பருவத்திலிருந்து அதிகப்பட்சம் 50 வருடம் நாம் அணிந்து பழகிய வேட்டி, சேலையை நாம் விட முடியவில்லை. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாகத் திணிக்கப்பட்டு வரும் ஜாதியையும், மதத்தையும் விட்டுவிட வேண்டுமென மக்களிடம் பரப்புரை செய்கிறோம். சிறு மாற்றத்தைச் செய்துகொள்ளக்கூட நாம் தயாராகாமல், மக்களைத் திருத்த நினைப்பது சரியான அணுகுமுறை அல்ல.
ஃபேண்ட், பெர்முடாஸ், கைலி, லெகின்ஸ், ஜீன்ஸ், டிசர்ட் அணிவதை வசதியாகவும், வழக்கமாகவும் கொண்டிருக்கும் பல பெரியார் இயக்கத் தோழர்கள், பொதுவுடைமைத் தோழர்கள், தலித் இயக்கத் தோழர்கள் தங்களது திருமணம், பொங்கல், இல்லத்தின் முக்கிய விழா நாட்களில் வேட்டி, சேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை அணிந்து வருவது, சமுதாயத்தின் வளர்ச்சி நோக்கிய மாற்றத்துக்கு எதிரான செயலாகும். இந்துத்துவப் பொதுப்புத்தியை வளர்க்கும் போக்கு ஆகும்.
இந்தியாவுக்கும், இந்து மதத்திற்கும் எதிரான உடைகள் என்ற பொருளில்தான் பேண்ட், ஜீன்ஸ், லெகின்ஸ், டாப்ஸ், டிசர்ட் போன்ற ஆடைகள் தடைசெய்யப்படுகின்றன. இந்தியாவையும், இந்து மதத்தையும் எதிர்ப்பவர்கள் இந்த நேரத்தில் இந்துச் சமூகத்தின் பொதுப்புத்தியை உடைப்பதைக் கடமையாகக் கருத வேண்டும். நாமும் சமுதாயம் செல்லும் திசையிலேயே பயணிக்கக்கூடாது.
வேத, இந்துமதப் பண்பாடான சேலை, தாவணி, வேட்டி மயக்கங்களிலிருந்து விடுபடுவோம்! ஆண், பெண், அனைத்து பாலினமும் அணிவதற்கு வசதியான - உழைக்கும் எளியவர்களின் உடைகளான - கைலி, பெர்முடாஸ், ஜீன்ஸ், டிசர்ட், லெகின்ஸ், டாப்ஸ், லோயர்ஸ், ட்ராக் சூட்ஸ் அணிவோம்! அதிலும் பெரும் ப்ராண்டட் ஆடைகளைத் தவிர்த்து எளிய தொழில்முனைவோரின் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து அணிவோம்!
(காட்டாறு, 2016 ஜனவரி இதழில் வெளியான கட்டுரை)
- அதிஅசுரன்